கட்டிடங்களைப் பாதுகாக்கும் வேதிப்பொருள்கள்

கட்டிடங்களைப் பாதுகாக்கும் வேதிப்பொருள்கள்
Updated on
2 min read

பழங்காலத்தில் வீடுகளையும் பிற கட்டிடங்களையும் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே கட்டிவந்தோம். ஆனால், மெல்ல மெல்ல நமது கட்டுமானங்களில் வேதிப்பொருட்கள் இடம்பிடிக்கத் தொடங்கின. இந்த வேதிப் பொருட்களில் பயன்பாடு அதிகமானபோது நமது பாரம்பரிய கட்டுமானம் பற்றிய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது.

ஆகவே, இப்போது நமது சூழலை ஒட்டிய கட்டுமானங்களே நமக்குத் தேவையானவை என்ற விழிப்புணர்வு பரவிவருகிறது.. ஆனாலும், முழுவதும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் நமது கட்டுமானங்கள் நிறைவுபெறுவதில்லை என்பதுதான் உண்மை. நவீனக் கட்டுமானங்களில் அதுவும் குடியிருப்பு சாராத கட்டுமானங்களில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகும் வேதிப்பொருட்களில் கட்டுமான வேதிப் பொருட்களுக்கு முக்கியமான இடமிருக்கிறது என்கிறது ஆய்வு ஒன்று. உலக சிமெண்ட் உற்பத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஐந்து சதவீதமாம். உலக அளவில் நகரமயமாக்கம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அதே போல் பெரிய நகரங்களின் உருவாக்கமும் அதிகரித்துக் கொண்டேபோகிறது. இத்தகைய கட்டிடங்களில் பெருமளவில் கான்கிரீட்டே பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் பயன்பாட்டின் காரணமாக வேதிப்பொருள்கள் தேவையாயிருக்கின்றன என்கிறார்கள் கட்டிடத் துறையில் பணிபுரிபவர்கள் கான்கிரீட்டின் உறுதித் தன்மையை அதிகரிக்க வேதிப்பொருட்கள் துணையிருக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.

பொதுவாக முன்னர் ஆயிரம் கிலோ எடையைத் தாங்குவதற்காக நூறு செ.மீ. விட்டம் கொண்ட தூண்களை அமைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இப்போது நூறு செ.மீ. விட்டம் கொண்ட தூண்களுக்குப் பதிலாக வெறும் பத்து செ.மீ. விட்டம் கொண்ட தூண்களே போதுமானவையாக உள்ளன என்கிறார்கள் கட்டிடத் துறைசார் வல்லுநர்கள். இதைச் சாத்தியமாக்கியதில் வேதிப்பொருட்கள் முக்கிய இடம்வகிக்கின்றன.

இப்படியான தொழில்நுட்பக் காரணங்களால் புதிதாக உருவாகிவரும் கட்டுமானங்களில் தவிர்க்க இயலாதவையாக வேதிப்பொருள்கள் உள்ளன. வேதிப்பொருள்களின் பயன்பாடு வானளாவிய உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கும், நீரால் உருவாகும் ஆபத்துகளைத் தவிர்க்கவும் பெருமளவில் துணைபுரிகின்றன என்கிறார்கள் துணைசார் வல்லுநர்கள்.

கட்டுமான உருவாக்கத்தின்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சில கட்டிடங்களில் எளிதில் நீர்க்கசிவு உருவாக வாய்ப்புள்ளது. இந்த நீர்க்கசிவைத் தவிர்க்கும் பொருட்டு கட்டுமானத்தின் போது சில வேதிப்பொருள்கள் கலக்கப்பட்டு கட்டிடங்களைக் கட்டி எழுப்புகிறார்கள். ஆகவே, நீர்க்கசிவால் கட்டிடம் பாழ்பட்டுப்போகாமல் கட்டிடங்களைப் பாதுகாப்பதில் சில வேதிப்பொருட்கள் உதவுகின்றன என்பதே யதார்த்தம். அதே போல் இப்போது பல கட்டிடங்களை விரைந்து முடிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே அவற்றை கட்டியெழுப்பத் தயார்நிலை கான்கிரீட் பயன்படுகிறது. இந்தத் தயார்நிலை கான்கிரீட்டின் இறுகும் தன்மையை நமக்கு ஏற்ற வகையில் சீரமைத்துக்கொள்வதற்கும் சில வேதிப்பொருட்கள் உதவுகின்றன.

