

சென்னைக்கு அருகிலுள்ள மவுலிவாக்கத்தின் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, பலர் இறந்து போனார்கள். இது நடந்தது 2014-ல். சமீபத்தில்தான் அதற்கு இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மவுலிவாக்கம் விபத்து குறித்த செய்திகள் நாளேடுகளில் வெளிவந்ததைப் பார்க்க முடிந்தது. அவற்றுள் ஒன்று வங்கிக் கடன் மீட்புத் தீர்பாணையத்தைப் (Recovery Tribunal) பற்றியது.
மவுலிவாக்கத்தில் கட்டிடங்கள் எழும்புகிறபோது 22 பேர் கடன் வாங்கியுள்ளார்கள். அவர்களுடைய வாதம், “கிடைக்காத வீட்டுக்கு தவணைத் தொகையை ஏன் செலுத்த வேண்டும்?” என்பதே. தவணைத் தொகையைக் கட்டக் கோரிப் பல கடிதங்களை அனுப்பிப் பலன் இல்லாததால்தான், தீர்ப்பாணையத்தை வங்கி அணுகியிருக்கிறது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. வங்கியின் செயல் முறையானதுதானா?
வங்கி விதிகளின்படியும் சட்டப்படியும் வங்கியின் நடவடிக்கை சரியானதே, அதேசமயம், பணத்தை எவ்விதம் வசூல் செய்ய இயலும் என்பதும் ஒரு பெரிய கேள்விக் குறி. ஏனெனில், கடன் வாங்கியவர்கள் வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகையை வைத்துதான் கடனை அடைக்கலாமென்று எண்ணியிருப்பார்கள். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே!
2014-ல் இந்த நிகழ்வு நிகழ்ந்ததும் வீடு கட்டத் தொடங்கியவர்கள் அனைவரும் ஒப்பந்தக்காரர் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவே இல்லை. எப்போது குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் ஒப்பந்தக்காரரிடம் மீட்டு, எப்போது கடனைத் திருப்பித் தருவார்கள்?
வங்கி மேலாளர் அனுபவம் மிகுந்தவர் ஒருவரிடம் விசாரித்தேன். “காலி மனை உள்ளதே? ஒவ்வொரு கடன்தாரருக்கும் Undived Share இருக்குமே? அதைக் கொண்டு முயற்சி செய்து பார்க்க வேண்டியதுதான் என்றார். இது ஏட்டளவில் சரியாகத் தோன்றினாலும் நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. கட்டிடமே எழுப்ப சரியாக இல்லாத காலி மனையில், யாருமே பெட்டிக் கடை வைக்கக் கூடத் தயாராக மாட்டார்கள். ஆக, வங்கிக்குப் பாக்கியுள்ள கடன் பூராவும் தள்ளுபடி செய்ய வேண்டியதுதானா?
ஓய்வுபெற்ற காப்பீட்டுத் துறை அதிகாரியிடம் இது பற்றிக் கேட்டேன்: “வீடு முழுக்கக் கட்டி முடிந்த பின்புதான் இன்சூரன்ஸ் வருகிறது. அதுவும் இயற்கைச் சீற்றங்களான நெருப்பு, வெள்ளம், புயல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கத்தான். பாதி கட்டிக் கொண்டிருக்கும்போதே இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அது பொருந்தாது” என்றார்.
கூடுதலாகத் தகவல் ஒன்றை அளித்தார்: “இப்போதெல்லாம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல வகை புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். உதாரணம், திருமணக் காப்பீடு, அது போல அரைகுறை கட்டிடத்துக்கும் (House in Progress) காப்பீடு இருக்குமோ என்னவோ? ஆனால் இங்கு நடந்தது, மனிதர்கள் தவறினால் ஏற்பட்டது. யாருமே தர மாட்டார்கள்.
சரி, மேலோட்டமாக எவ்வளவு தொகையை வங்கிகள் கடன் வழங்கியிருக்கக் கூடும் என்று பார்க்கலாம். தளமொன்றின் கிரய விலை ரூபாய் 25 லட்சம் என்று வைத்துக் கொண்டால், 20 லட்சம் வரை வங்கிகள் கடன் தரலாம். அதுவும் ஒவ்வொரு கட்டமாகத்தான், அஸ்திவாரம், உத்திரம் என்று. இந்த இடத்தில் ரூபாய் 10 லட்சம் வரை வங்கிகள் கடனைத் தந்திருப்பார்கள். மொத்தம் 22 பேர் என்றும், கிட்டத்தட்ட இரண்டு கோடி ஆகிறது. கடன் வாங்கியவர்கள், “எத்தனையோ கோடி தள்ளுபடி செய்கிறீர்கள். இது போன்ற எதிர்பாராத நிகழ்வுக்குத் தள்ளுபடி தரக் கூடாதா? என்று கேட்கக் கூடும். அவர்கள் கோரிக்கை ஒரு கோணத்தில் நியாயமானதே.
அதே சமயம், கொடுத்த கடனைத் திரும்பப் பெற வங்கிகள் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். கூட்டுக் கடனாளியின் சொத்து, ஏதாவது காலக் கெடு டெபாசிட் என்று பல விதங்களில் முயற்சி செய்வார்கள். தீர்ப்பாணையத்தின் இறுதி முடிவும் இதில் முக்கியம்தான்.
ஆக, வீடு கட்டுகிறவர்கள் மனை, மனையின் தன்மை (பல மாடிக் கட்டிடத்துக்கு இது தாங்குமா?) போன்றவற்றை விசாரித்து ஒப்பந்தக்காரரிடம் சொல்ல வேண்டும். ஏதோ சில சொற்ப சலுகைகளினால் ஏமாறக் கூடாது. வங்கிகளும், வீட்டுக் கடன் வழங்குவதில் இலக்கு ஒன்றையே கவனத்தில் கொண்டு, ‘48 மணி நேரத்துக்குள் லோன் சேங்சன்’ என்றெல்லாம் விரைவு காட்டுவது உசிதமல்ல.