

கஞ்சன்சங்கா அடுக்குமாடிக் குடியிருப்பு இந்திய நவீனக் கட்டிடக் கலைக்கான சான்று. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையின் தென் பகுதியில் கோபால்ராவ் தேஷ்முக் மார்க்கில் இருக்கிறது இந்தக் கட்டிடம். 275 அடிகள் உயரம் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு 27 தளங்களைக் கொண்டது. இந்தக் குடியிருப்பில் மொத்தம் 32 வீடுகள் உள்ளன.
சில வீடுகள் 3 படுக்கையறைகள் கொண்டவை. சில 6 படுக்கையறைகள் கொண்டவை. பால்கனியுடன் கூடிய இந்தக் குடியிருப்பு இன்றைக்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுமானத்துக்கான முன்னுதாரணமாக உள்ளது. இது கட்டப்பட்ட ஆண்டு 1974. உலகின் மிக உயரமான சிகரத்தின் பெயரகைக் கொண்டுள்ள இந்தக் கட்டிடம், உலகின் வானுயரக் கட்டிடங்களுள் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர் சார்லஸ் கொரிய. உலகின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களான ஃபிராங் கெரி, லே கார்புசியர், ஃப்ராங்க் லாயிட் ரைட், ஐ.எம்.பெய் ஆகியோர்களுடன் ஒப்பிடத்தகுந்தவர் இவர். மும்பையின் நவி மும்பை, கர்நாடக மாநிலத்திலுள்ள நியூ பகல்கோட் போன்ற புறநகர்களை வடிவமைத்தவர்.
இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து, கத்தார், ஜப்பான், மொரீஷியஸ், போர்சுகல், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் கட்டிடங்களை உருவாக்கியுள்ளார். 1930-ம் ஆண்டு செம்படம்பர் 1அன்று செகந்திராபாத்தில் பிறந்தவர். இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய விருதான பத்ம விபூஸன், இவரது கட்டிடத் துறை பங்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசின் சிறப்புப் பரிசையும் பெற்றுள்ளார்.