

பல்லாயிரம் கோடிகளில் புரளும் கட்டுமானத் துறையில், காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. கட்டுமானப் பொருள்களில் தவிர்க்க முடியாத பொருள் செங்கல்.
இந்தியாவின் பல பகுதிகளில் இப்போது கிடைக்கும் களிமண் செங்கற்கள் ஏ, பி, சி என வகைப்படுத்தப்படுகின்றன. தென் இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கே கிடைக்கும் களிமண் வகை காரணமாகச் செங்கற்கள் மிகவும் தரம் குறைந்தவையாக இருக்கின்றன.
எனவே, 30 முதல் 40 கிலோ/சதுர சென்டிமீட்டர் (kg/sq.cm) வரை ஆற்றல் கொண்ட செங்கற்களைத்தாம் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். இதன் வலிமையும் ஒரே சீரானது அல்ல.
தரமான செங்கலுக்குத் தட்டுப்பாடு
களிமண் செங்கற்கள், கான்கிரீட் கட்டுமானக் கல் ஆகியவை எடை தாங்குவதற்காகவும் உயரமான கட்டிடங்களில் ஆர்சிசி பிரேம்களால் ஆன, சுவர்களின் இடைவெளியை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டன. கட்டுமானத் தொழிலின் வளர்ச்சிக்கு ஏற்ப தரமான செங்கற்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மறுபுறம், புதிய செம்மண் செங்கல் சூளைகள் நிலத்தின் மேற்பரப்பைக் குறையச் செய்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இல்லை எனக் கருதப்பட்டு அவற்றை நிறுவுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
எனவே, நீடித்த தன்மை உடையதாகவும் வழக்கமான செங்கற்களுக்கு ஒத்த பண்புகள் அல்லது அதைவிடச் சிறந்த பண்புகளைக் கொண்ட ஒரு மாற்றுப் பொருள் கட்டுமானத்துறைக்கு உடனடித் தேவையானதாக இருந்தது.
ஏஏசி பிளாக்
கட்டுமானத் துறையின் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் அறிமுகமானவைதாம் ஏசிசி கட்டுமானக் கல் (AAC Block - Autoclave Aerated Concrete Block). லேசான எடையுள்ள ஏஏசி கட்டுமானக் கல் நீடித்து உழைப்பதால் வழக்கமான செங்கல்லுக்குச் சிறந்த மாற்று என இதை முன்னிறுத்தலாம்.
செங்கற்களுடன் ஒப்பிடும்போது, ஏஏசி கட்டுமானக் கல் 35 முதல் 40 கிலோ/சதுர சென்டிமீட்டர் (kg/sq.cm) சீரான ஆற்றல் கொண்டது. செங்கலின் வலிமையைக் காட்டிலும் அதிக வலிமை கொண்டது.
ஏஏசி கட்டுமானக் கல் தரத்தில் மிக உயர்ந்ததாக இருப்பதால், இதை உட்புற, வெளிப்புறச் சுவர்களுக்குப் பயன்படுத்த முடியும். இந்தியச் சந்தையில் ஏஏசி கட்டுமானக் கல், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மாற்றத்தின் மூலம், கட்டிடம் கட்டுபவர்களும், வாடிக்கையாளர்களும் ஒருசேரப் பயனடைந்துள்ளனர்.
உறுதி தரும் தரச்சான்று
ஒரு நல்ல தயாரிப்பு என்பது பிஎஸ்ஐ தரநிலைகளின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஏஏசி கட்டுமானக் கல் விஷயத்தில், ஐ.எஸ். குறியீட்டு எண் 2185 (பகுதி III - 1984) எல்லாத் தர அளவுகளையும் வரையறுக்கிறது. ஐ.எஸ். தரச் சான்றிதழ் பெற்ற ஏஏசி கட்டுமானக் கல் இப்போது சந்தையில் கிடைக்கிறது.
ஏன் தேர்ந்தெடுக்கலாம்?
கட்டுமானச் செங்கலுடன் ஒப்பிடும்போது இதன் எடை குறைவு. இதனால் அடித்தளத்தின் சுமையையும் பிற கட்டமைப்புக் கூறுகளின் சுமையையும், குறைக்கிறது.
சுய எடைக் குறைப்பின் காரணமாக, ஏஏசி கல்லால் கட்டப்பட்ட கட்டுமானம், பூகம்பத்தால் உண்டாகும் சுமையில் குறைந்த அளவையே ஈர்க்கிறது.
இந்தக் கல் வெப்பநிலையைச் சமன்படுத்துவதில் சிறந்தது. எனவே, குளிரூட்டுவதற்குப் பயன்படும் சக்தியைச் சேமிக்கிறது.
சிறிய அளவு கொண்ட செங்கலின் காரணமாக, சாதாரணச் செங்கல் சுவர் கணிசமான அளவில் அதிக, இணைப்புகள் கொண்டதாக இருக்கிறது. மறுபுறம், நீண்ட அளவு காரணமாக, ஏஏசி கல் குறைந்த இணைப்புகளுடன் இருக்கிறது. அதனால் குறைவான சிமெண்ட் கலவையே இதை இணைக்கப் போதுமானது.
இந்தக் கல் எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டது.செங்கல்லைப் போல் கட்டுமானத்துக்குத் தகுந்தாற்போல் உடைக்க வேண்டியது இல்லை. கட்டுமானத்துக்குத் தகுந்தாற்போல் வெட்டிக் கொள்ளலாம். இதனால் கல் வீணாவது தடுக்கப்படுகிறது.
மிகக் குறைந்த அளவிலேயே சிமெண்ட் பயன்படுத்தப்படுவதால், உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உள்ளன. இந்தத் தயாரிப்பு முயற்சியில், அனல் மின் ஆலைகளில் இருந்து கழிவுப் பொருளாகப் பெறப்படும் உலைச் சாம்பல் பயன்படுத்தப்படுகிறது.
- ஏ.சாந்தகுமார்
கட்டுரையாளர்,
கட்டுமானத் துறைப் பேராசிரியர்