மாற்று மணலுக்கும் தட்டுப்பாடா?

மாற்று மணலுக்கும் தட்டுப்பாடா?
Updated on
2 min read

ஆற்று மணல் தட்டுப்பாடு சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஏப்ரலில் திடீரென ஒன்பது மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆற்று மணல் தட்டுப்பாடு மிக அதிகமானது; விலையும் உச்சத்தைத் தொட்டது. அதிக விலை கொடுத்து ஆற்று மணல் வாங்கத் தயாராக இருந்தாலும் மணல் கிடைக்காத நிலை. இந்தப் பின்னணியில் வேறு வழியில்லாமல் ‘எம்-சாண்ட்’ என அழைக்கப்படும் செயற்கை மணலுக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் மூன்று வருடங்களில் ஆற்றில் மணல் அள்ளுவது நிறுத்தப்படும் என்றும் ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் பயன்படுத்த வேண்டும் என்றும் மணல் தட்டுப்பாடு குறித்துப் பேசும்போது கூறினார். அவரது கூற்றின்படி எம்-சாண்டின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆற்று மணலின் அதிகமாகியபோது என்னவெல்லாம் நடந்ததோ அதுவெல்லாம் இப்போது மாற்று மணலுக்கும் நடக்கிறது. மணல் தட்டுப்பாட்டால் எம்.சாண்டில் விலையும் விண்ணைத் தொட்டு நிற்கிறது. ஒரு கியூபிக் மீட்டருக்கு 30 ரூபாய்க்கு விற்ற எம்-சாண்டின் விலை இன்றும் இரு மடங்காகக் கூடியிருக்கிறது.

ஆற்று மணல் கிடைத்துக்கொண்டிருந்த காலத்திலேயே எம்-சாண்டும் சந்தையில் கிடைத்தது. ஆனால் பயன்பாடு குறைவாக இருந்தது. ஏனெனில் எம்-சாண்ட் தரம் குறைவான என்ற எண்ணம் பரவலாக இருந்தது. அதே சமயத்தில் எம்-சாண்ட் தயாரிப்பு ஆலைகளின் செலவுகள் ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது அதிகம். ஆற்று மணல் இயற்கையாகக் கிடைக்கக்கூடியது. ஆனால் எம்-சாண்ட் எனப்படும் செயற்கை மணல் குவாரிகளிலிருந்து கருங்கற்களை எடுத்து உடைக்கும் இயந்திரத்தில் இட்டுத் தயாரிக்கப்படுகிறது. குவாரிகளின் அருகிலேயே எம்-சாண்ட் ஆலை இருக்க வேண்டும். மேலும் உடைப்பதற்குண்டான மின்சாரச் செலவு, வேலையாட்கள் கூலி எல்லாவற்றையும் சேர்த்து சந்தையில் லாப ஈட்ட வேண்டும். அதேசமயம் ஆற்று மணலின் சந்தை மதிப்பைவிட அதிகமாக எம்-சாண்டை விற்க முடியாது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விலைக்குக் கிடைத்தது. அதனால் கட்டுநர்கள் ஆற்று மணலையே விரும்பி வாங்கினர்.

இப்போது ஆற்று மணல் கிடைப்பது குறைந்துவிட்ட சூழ்நிலையில் எம்-சாண்ட் பயன்படுத்துவது பரவலாகியிருக்கிறது. விலையும் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. “எம்-சாண்ட் நமது மாநிலத்தில் இப்போதுதன் பரவலான பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. ஆனால் வடமாநிலங்களில் முன்பே இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எம்-சாண்ட் கட்டுமானத்துக்குத் தரமானதுதான். ஆற்று மணலைப் போல், சொல்லப்போனால் அதைக் காட்டிலும் கட்டுமானத்துக்கு வலுச் சேர்க்கக்கூடியது இது” என்கிறார் எம்-சாண்ட் தாயாரிப்பாளரான அசோக்குமார்.

எம்-சாண்ட் ஆலைகளுக்கான விதிமுறை

எம்-சாண்ட் இப்போது பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆற்று மணலைப் போல் இப்போது எம்-சாண்ட் குவாரிகளிலும் லாரிகள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. தேவைகள் அதிகரித்துள்ள அள்வு எம்-சாண்ட் குவாரிகள் அதிகரிக்கவில்லை. அதனால் எம்-சாண்டுக்கும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. “எம்-சாண்ட் கட்டுமானத்துக்குத் தரமானதுதான். அரசும் அதை முன்னிறுத்துகிறது. ஆனால் அதில் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அசிரன் கடமை” என்கிறார் ரூபி பில்டர்ஸ் நிறுவனர் ரூபி மனோகரன்.

