

மரபுக்குத் திரும்புவது சமீபகாலமாகப் பல துறைகளில் நடந்துவருகிறது. மரபு மருத்துவம், மரபு உணவு முறை என்பது போலக் கட்டிடக் கலையிலும் மரபிலிருந்த அம்சங்களை எடுத்துப் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துவருகிறது. மரபான கட்டிட முறையில் அமைந்த கட்டிடங்கள் இன்றும் இருக்கின்றன அதை அடிப்படையாக வைத்து மரபான வீடுகளை உருவாக்க முடியும். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்து கட்டுமான அம்சங்களை எப்படிக் கண்டுபிடிப்பது?
துருக்கியில் கட்டப்படவுள்ள மதுபானக் கடை, கலைக்கூடம், பசுமைவீடு, மீன் கடை எனப் பல முற்றிலும் வேறுபட்ட நான்கு கட்டிடங்களை வடிவமைக்க அந்நாட்டுக் கட்டுமான வடிவமைப்பாளர்கள் துருக்கியின் புகழ்பெற்ற ஓவியங்களை நாடியுள்ளனர். துருக்கியின் தனித்துவமான கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவை இந்த மினிச்சர் ஓவியங்கள்.மினிச்சர் ஓவியங்கள் ஒட்டமான் பேரரசு காலகட்டத்தில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் புகழ்பெற்றதாக விளங்கியது. இது சீன ஓவியக் கலையால்தான் தாக்கம் பெற்றது. இந்த ஓவியங்கள் ஐரோப்பிய மறுமலர்ச்சி ஓவியங்களுடன் ஒப்பிடத்தகுந்தவை. ஒரு செவ்வக வடிவமைப்பைக் கொண்டவை.
நாட்டார் ஓவியங்களைப் போல் இந்த ஓவியங்கள் எதிலும் யார் வரைந்தார் என்ற கையொப்பம் இருக்காது. ஓட்டமான் பேரரசுக் காலத்தில் ஒரு பெரிய குழுவாக இந்த வகை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்களில் காணப்படும் சூலலை நவீன காலத்துக்கொண்டுவந்துள்ளனர். 210 ஓவியங்களை அவர்கள் பயன்படுத்தினர். இதை அடிப்படையாகக் கொண்டு 6 படங்களை உருவாக்கியுள்ளனர். துருக்கி கிராஃப்ட் பீப்பிள் இந்தக் கட்டுமானத்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.