

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான ஐ.எம். பெய். தனது 102-வது வயதில் நியூயார்கில் மே 16 அன்று மறைந்தார். நம் நாட்டின் நவீன உயர்நீதிமன்றம் என கூறப்படும் சண்டிகர் உயர் நீதிமன்றத்தை வடிவமைத்தவர் பெய். பிரான்சில் உள்ள லு கிராந்த் லூவ்ர், தோஹாவில் உள்ள இஸ்லாமியக் கலை அருங்காட்சியகம் என உலகின் பிரபலமான பல கட்டிடங்களை இவர் உருவாக்கியவர்.
சீன வம்சாவளியைச் சேர்ந்த ஐ.எம். பெய் தன்னுடைய 14 வயதிலேயே சுஹோ தோட்டங்களின் கட்டிடக் கலையால் ஈர்க்கப்பட்டவர். சிறுவயதில் தாயின் அரவணைப்பில் வளர்ந்த பெய், அவருடைய மறைவுக்குப் பிறகு தந்தையுடன் அமெரிக்காவில் குடியேறினார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றார். தன்னுடைய கல்லூரிக் காலத்தில் நவீனக் கட்டிட வடிவமைப்பிலும் ஓவிய முறையில் கட்டிடங்களை வரைவதிலும் திறமையை வளர்ந்துக்கொண்டார்.
வழிகாட்டிய புத்தகங்கள்
கட்டிடக் கலை மீது பெய்க்கு ஆர்வமிருந்தாலும் அவருடைய கல்லூரி வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் பொறியியல் படிப்பின் மீதும் அவருக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. இதையெடுத்து மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தார்.
ஆனால், அங்கிருந்த பேராசிரியர்கள் பெய்யைக் கட்டிடக் கலைப் படிப்பிலேயே தொடரும்படி வலியுறுத்தினார்கள். பின்னர் பிரெஞ்சுக் கட்டிக் கலைஞரான லெ காபூசியே சாதாரணப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டிடங்கள் வடிவமைக்கும் முறை குறித்து எழுதிய புத்தகங்களைப் படித்தார்.
இதேபோல் பிராங்க் லாய்டின் கட்டிட வடிவமைப்பியல் முறையாலும் ஈர்க்கப்பட்டார். இதையெடுத்துத் தன்னுடைய இளங்கலைக் கட்டிட வடிவமைப்பியல் படிப்பை 1940-ம் ஆண்டு பெய் நிறைவுசெய்தார். பிறகு தன்னுடைய பொறியியல் படிப்பையும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் முடித்தார்.
ஆயுதங்களை வடிவமைத்தார்
கட்டிட வடிவமைப்புத் துறையில் நுழைவதற்கு முன்பு அமெரிக்காவின் பாதுகாப்புப் படை ஆராய்ச்சி மையத்தில் ஆயுதங்களை வடிவமைக்கும் பணியில் பெய் பணியாற்றினார். பின்னர் ராணுவப் பணியிலிருந்து விலகி முழுநேரக் கட்டிட வடிவமைப்பியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
அவரின் முதல் கட்டுமானம் 1949-ம் ஆண்டு அட்லாண்டா நகரிலுள்ள பான்ஸ் டி லியோன் அவென்யூ என்னும் கட்டிடம். 1955-ம் ஆண்டில் பெய் கோப் ஃப்ரீடு அண்ட் பார்ட்னர் என்ற கட்டிடக்கலை நிறுவனத்தைத் தொடங்கினார்.
அமெரிக்காவில் மட்டும் எண்ணற்ற கட்டிடங்களை பெய் வடிவமைத்துள்ளார். குறிப்பாக, தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையம், கென்னடி நூலகம், வாஷிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அதன்பின்னர் ஹாங்காங்கில் 72 மாடிகளைக் கொண்ட சீன வங்கியின் தலைமையகத்தை வடிவமைத்தார். உலகின் பல்வேறு நாடுகளுடைய நகரங்களின் தோற்றம் இவருடைய கட்டிடக் கலையால் மாற்றம் பெற்றன.
நபியைப் படித்தவர்
பாரிஸ் நகரில் 1989-ம் ஆண்டு பெய் வடிவமைத்த கண்ணாடியாலான பிரமிடு அருங்காட்சியகம் லு கிராந்த் லூவ்ர் (Le Grand Louvre), அவருடைய கட்டிடக் கலையில் ஒரு மைல் கல். இந்தக் கட்டிடம் அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்ததுடன், சர்ச்சைகளையும் கொண்டுவந்து சேர்த்தது. பிரமிட் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த லூவ்ர் நுழைவாயில் பாரிஸ் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் சுரங்கப்பாதையின் மேற்பரப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரீசின் அடையாளங்களில் ஒன்றாக லு கிராந்த் லூவ்ர் உள்ளது. 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 71 அடி உயரத்தில் இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கோணக் கண்ணாடிக் கூரையில் மொத்தம் 673 கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த முக்கோண வடிவக் கண்ணாடிப் பிரமிட்டில் ‘666’ கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், இந்த எண் சாத்தானுடையது என்று அக்காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. லு கிராந்த் லூவ்ர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட மட்டும் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பாரீசுக்கு வருகின்றனர்.
அதேபோல் கத்தாரில் உள்ள தோஹா இஸ்லாமியக் கலை அருங்காட்சியகத்தையும் பெய் வடிவமைத்துள்ளார். இந்த அருங்காட்சியகத்தை வடிவமைப்பதற்கு முன்பு ஆறு மாதங்கள் இஸ்லாமியப் பாணி கட்டிடங்கள் குறித்து உலக அளவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
இந்த அருங்காட்சியகத்தைக் கட்டுவதற்கு முன்பு இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளையும் முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் படித்துள்ளார். இந்த அருங் காட்சியகத்தை வடிவமைத்தபோது அவருக்கு 91 வயது.
விருதுகளுக்குச் சொந்தமானவர்
கட்டிடக் கலையின் நோபல் எனப் போற்றப்படும் ‘பிரிட்ஸ்கர் விருது’ 1983-ம் ஆண்டு பெய்க்கு வழங்கப்பட்டது. தேசிய வடிவமைப்பில் அருங்காட்சியகத்தின் மிக உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளருக்கான ‘கூப்பர் ஹெவிட் விருது’ 2003-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் ராயல் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
கட்டிட வடிவமைப்பியல் பணியிலிருந்து நூறாவது வயதில் ஐ.எம். பெய் ஓய்வு பெற்றுக்கொண்டார். ஆனால், அதன்பிறகும் பல நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். உலகில் நூற்றுக் கணக்கான கட்டிடக் கலைஞர்களுக்கு நவீன கட்டிடக் கலையின் ஆசானாக விளங்கிய ஐ.எம். பெய் உடல்நலக் குறைவால் காலமானார். ஆனால் அவரால் உயிர்பெற்ற கட்டிடங்கள் இன்னும் பல காலம் உயிருடன் இருக்கப்போகின்றன.