புதிய கட்டிடடங்களை உருவாக்குவது போலவே பழைய கட்டிடங்களைப் புனரமைப்புச் செய்வதும் கட்டுமானத் துறை சார்ந்த தொழிலே. அப்படிப் பழைய கட்டிடங்களைப் புனரமைப்பு செய்யும்போதும் வேதிப்பொருட்களின் உதவி அத்துறையினருக்கு அவசியமாகவே உள்ளது. ஏனெனில் இத்தகைய வேதிப்பொருட்களே புனரமைப்புப் பணிகளை எளிதாக்க உதவுகிறதாம்.

கான்கிரீட் கலவையை உருவாக்கவும் தரைத் தளங்கள் அமைக்கவும், புனரமைப்புப் பணிகளுக்காகவும், நீர்க்கசிவு தடுப்பு உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் கட்டுமானத் துறையில் வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கான்கிரீட் கலவைக்கான வேதிப்பொருட்களே கட்டுமான வேதிப்பொருட்கள் சந்தையின் பிரதான பங்களிப்பை வழங்குகின்றன. இதற்கு அடுத்த இடத்தில் தரைத் தளங்கள், நீர்க்கசிவு போன்றவற்றுக்கான வேதிப்பொருட்கள் வருகின்றன. இதேபோல் கட்டிடடங்களில் இணைப்புகளுக்காகப் பயன்படும் பசை போன்ற செயல்பாடுகளில் பங்குவகிக்கும் வேதிப்பொருட்களும் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பயன்படுகின்றன.

கட்டுமானங்களின் போது வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் கட்டுமானச் செலவானது இரண்டு முதல் மூன்று சதவீதம் உயர்த்திவிடுகிறது என்கிறார்கள். ஆனாலும் அவற்றால் கிடைக்கும் சாதகமான அம்சங்களைக் கணக்கில்கொண்டு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்து கிறார்கள் கட்டுமானத் துறையில் ஈடுபடுவோர்கள். கான்கிரீட், தண்ணீர் போன்றவற்றின் தேவையைக் குறைக்கக்கூடச் சில வேதிப்பொருட்கள் பயன்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள். அதே போல் கான்கிரீட்டின் தரத்தை உயர்த்தவும், கான்கிரீட்டின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் வேதிப்பொருட்கள் உதவுகின்றன என்கிறார்கள்.

கட்டிடங்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், இயற்கை ஆபத்துகளிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்கவும்கூட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். இப்படிப் பல பலவகைகளில் வேதிப்பொருட்கள் கட்டுமானங் களின்போது கைகொடுக்கத்தான் செய்கின்றன. அதே நேரத்தில் வேதிப்பொருட்கள் பயன்பாடு விஷயத்தில் முறையான வழிகாட்டுதல்கள் தேவையான அளவுக்கு உள்ளனவா என்பது கேள்விக்குறியே.

தொழில்நுட்ப அறிவுடன் பணியாற்றும் முறையான தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும்போது, விபத்துகளை ஏற்படுத்தாமல் வேதிப்பொருள்களை அவர்கள் முறையாகப் பயன்படுத்துவார்கள். இத்தகைய திறமையான பணியாளர்கள் கட்டுமானத் துறையில் அதிக அளவில் ஈடுபடும்சூழலில் வேதிப்பொருட்களின் பயன்பாடுகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்கிறார்கள் கட்டிடக் கலை நிபுணர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in