

வீட்டைப் பராமரிப்பதற்காக வீட்டுக்கு வண்ணமடிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வண்ணம் அடிப்பது வழக்கமாக இருந்தது. இப்போது மே மாதக் கோடை விடுமுறையை ஓட்டி வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பழக்கம் வந்துள்ளது. சரி, வீட்டைப் பராமரிக்க வீட்டுக்கு வண்ணமடிக்கிறோம். ஊரைப் பராமரிக்க ஊருக்கே வண்ணமடிக்கலாமா?
அது சாத்தியமா என்னும் கேள்வி நமக்குள் எழும். ஆனால் இந்தோனேசியாவில் ஒரு கிராமத்தினர் தங்கள் ஊருக்கே வண்ணமடித்துள்ளனர். இதன் மூலம் தங்கள் ஊரின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளனர். இந்தோனேசியாவின் வட கடற்கரை நகரமான செமராங்குக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் கபூங் பிலாங்கி. சிறு நதி ஓடும் அழகிய கிராமமான கபூங் பிலாங்கியின் வீடுகள் மிக நெருக்கடியானவை. அடுத்தடுத்து என வீடுகளின் தொகுப்பாக இந்தப் பகுதி உள்ளது. எல்லாமும் சிறு சிறு வீடுகள். நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சிமெண்ட் பூச்சு இல்லாத வீடுகள் காணக் கிடைக்கும். இந்தக் காட்சிகள் ஒருவிதமான சோம்பல் தன்மையை சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல அந்தக் கிராமத்தினருக்கே உண்டாக்கியிருக்கிறது.
இந்தோனேசியா சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் வீடு. ஆக சுற்றுலாப் பயணிகளையும் கவர வேண்டும், கிராமத்தையும் புனரமைக்க வேண்டும் என்ற இரு மாங்கனிகளை ஒரே கல்லில் அடித்திருக்கிறார்கள் அந்தக் கிராமத்தினர். மேலும் இதனால் அவர்களது பொருளாதாரமும் முன்னேற்றம் கண்டிருக்கிறது.
ஸ்லமட் விடொடொ என்னும் 54 வயது ஆசிரியர்தான் இதற்கான யோசனையைக் கிராம சபையின் முன்வைத்துள்ளார். இதே போல் வண்ணமடிக்கப்பட்ட கபூங் வர்னா , கபூங் ட்ரிடி போன்ற கிராமங்களைச் சென்று பார்த்ததால் அவருக்கு இந்த யோசனை தோன்றியுள்ளது. பிறகு இந்த யோசனையைச் செயல்படுத்த அரசு உதவியுள்ளது. உள்ளாட்சித் துறையும் இந்தோனேசியக் கட்டுமானக் கழகமும் இணைந்து இந்த வண்ணமடிக்கும் திட்டத்துக்கான நிதியை வழங்கியுள்ளன. கிட்டதட்ட 232 வீடுகளுக்கு இந்த வணணம் அடிக்கப்பட்டுள்ளது.
வானவில்லில் உள்ள ஏழு வண்ணங்களையும் வண்ணமடிக்கப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் முழுவதும் ஒரே வண்ணமாக அல்லாமல் வானவில் தீற்றல் போலவே முழுக் கிராமம் மீது வானவிலை விரித்துள்ளனர். அந்தக் கிராமம் முன்பு எப்படி இருந்தது இப்போது இந்த வண்ணத்தால் எப்படி உருமாறியுள்ளது என்பதைக் கண்டவட் வியந்துவருகின்றனர். வண்ணங்கள் மட்டுமல்லாது மீன்கள், பறவைகள் போன்ற உருவங்களையும் ஆங்காங்கே வரைந்துள்ளனர்.
இப்போது இந்தக் கிராமத்துக்கு இந்த வண்ணத்தைக் காணவே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். கிராமத்தினருக்கும் பெருமையாக இருக்கிறது. மேலும் இந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரமும் கூடியுள்ளது. இந்த வண்ணமயமான கிராமத்தை இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் வழியாகவும் இந்தக் கிராமம் புகழ்பெற்றுவருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்தக் கிராமத்தை ‘வானவில் கிராமம்’ என்கிறார்கள்.