

பல ஆண்டுகாலமாக இருக்கும் பாலின வழக்கத்தை உடைத்து இன்றைய நவீனப் பெண்கள் யாரையும் சாராமல் சுதந்திரமாகவும் பணி வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதும் அதிகரித்திருக்கிறது. பெண்களின் இந்த வாழ்க்கைமுறையால், அவர்களின் முன்னுரிமைகள் மாறியிருக்கின்றன. அவற்றில் முக்கியமான முன்னுரிமையாகச் சொந்த வீட்டில் முதலீடு செய்வது இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், இன்று நகர்ப்புற இந்தியாவில் வீடு வாங்குபவர்களில் மூன்றில் ஒரு பங்கு புத்தாயிரத்தின் பெண்களாக இருக்கின்றனர். இன்றைய சூழலில் தனித்து வாழும் பெண்கள் வீடு வாங்குவது எளிமையான விஷயமாகவே இருக்கிறது. அவர்கள் வீடு வாங்கும்போது கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்…
பாதுகாப்பான இடம்
இடத்தின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்தபின் வீடு வாங்குவது முக்கியம். ஒரு வீட்டை வாங்குவது என்று முடிவுசெய்துவிட்டால், அந்த வீடு அமைந்திருக்கும் இடத்தின் பின்னணித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கும் இடம் என்று தெரிந்தபின், வீட்டை எவ்வளவு பிடித்திருந்தாலும் அந்த இடத்தில் வீடு வாங்குவதைத் தவிர்த்துவிட வேண்டும். இணையதளங்கள் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தினரிடம் வீடு வாங்கும் இடத்தைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
அத்துடன், நீங்கள் வாங்கப்போகும் வீடு அமைந்திருக்கும் இடத்தில் போதுமான வெளிச்சமும் இடவசதியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நெருக்கமான குறுகலான பகுதியில் அமைந்திருக்கும் வீட்டை வாங்க வேண்டும். அத்துடன், தெரு விளக்குகள் வசதியில்லாத இடத்திலும் வீடு வாங்க வேண்டாம்.
அடிப்படை வசதிகள்
வீட்டைத் தேர்வு செய்யும்போது, அடிப்படை வசதிகளான பல்பொருள் அங்காடி, மருத்துவமனைகள், விற்பனை, பொழுதுபோக்கு வளாகங்கள் அருகில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இதன்மூலம், அவசரத் தேவைகளுக்கு அதிக தூரம் பயணிப்பதைத் தவிர்க்கமுடியும்.
சிறந்த இணைப்புவசதி
நீங்கள் வீடு வாங்கத் தேர்ந்தெடுக்கும் இடம், நகரத்தின் மையப்பகுதிகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம். பொதுப் போக்குவரத்து வசதிகளான பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்றவை அருகில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். மின்சார ரயில், மெட்ரோ ரயில் வசதியிருக்கும் புறநகர்ப் பகுதிகளில் தயக்கமின்றி வீடு வாங்கலாம்.
நிதி பற்றிய விழிப்புணர்வு
வீடு வாங்குவதற்கு முன்னால், உங்கள் பட்ஜெட்டைத் தீர்மானம் செய்துவிடுங்கள். வீடு வாங்கும் பெண்களுக்குச் சிறப்பு சலுகைகளை அரசு வழங்குகிறது. பெண்களுக்கு வீட்டுக் கடன் வாங்கும்போது, வட்டியில் ரூ. 2 லட்சத்துக்கு வரிச்சலுகையை அரசு வழங்குகிறது. அதேமாதிரி, வங்கிகளும் குறைவான வட்டி விகிதத்தில் பெண்களுக்கு வீட்டுக்கடனை வழங்குகின்றன. அதனால், வீடு வாங்கும் பட்ஜெட்டைத் தீர்மானிப்பதற்குமுன் இந்த அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
திட்டம் முக்கியம்
தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வீடு வாங்கினாலும் சரி, அல்லது வாடகைக்கு விடுவதற்காக வாங்கினாலும் சரி, அதற்காகக் குறிப்பிட்ட நேரம், பணம், ஆற்றல் போன்றவற்றை நீங்கள் செலவிடவேண்டியிருக்கும். அதனால், நிதானமாகத் திட்டமிட்டு வீட்டை வாங்கும்போது அதன் பயன் திருப்திகரமாக இருக்கும்.