

ஒரு வீடு கட்டுவது அவ்வளவு எளிதானதல்ல. எவ்வளவோ சிரமப்பட்டு நாம் வீட்டைக் கட்டுகிறோம், எதற்காக? நாம் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே. அப்படிப்பட்ட வீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துபவை பூட்டுகள்தான். நாகரிகம் வளர வளர பாதுகாப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறதே ஒழிய அது குறைவதாகத் தெரியவில்லை. முன்னரெல்லாம் கிராமங்களில் வீடுகளைப் பூட்டிவைத்துத் தூங்கும் பழக்கம் என்பது இருந்ததில்லை. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. வீட்டைத் திறந்துவைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்று நம்பிச் செயல்படுகிறோம். அந்தக் காலத்து வீடுகளில் காணப்பட்ட பெரிய பெரிய கதவுகளின் பூட்டுவதற்குத் தேவைப்படும் சாவியே அவ்வளவு கனமாக இருக்கும். கைக்குள் கோத்துப் போட்டுக்கொள்ளும் அளவுக்கு அதன் கைப்பிடியில் பெரிய துளையுடன் காணப்படும். இப்போதெல்லாம் இப்படியான சாவிவைத்துப் பூட்டுவதில்லை. சிறிய சிறிய சாவிகள் போதும். பூட்டின் தனிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு பூட்டுகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
பாரம்பரிய பூட்டுகள்
பாரம்பரியமான பழைய வீடுகளிலும் பெரும் அரண்மனைகளிலும் காணப்படும் கதவுகளில் இந்த வகைப் பூட்டுகளே பயன்பட்டன. இரும்பிலான பெரிய சாவியைக் கொண்டு பூட்டும் போது சாவியானது கதவின் உட்புறத்தில் இருக்கும் இரும்புப் பட்டையை நகர்த்தி அதைக் கதவு பொருத்தப்பட்டிருக்கும் நிலையுடன் சேர்த்துப் பிணைக்கும் வகையில் அமைக்கப் பட்டிருக்கும். இந்த வகைப் பூட்டை உரிய விதத்தில் பராமரிக்க வேண்டும். உராய்வு ஏற்படாமல் தகுந்த இடைவெளிகளில் எண்ணெய்விட்டுப் பராமரித்தால் இவை பூட்டுவதற்கு எளிதாக இருக்கும். சில பூட்டுகள் ஒரு திருகுலேயே நிலையுடன் பிணைக்கப்பட்டுவிடும், இரு திருகுகள் அவசியப்படும் பூட்டுகளும் உண்டு. இவை நெம்புகோல் பூட்டுகள் வகையைச் சேர்ந்தவை. நெம்புகோல் தத்துவத்தில் தான் இந்தப் பூட்டு செயல்படுகிறது.
டிஜிட்டல் பூட்டுகள்
நவீன காலத்தில் இந்த வகை டிஜிட்டல் பூட்டுகள் பிரபலமாகிவிட்டன. இவற்றுக்குச் சாவி தேவை இல்லை. ஆகவே வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை எங்கேயோ வைத்து பின்னர் தேடும் அவஸ்தை இந்தப் பூட்டுகளில் இல்லை. இந்த வகைப் பூட்டுகளில் ஒரு குறிப்பிட்ட மூன்று இலக்க எண்ணை செட் செய்துகொள்ள வேண்டும். கதவைச் சாத்திவிட்டு டிஜிட்டல் பூட்டின் குமிழியில் இடம்பெற்றிருக்கும் எண்களில் நாம் செட் செய்து வைத்திருக்கும் மூன்று இலக்க எண்ணைக் கொண்டுவந்து பூட்டிவிட்டு பின்னர் அந்த எண்ணை இடம் மாற்றிவிட்டால் போதும். கதவைத் திறப்பதற்கு அதே எண்ணைச் சரியாக ஒரே வரிசையில் கொண்டுவந்தால் பூட்டு திறந்துகொள்ளும். சாவி வைத்த இடத்தை மறந்துவிடும் நபர்கள் இதில் செட் செய்த எண்ணை மறந்துவிடக் கூடாது.
நெம்புகோல் பூட்டுகள்
நெம்புகோல் பூட்டுகள் நீண்ட நெடுங்காலமாக புழக்கத்தில் இருப்பவைதான். இப்போதும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில்கூட இந்த வகை நெம்புகோல் பூட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். கதவின் வெளியே ஒரு கைப்பிடி காணப்படும். இந்தக் கைப்பிடியை நமது கையால் அழுத்தம் கொடுத்து கீழே இழுக்கும்போது, கதவின் உள்புறத்தில் கதவை நிலையுடன் பிணைத்திருக்கும் சிறு இரும்பு பட்டை இழுபட்டு கதவை நிலையிலிருந்து பிரித்துவிடும். எனவே கதவு திறந்துகொள்ளும்.
இந்த வகைப் பூட்டுக்கள் மிகப் பாதுகாப்பானவை தான். ஆனால் கதவின் உட்புறத்தில் பாதுகாப்பு வசதிக்காக சிறிய லாக் ஒன்று கொடுக்கப் பட்டிருக்கும். இதை அழுத்தி லாக் செய்துவிட்டு கதவைத் தள்ளிவிட்டாலே கதவு பூட்டிக்கொள்ளும். இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் சாவியை உள்ளே வைத்துவிட்டு கதவைப் பூட்டிவிட்டீர்கள் என்றால் அவ்வளவு எளிதில் கதவைத் திறக்க முடியாது. கதவை உடைத்துத்தான் தீர வேண்டும். ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.