Last Updated : 11 Oct, 2014 12:56 PM

 

Published : 11 Oct 2014 12:56 PM
Last Updated : 11 Oct 2014 12:56 PM

சுற்றுச்சுழலுக்கு உகந்த கற்கள்

கட்டிடக் கலையில் இன்றைக்குப் பல மாதிரியான ஆரோக்கியமான மாற்றங்கள் வந்துகொண்டிருக் கின்றன. புதிய புதிய மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்குப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அதாவது மரபாக நாம் பயன்படுத்தி வந்த பொருள்களுக்கு இன்றைக்குள்ள தட்டுப்பாட்டை எதிர்கொள்வதும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுதான் இந்த மாற்றுக் கட்டுமானப் பொருள்களின் முக்கிய நோக்கங்கள். அவற்றில் ஒன்றுதான் மாற்றுச் செங்கற்கள்.

மாற்றுச் செங்கற்களின் அவசியம் என்ன?

மரபான செங்கற்களின் தயாரிப்பு காரணமாக வளமான நிலம் பாழ்படுகிறது. செங்கல்லுக்கு வேண்டிய மணலைப் பூமியிலிருந்து தோண்டி எடுக்க வேண்டும். இதனால் மண் வளம் பாதிக்கப் படும். மேலும் இதைத் தயாரிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். செங்கல் சூளைக்காக அதிக வெப்பம் அளிக்க வேண்டி வரும். அதற்காக விறகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் மரங்கள் வெட்டப்படு கின்றன. இவற்றைத் தவிர்த்து சுற்றுச் சுழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்துவது காலத்தின் தேவை. இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழும் எனச் சொல்லிவிட முடியாது. ஆனால் இன்று நம்மிடம் மாற்றுச் செங்கல்லுடன் நாம் மாற்றத்தை முன்னெடுத்தால் செங்கற்களின் பயன்பாட்டைச் சிறிது சிறிதாகக் குறைக்க முடியும். செங்கல் உற்பத்தியாளர்களும் இம்மாதிரியான மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்க முன்வர வேண்டும்.

மாற்றுச் செங்கற்கள்

பல விதமான மாற்றுச் செங்கற்கள் இன்றைக்குச் சந்தையில் கிடைக்கின்றன. கான்கிரீட் சாலிட் ப்ளாக், கான்கிரீட் கேவிட்டி ப்ளாக், ப்ளை ஆஷ் செங்கல், சாய்ல் சிமெண்ட் ப்ளாக் ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. இம்மாதிரியான மாற்றுச் செங்கலை மிக எளிதாகத் தயாரிக்க முடியும். இதற்கான மூலப் பொருள் மிக எளிதில் கிடைக்கின்றன.

அதாவது அனல் மின் நிலையக் கழிவுகளிலிருந்து இவற்றைத் தயாரிக்க முடியும். அங்கு கழிவாகும் பொருள்களை நாம் மீண்டும் பயன்படுத்துவதால் மறுசுழற்சி முறையில் இது சுற்றுச்சுழலுக்கு உகந்தவையாகிறது. இதன் தயாரிப்புத் தொழில்நுட்பமும் மிக எளிதாகக் கிடைக்கிறது.

இது மட்டுமல்லாது இப்போது இரும்புக் கட்டுமானக் கற்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரும்பு ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளில் இருந்து இவ்வகை செங்கல் தயாரிக்கப்படுகிறது. அங்கு இரும்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் பல லட்சம் டன் இரும்பை அப்புறப்படுத்த வேறு மாற்று வழியில்லாததால், அதை வேறு என்னசெய்யலாம் என யோசித்து அதைக் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தலாம் என ஆராய்ந்து முடிவெடுத்து விட்டனர். இரும்பாக இருப் பதனால் அதன் உறுதிக்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டியதில்லை.

சில தவறான நம்பிக்கைகள்

மாற்றுச் செங்கல்லில் இத்தனை நன்மைகள் இருக்கின்றன. இருந்தும் மாற்றுச் செங்கற்கள் பரவலான பயன்பாட்டுக்கு ஏன் வரவில்லை என்றால் அதன் மீது நமக்கு இருக்கும் அவநம்பிக்கைதான். மாற்றுச் செங்கல் பயன்படுத்துவதால் கட்டிடத்திற்கு உறுதி கிடைக்காது, ஆரோக்கியத் திற்கும் நல்லதல்ல எனச் சில தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன.

ஆனால் இது உருவாக்கப்பட்ட மனநிலையே. மாற்றுச் செங்கல்லின் நன்மைகள் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் நமக்குத் தயக்கம் வருகிறது. உண்மையில் மரபான செங்கல்லைக் காட்டிலும் மாற்றுச் செங்கல் விலையும் குறைவு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x