சொத்துப் பிரச்சினை உரிமையியல் பிரச்சினையா?

சொத்துப் பிரச்சினை உரிமையியல் பிரச்சினையா?
Updated on
4 min read

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.

என் மனைவி சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என ஆசைப்பட்டதால் என்னுடைய வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் காசோலை மூலம் அவளுக்கு வழங்கி, அத்தொகையிலிருந்து வீட்டு மனை ஒன்றை மனைவியின் பெயரில் வாங்கினேன். பின்னர் இம்மனையில் ஒரு சிறிய வீட்டைக் கட்டினோம். சில காரணங்களால் ஏற்பட்ட மன வேறுபாட்டால் நாங்கள் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்பிரிவினையைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு சுயநலப் பேர்வழி என் மனைவியின் தங்கை பெயருக்கு என் மனைவியிடத்திலிருந்து பதியப்படாத உயில் ஒன்றை எழுதிப் பெற்றுக்கொண்டான். இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் என் மனைவி நோயால் இறந்துவிட்டார். பின்பு வீட்டுத் தீர்வை மற்றும் மின் விநியோகம் ஆகியவற்றைச் சட்டப்படி எனது பெயருக்கு மாற்றிக்கொண்டேன். இதன் பின்பு மேற்கூறிய உயிலைக் காரணம் காட்டி எனது வீட்டை நான் இல்லாத நேரத்தில் கைப்பற்றிக்கொண்டு எனது ஆளுகைக்குத் தர மறுக்கிறார். மனையின் கிரயப் பத்திரத்தையும் கைப்பற்றியுள்ளார். எனது வீட்டைப் பெறுவதற்கு சட்டபூர்வ ஆலோசனை என்ன?

- சுந்தரம் நாராயணன்.

உங்கள் சொத்து எந்த ஊரில் உள்ளது, உங்கள் மனைவி எந்த ஊரில் வைத்து உயில் எழுதினார், உங்கள் மனைவி எந்தத் தேதியில் காலமானார் ஆகிய விபரங்களை நீங்கள் குறிப்பிடவில்லை. அந்தச் சுயநலப் பேர்வழி உங்கள் மனைவிக்கு அல்லது உங்கள் மனைவியின் தங்கைக்கு என்ன வழியில் உறவு என்கிற விவரத்தையும் நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் மனைவியின் தங்கையின் அனுமதியுடன் அந்தச் சுயநலப் பேர்வழி உங்கள் வீட்டைக் கைப்பற்றி அனுபவித்துவருகிறாரா, இல்லை அவரது அனுமதியும் இன்றி அனுபவித்துவருகிறாரா, எப்போதிருந்து அவ்வாறு அனுபவித்து வருகிறார் என்கிற விவரங்களையும் நீங்கள் குறிப்பிடவில்லை. மேற்குறிப்பிட்டுள்ள விவரங்கள் இருந்தால்தான் உங்களுக்குச் சரியான சட்டபூர்வ ஆலோசனை வழங்க முடியும். எது எவ்வாறாகினும் நீங்கள் உங்கள் ஊரிலிருக்கும் ஒரு நல்ல வழக்கறிஞரை அணுகித் தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் சுவாதீனம் மற்றும் உரிமைப் பத்திரம் ஆகியவற்றைத் திரும்பப் பெற முடியும்.

முதல் மனைவி குழந்தையின்றி இறந்த பிறகு என் கணவர் என்னை மண முடித்தார். என்னைப் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிய அவர், திரும்ப அழைக்கவே இல்லை. அதன் பிறகு நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் உத்தரவானது. எனக்கும் அவருக்கும் விவாகரத்தாகவில்லை என்றும் தீர்ப்பானது. தற்போது என் கணவர் இறந்துவிட்டார். நான் மதச் சடங்கை 40 நாட்களுக்கு என் பெற்றோர் வீட்டில் அனுஷ்டித்து வந்ததைப் பயன்படுத்தி ஒருவர் என் கணவர் வீட்டில் அத்து மீறி நுழைந்து ஆக்கிரமித்துள்ளார். என் கணவரின் மகன் என்று கூறிக்கொள்கிறார். நான் போலீசில் புகார் கொடுத்ததற்கு இதை உரிமையியல் பிரச்சினை என்கின்றனர். சி.ஜே.எம். கோர்ட் ஜீவனாம்ச வழக்குத் தீர்ப்பு மற்றும் அமர்வு நீதிமன்ற சீராய்விலும் என் கணவருக்குக் குழந்தை இல்லை எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளர் தனது பிறப்புச் சான்றிதழில் அவருடைய தந்தை என என் கணவர் பெயர் உள்ளதாகக் கூறுகிறார். ஆனால் அவரது திருமணச் சான்றிதழில் என் கணவர் பெயர் இல்லாமல் அவரது உண்மையான தந்தையின் பெயர்தான் உள்ளது. என் கணவர் இறந்து 5 மாதமாகிவிட்டது. DNA சோதனை நடத்தினால் உண்மை தெரியும். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? தனித்து வாழ்ந்த என் கணவர் இறப்பைச் சந்தேக மரணமாகவும் போலீஸ் விசாரிக்கவில்லை. எனது புகாரையும் ஆரம்பத்தில் விசாரிக்காமல் சி.ஜே.எம். கோர்ட்டு உத்தரவிட்ட பிறகே விசாரித்து, உரிமையியல் பிரச்சினை எனத் தவறாகக் கூறுகின்றனர். என் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? உரிய சட்ட ஆலோசனை வழங்கவும்.

