Published : 27 Sep 2014 12:37 PM
Last Updated : 27 Sep 2014 12:37 PM

பஞ்சாயத்து அப்ரூவல் போதுமானதா?

வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்புகள் தமிழ்நாட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் கழகமான சி.எம்.டி.ஏ.வும் நகர ஊரமைப்பு மற்றும் திட்டமிடுதல் இயக்ககமான டி.டி.சி.பி.வும் என்பதைக் குறித்துச் சென்ற வாரம் பார்த்தோம்.

இந்த இரு அமைப்புகளிலும் அனுமதி பெற்ற நிலங்களில் பெரிய பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. நீங்கள் வாங்கும் நிலத்திற்கான கிரயப் பத்திரத்தில் தொடங்கி, பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இந்தத் அமைப்புகள் தெளிவாக ஆராய்ந்த பிறகுதான் இவ்வமைப்புகள் அனுமதி வழங்கும்.

அதனால் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது ஆரம்பத்திலேயே தெரிய வந்துவிடும். அதாவது இந்த அனுமதி அளிக்கும் அமைப்புகள் விதித்துள்ள விதிகள் கீழ் அந்த ப்ளாட்டுகள் இல்லையென்றால் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

ப்ளாட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சாலைகள் எத்தனை அடி அகலத்தில் இருக்க வேண்டும் என்பது போன்ற பல விதிகளை இந்த அமைப்புகள் வகுத்துள்ளன. அதைப் பின்பற்றாத நிலங்களுக்கு அனுமதி கிடைக்காது.

சென்னையும் சென்னையின் சில புறநகர்ப் பகுதிகளும் சி.எம்.டி.ஏ.வின் அனுமதி அளிக்கும் பகுதிகளின் கீழ் வருகின்றன. அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளும் சி.எம்.டி.ஏ.வின் அனுமதி அளிக்கும் பகுதிக்குட்பட்டவைதாம். இதற்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் டி.டி.சி.பி.யின் அனுமதியின் கீழ் வரும்.

ஆனால் இந்த இரு அமைப்புகளின் அனுமதி மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியும் பெறுவது அவசியம்.

டி.டி.சி.பி, சி.எம்.டி.ஏ. என்ற இந்த இரு அமைப்புகள் தவிர பஞ்சாயத்து அப்ரூவல் செய்த நிலங்களும் இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக விற்கப்படுகின்றன. இந்தப் பஞ்சாயத்து அப்ரூவல் என்பது பஞ்சாத்து தலைவர் தனது லெட்டர் பேடில் எழுதிக் கொடுத்தாலேயே போதும்.

பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை விற்பனைக்குத் தயாராக்கிவிடுகிறார்கள். ஆனால் இதில் சில சிக்கல்கள் உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் மோகம் தமிழ்நாட்டின் சின்னச் சின்ன ஊர்களிலும் பரவி மக்களை ஆட்கொண்டுள்ளது என்பதால் மிகச் சிறிய நகரங்களில் சட்டென அருகில் உள்ள பஞ்சாயத்துகளிடம் அனுமதி வாங்கித் தங்கள் விற்பனைகளை தொடங்கிவிடுகிறார்கள்.

பஞ்சாயத்து அமைப்பும் ஓர் ஜனநாயக அமைப்புதான். ஆனால் என்ன பிரச்சினை என்றால் பஞ்சாயத்து அமைப்புகள் ப்ளாட்டுகளுக்கான விதிமுறைகளை ஆராய்வதில்லை. அதற்கான அமைப்பு முறை அங்கு இல்லை எனலாம்.

அதாவது சம்பந்தப்பட்ட மனைக்கான ஆவணங்களை, லேஅவுட் பிளான்களை பஞ்சாயத்துத் தலைவரோ, பஞ்சாயத்து அதிகாரிகளோ சிரத்தையுடன் பார்ப்பதில்லை. அதனால் இம்மாதிரியான நிலங்களின் உண்மைத்தன்மை சந்தேகத்திற்கிடமானது.

மேலும் பஞ்சாயத்து அப்ரூவல் நிலங்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதிலும் சிக்கல் எழும். வங்கிகள் இந்த நிலங்களை நம்பிக் கடன் அளிக்க முன்வராது. இதிலிருந்தே பஞ்சாயத்து அப்ரூவல் நிலங்களின் சிக்கலை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x