எம்-சாண்ட் தயாரிப்பு ஆலைகள் அமைப்பதில் நடைமுறையிலிருக்கும் விதிமுறைதான் எம்-சாண்ட் தட்டுப்பாட்டுக்கான முக்கியமான பிரச்சினை என அந்தத் துறை சார்ந்தவர்காள் கூறுகிறார்கள். “சென்னையில் இதுவரை சுமார் நூறு எம்-சாண்ட் ஆலைகள்தான் இருக்கும். எம்-சாண்ட் ஆலைகளைப் பொருத்தமட்டில் அது கற்கள் கிடைக்கும் இடத்துக்கு அருகில்தான் அமைத்தால் அதை நடத்துவது எளிது. ஆனால் எம்-சாண்ட் ஆலை விதிமுறைகளின்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு ஆலைதான் இருக்க வேண்டும். உதாரணமாக திரிசூலம் பகுதிகளில்தான் முன்பு அதிகமான கற்கள் கிடத்தன. அதனால் அந்தப் பகுதியில்தான் ஆலைகள் அதிகமாக இருந்தன. ஆனால் இப்போது சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல காரணங்களால் அந்த ஆலைகள் இடம்பெயர்ந்துவிட்டன. ஆலைகள் இப்போதுள்ளதிலிருந்து இரு மடங்காக உயர்ந்தால்தான் தட்டுப்பாடு நீங்கும். விலையும் கட்டுக்குள் வரும்” எனச் சொல்கிறார் அசோக்குமார்.

ஒரு யூனிட்டுக்கு ரூ.3,000, 3,500 வரை விற்றுவந்த எம்-சாண்ட் இந்தத் தட்டுப்பாட்டால் ரூ.6,000 வரை விற்கப்படுகிறது. எம்-சாண்ட் குவாரிகளில் மணல் அள்ளுவதற்காக லாரிகள் நாட்கணக்கில் காத்திருக்கின்றன. இதனால் லாரிகளின் நாள் வாடகை, ஓட்டுநர்களின் சம்பளம் எல்லாம் கூடுகிறது. இது எல்லாம் எம்-சாண்ட் மணல் விலையுடன் சேர்த்துக்கொள்ளப்படுவதுதான் இந்த விலையேற்றத்துக்கான காரணம் என்கிறார் அசோக்குமார்.

அதிகமாகும் கலப்படம்

எம்-சாண்ட் தட்டுப்பாட்டால் கலப்படமும் அதிகரித்துள்ளது. எம்-சாண்டில் எவ்வளவு தூசிகள் அனுமதிக்கப்பட்டது என்பதற்கான திட்டமிட்ட வரைமுறைகள் இல்லை. அந்த அளவை தேவையைப் பொறுத்து தயாரிப்பாளர்கள் கூட்டுவதாகக் குற்றச்சாட்டு உண்டு. “ஆற்று மணலுக்குத் தட்டுப்பாடு வந்ததும், அதன் விலை கூடியது; கலப்படமும் அதிகரித்தது. அதே நிலை எம்-சாண்டுக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் எம்-சாண்டின் தரத்தை முறைப்படுத்த வேண்டியதும் அவசியம்” என்கிறார் மனோகரன். “தூசி 7 சதவீதம் அளவு இருக்கலாம்” எனச் சொல்லும் அசோக்குமார், “ஆனால் இப்போது 30 சதவீதம் அளவு தூசியைச் சேர்க்கிறார்கள். இதனால் எம்-சாண்டின் தரம் பாதிக்கப்படும். இதைப் பயன்படுத்திக் கட்டும் கட்டிடம் பலவீனமாக வாய்ப்பு இருக்கிறது” என எச்சரிக்கிறார்.

இப்போது சென்னைக்கு அருகில் மதூர், எருமையூர், நல்லம்பாக்கம் போன்ற பகுதிகளில் எம்-சாண்ட் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இது இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும் .

மேலும் எம்-சாண்ட் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான திட்டமிட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆலை என்பதல்லாமல் கல் குவாரிகளுக்கு அருகில் ஒரு தொழில்நுட்ப பூங்கா போல எம்-சாண்ட் ஆலைகள் அமைய அரசு வழிவகுக்க வேண்டும். எம்-சாண்ட் தட்டும்பாடு நீங்கி தரமும் மேம்பட கட்டுமானத் துறையினரின் இந்த மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்பது அத்துறையினரின் எதிர்பார்ப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in