

எனக்குத் தெரிந்த ஒருவர், “வங்கி சேமிப்புக் கணக்கைவிட வீடு வாங்கும்போது இதில் போட்டு வைக்கும் நிதி உதவிகரமாக இருக்கும் - இப்படியெல்லாம் நினைத்துதான் பொது சேமநலக் கணக்கில் பணத்தைப் போட்டு வச்சேன். ஆனால், இப்போது வங்கிக் கடனுக்கான மார்ஜின் தொகைக்காக எனது அந்தக் கணக்கிலிருந்து பெரும் தொகையை எடுக்கலாம்னு நினைச்சால் அது முடியாமல் போச்சு’’ என வீடு வாங்கும்போது வருத்தப்பட்டார்.
Public Provident Fund (PPF) என்பதைத் தமிழில் பொது சேமநல நிதியம் என்பார்கள். சுருக்கமாக PPF என்று பலரால் அறியப்படும் இந்தக் கணக்கில் நாம் போட்டு வைக்கும் தொகையை (சேமிப்பு வங்கியைப் போன்று) நினைத்தபோதெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. இதை உணராததால்தான் அந்த நண்பருக்கு அவரது நிதி, சரியான சமயத்தில் கை கொடுக்கவில்லை.
மேற்படி நிதியம் குறித்த சில தகவல்களை அறிந்து வைத்திருந்தால் இந்த வருத்தம் ஏற்பட்டிருக்காது. இந்த நிதியத்தில் எவ்வளவு போட வேண்டும், எப்போது போட வேண்டும் என்று சரியாகத் திட்டமிட்டிருந்தால் அவர் வீடு வாங்கும்போது இதில் அதிகபட்சத் தொகையைப் பெற வாய்ப்பு இருந்திருக்கும்.
பொது சேமநல நிதியம் குறித்த சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம். இந்தக் கணக்கை ஒரு தனி நபரின் பெயரில்தான் தொடங்க முடியும். அதாவது நிறுவனங்களின் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்க முடியாது.
அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களிலும் இதைத் தொடங்க முடியாது. வருடத்துக்கு ஒரு முறையாவது இந்தக் கணக்கில் பணம் செலுத்தியாக வேண்டும். அதற்காகச் சேமிப்புக் கணக்கு போல நினைத்தபோதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பணத்தைச் செலுத்த முடியாது. ஆண்டுக்கு மூன்று முறைதான் என்பதுபோல் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
ஒரு வருடத்துக்குக் குறைந்தபட்சம் ரூபாய் 500 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் வரை மட்டுமே செலுத்தலாம். இது பதினைந்து ஆண்டுகளுக்கான கணக்கு. ஆனால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ஐந்து, ஐந்து ஆண்டுகளுக்கு என்று இதை நீட்டித்துக் கொண்டே போகலாம்.
இதிலிருந்து கிடைக்கும் வட்டிக்கு வருமான வரியிலிருந்து முற்றிலும் விலக்கு உண்டு. இந்தக் கணக்கில் முதல் மூன்று வருடங்களுக்கு நீங்கள் போட்டதிலிருந்து எந்தத் தொகையையும் எடுக்க முடியாது. (திருமணம் மற்றும் கல்வித் தேவை என்றால் மட்டும் விதிவிலக்கு உண்டு). மூன்று வருடங்களுக்குப் பிறகு நீங்கள் செலுத்திய தொகையில் அறுபது சதவிகிதம் அளவுக்குக் கடன் பெறலாம். கணக்கில் உங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தைவிட நீங்கள் பெறும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் இரண்டு சதவீதம் அதிகமானதாக இருக்கும்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு கடன் அளிக்கப்படாது. ஏனென்றால், அப்போது உங்களுக்கு வேறொரு சலுகை வழங்கப்படுகிறது. நீங்கள் போட்டு வைத்த தொகையிலிருந்து ஐம்பது சதவிகிதத் தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ள (withdraw) முடியும்.
நடப்பு ஆண்டுக்கு முந்தைய நிதி ஆண்டின் இறுதியில் கணக்கில் உங்களுடைய தொகை எவ்வளவு இருந்ததோ அந்தத் தொகை, அல்லது தற்போதைய ஆண்டுக்கு நான்கு நிதி ஆண்டுகளுக்கு முன் என்ன தொகை உங்கள் கணக்கில் இருந்ததோ அந்தத் தொகை - இந்த இரண்டு தொகைகளில் எது குறைவானதோ அந்தத் தொகையை நீங்கள் உங்கள் கணக்கிலிருந்து நிரந்தரமாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கணக்கை வங்கிகளிலும் வைத்துக்கொள்ளலாம், தபால் அலுவலகங்களிலும் வைத்துக் கொள்ளலாம். முன்பெல்லாம் பாரத ஸ்டேட் வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் மட்டுமே PPF கணக்கைத் தொடங்க முடியும். ஆனால், இப்போது தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் எதில் உங்களுக்குக் கணக்கு இருக்கிறதோ அதிலேயே இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
இந்த வகைக் கணக்குகளில் அளிக்கப்படும் வட்டிக்கு வரி கிடையாது என்பது ஒரு நன்மை (மிக நீண்ட காலக் கணக்கு என்பதால் அசல் தொகையை இறுதியில் பெறும்போது அதற்கு வருமான வரி உண்டா இல்லையா என்பது அப்போதுதான் தெரியவரும். அது அந்தந்த அரசின் முடிவு). மற்றொன்று உரியவர்கள் ஆண்டுதோறும் இந்தக் கணக்கில் செலுத்தும் தொகைக்கு வருமானவரி விலக்கு பெற முடியும்.
பல நன்மைகளை அளிக்கக்கூடிய பொது சேமநல நிதியத்தின் விதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டு பணம் போட்டு வைத்தால் வீடு வாங்கும்போது சிக்கலில்லாமல் இதில் போட்ட பணத்தை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.