- ரெஜினா பேகம், நாகூர்

உங்கள் பிரச்சினை போலீஸ் கூறுவதுபோல உரிமையியல் பிரச்சினைதான். ஆக்கிரமிப்பாளர் உங்கள் கணவரின் மகனோ மகளோ இல்லை என்று நிரூபிக்க நீங்கள் தகுந்த நீதிமன்றத்தை அணுகி வழக்கு தாக்கல் செய்து, DNA சோதனை நடத்த மனுச் செய்து, அந்த DNA சோதனையில் அவர் உங்கள் கணவரின் மகன் அல்லது மகள் இல்லை என்று தெரிய வந்தால் அந்த நீதிமன்றம் அவர் உங்கள் கணவரின் மகன் அல்லது மகள் இல்லை என்று விளம்புகை செய்து தீர்ப்பு வழங்கும். அவ்வாறு தீர்ப்பு வந்தால் அதன் அடிப்படையில் தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி, உங்கள் கணவருக்கு நீங்கள்தான் ஒரே வாரிசுதாரர் என்றும் உங்கள் கணவர் விட்டுச் சென்ற வீட்டுக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்றும் விளம்புகை பரிகாரம் கோரியும், மேலும் உங்கள் கணவருக்குச் சொந்தமான வீட்டின் சுவாதீனத்தை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து திரும்பப் பெறுவதற்கான உத்தரவைக் கோரியும், வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.

என் பெயர் வேல் முருகன். என் தந்தை தன் சொந்த சம்பாத்தியத்தில் 1960-ம் ஆண்டு என் அம்மாவின் பெயரில் வீடு வாங்கினார். அம்மா 1988-ல் இறந்த பிறகு என் தந்தையின் பெயருக்கு வீடு மாற்றி எழுதப்பட்டது. அவர் 2005-ல் காலமானார். எனக்கு அக்காமார் நால்வர், அண்ணன்கள் இருவர். இப்போது வீட்டைப் பங்காகப் பிரிக்க முடியாததால் எனக்கு என் உடன் பிறந்தவர்களின் பங்கைக் கொடுத்துவிட்டு அந்தப் பங்குக்காகப் பணமாக என்னிடம் இருந்து பெற விரும்புகிறார்கள். இதில் 4 அக்காக்களில் இருவர் இறந்துவிட்டனர். இறந்த அக்காக்களில் ஒருவருக்கு இரு மகன்கள். மற்றொருவருக்கு ஒரு மகன். இவர்கள் எல்லோரும் பெரியவர்கள். இறந்த அக்காவின் பங்கை எப்படி அவர்களின் வாரிசுதாரர்களுக்குப் பிரித்துத் தருவது?

- சி.வேல்முருகன், உத்தமபாளையம்

இறந்துபோன உங்கள் அப்பாவின் அம்மா தற்போது உயிருடன் உள்ளாரா என்றும், இறந்துபோன உங்கள் அக்காமார்கள் இருவரின் கணவர்கள் உயிருடன் உள்ளனரா என்றும் நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் அப்பாவின் சொத்தைப் பொறுத்தவரை (உங்கள் அப்பாவின் அம்மா தற்போது உயிருடன் இல்லை என்று வைத்துக்கொண்டால்) நீங்களும், உங்கள் அக்காமார்கள் 4 பேர் மற்றும் அண்ணன்கள் 2 பேர் ஆகிய 7 பேரும் வாரிசுகள் ஆவீர்கள். உங்கள் உடன் பிறந்த 6 பேருக்கும் மொத்த சொத்து மதிப்பில் தலா 7-ல் ஒரு பங்கை நீங்கள் பணமாகக் கொடுக்க வேண்டும். இறந்துபோன உங்கள் அக்காமார்கள் இருவருக்கும் கணவர்கள் உயிருடன் இல்லை என்று வைத்துக்கொண்டால், இரு மகன்களை வாரிசுகளாக விட்டுச் சென்ற உங்கள் அக்காவின் மகன்கள் இருவருக்கும் தலா 14-ல் ஒரு பங்கும், ஒரு மகனை வாரிசாக விட்டுச் சென்ற உங்கள் அக்காவின் மகனுக்கு 7-ல் ஒரு பங்கும் பணமாக நீங்கள் கொடுக்க வேண்டும். இறந்துபோன உங்கள் அக்காமார்கள் இருவருக்கும் கணவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், இரு மகன்களை வாரிசுகளாக விட்டுச் சென்ற உங்கள் அக்காவின் மகன்கள் மற்றும் கணவர் ஆகிய மூவருக்கும் தலா 21-ல் ஒரு பங்கும், ஒரு மகனை வாரிசாக விட்டுச் சென்ற உங்கள் அக்காவின் மகன் மற்றும் கணவர் ஆகிய இருவருக்கும் தலா 14-ல் ஒரு பங்கும் பணமாக நீங்கள் கொடுக்க வேண்டும்.

என் தந்தைக்கு வயது 78. என் பெற்றோருக்கு ஒரே வாரிசு நான் மட்டுமே, வயது 51. என் தந்தை என்னுடன் வசித்துவருகிறார். எனக்கு மூன்று மகள்கள். வயது முறையே 28, 25, 18. இதில் எனது மூத்த இரு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. குழந்தைகள் உள்ளன. என் தந்தை எப்படி எனக்கு உயில் எழுதி வைப்பது? நான் என் குழந்தைகளுக்கு எப்படி உயில் எழுதுவது?

- பக்தவச்சலம், நெய்வேலி.

உங்கள் தந்தைக்குச் சொந்தமான சொத்து அவரது சுய சம்பாத்திய சொத்தா அல்லது மூதாதையரிடமிருந்து அவர் அடைந்த சொத்தா என்கிற விவரத்தை நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் தந்தைக்குச் சொந்தமான சொத்து அவரது சுய சம்பாத்திய சொத்தாக இருக்கும் நிலையில், அவர் தனது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். மேலும் அந்த உயில் அவர் காலமான பிறகே அமலுக்கு வரும். ஒரு வேளை ஒரு சொத்தைப் பொறுத்து உங்கள் தந்தை உங்களுக்குச் சாதகமாக உயில் எழுதி வைத்தால், அவர் காலமான பிறகே நீங்கள் அந்தச் சொத்தைப் பொறுத்து உயில் எழுதி வைக்க முடியும். நீங்களும் உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். உங்கள் தந்தைக்குச் சொந்தமான சொத்து அவரது மூதாதையரிடமிருந்து அவர் அடைந்த சொத்தாக இருக்கும் நிலையில் அவர் சட்டப்படி எந்தவித உயிலும் எழுத முடியாது. ஆகையால் நீங்களும் அந்தச் சொத்தைப் பொறுத்தவரையில் சட்டப்படி எந்தவித உயிலும் எழுத முடியாது.

என் தந்தை சுயமாகச் சம்பாதித்து வாங்கிய வீடு ஒன்று உள்ளது. என் தந்தை காலமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. என் தந்தைக்கு இரு தாரம். முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாததால் அவருடைய தங்கையான என் தாயாரை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டார் என் தந்தை. இப்போது இருவரும் உயிருடன் உள்ளனர். எனக்கு ஒரு தங்கை உண்டு. என் தந்தையின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் உள்ளன. வாரிசுச் சான்றிதழில் நான், என் சகோதரி, பெரியம்மா, என் தாயார் ஆகியோர் வாரிசுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். என் தந்தை பெயரில் உள்ள வீட்டை என் பெயருக்கு மாற்றம்செய்வது சம்பந்தமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் கேட்டபோது எனது பெரியம்மாவுக்கு உரிய பங்கைக் கிரயமாகத்தான் பதிய முடியும்; மற்றவர்கள் தான செட்டில்மெண்டு செய்யலாம் என்கிறார்கள். இதனால் பத்திரச் செலவு அதிகமாக வருகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.

- டி.செல்வகுமார், விருதுநகர்

சார்பதிவாளர் உங்கள் பெரியம்மா தனது பங்கை உங்களுக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடியாது என்று கூறுவது சட்டப்படி ஏற்புடையதல்ல. தாராளமாக தான செட்டில்மெண்ட் செய்யலாம். ஆனால் பத்திரப் பதிவு விதிகளின்படி நீங்கள் கிரய பத்திரத்துக்கு உரிய முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவதுதான் சட்டப்படி ஏற்புடையதாகும். உங்கள் பெரியம்மாவும் உங்கள் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தால் அதிகமான பத்திரச் செலவைத் தவிர்ப்பதற்கு ஒரு வழி உள்ளது. அதற்கு முதலில் உங்கள் பெரியம்மா தனது பங்கை உங்கள் அம்மாவுக்கு (அதாவது தனது உடன் பிறந்த தங்கைக்கு) தான செட்டில்மெண்ட் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் அம்மா தனது பங்கையும், பெரியம்மாவிடம் இருந்து தனக்கு தான செட்டில்மெண்ட் மூலம் கிடைத்த பங்கையும் சேர்த்து உங்களுக்கு தான செட்டில்மெண்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் அதிகமான பத்திரச் செலவைத் தவிர்க்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in