

வீட்டுக் கடன் வாங்குவதில் பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும். இந்தச் சந்தேகம் வீட்டுக் கடன் வாங்கிய பிறகும் தொடரும். அப்படியான சந்தேகங்களுள் ஒன்று வீட்டுக் கடன் வாங்கிய வங்கியிலிருந்து வேறொரு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றலாமா, என்பதுதான். இதைத் தொடர்ந்து இன்னொரு கேள்வியும் வரும் அப்படி மாற்றுவது சரியா என்பதுதான் அது.
வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவது சாத்தியம்தான். ஏற்கெனவே வீட்டுக் கடன் இருக்கும் வங்கியின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதைவிடக் குறைவாக வங்கிக் கடன் உள்ள வங்கிக்கு கடனை மாற்றலாம். இது நிச்சயம் நமக்குப் பலன் தரக் கூடியதுதான். ஆனால் இப்படி வங்கிக் கடனை மாற்றுவதற்குக் காலக் கெடு இருக்கும். அதாவது தவணைத் தொகை செலுத்தத் தொடங்கிக் குறிப்பிட்ட சில காலத்துக்குப் பிறகுதான் வங்கிக் கடனை மாற்ற முடியும். இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும்.
இந்தக் காலகட்டத்துக்குள் நீங்கள் செலுத்திய தொகை போக, மீதமுள்ள கடனை புதிய வங்கிக்கு மாற்ற முடியும். வங்கியைப் பொறுத்தவரை இது கடனை முன்கூட்டி அடைப்பதுபோன்றதுதான் இது. ஏனெனில் உங்கள் கடன் கணக்கில் மீதமுள்ள தொகையைப் புதிய வங்கி, வீட்டுக் கடன் இருக்கும் பழைய வங்கிக்குச் செலுத்தி முழுமையாக அடைத்துவிடும். அதனால் கடனை முன்கூட்டி அடைப்பது உண்டான நடைமுறைதான் இந்த வங்கி மாற்றத்துக்கான நடைமுறையாகக் கொள்ளப்படும்.
இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 2 சதவீத அபராதக் கட்டணத்தை வங்கிகள் வசூலித்து வந்தன. ஆனால் இப்போது ரிசர்வ் வங்கி அதை ரத்துசெய்துவிட்டது. சில வங்கிகள் மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை அளித்தன. நிலையான வட்டி விகிதத்தில் வாங்கியவர்களுக்கு அளிக்காமல் இருந்தன.
ஆனால் இப்போது எல்லா வகையான வட்டி விகிதத்துக்கும் இந்த அபராதத் தொகை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே அபராதம் இன்றி கடன் தொகையை நாம் அடைத்துவிட முடியும். புதிதாக நாம் வேறு வங்கிக்கு மாறுவதற்கும் இது பயனளிக்கிறது.
வீட்டுக் கடனை மாற்றுவதற்கு முதலில் இப்போது வீட்டுக் கடன் இருக்கும் வங்கிக்கும், மாற விரும்பும் வங்கிக்கும் விண்ணப்பம் அளிக்க வேண்டும். கடன் அளித்த வங்கியில் எஞ்சிய கடனை நாம் மாற விரும்பும் வங்கி அடைத்துவிடும். அதனால் புதிய வங்கிக்கு கடனுக்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். வீட்டுப் பத்திரத்தை புதிய வங்கிக்கு பத்திரப் பதிவு செய்து தர வேண்டும்.
ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாறும்போது சில கட்டணச் செலவுகள் ஏற்படவும் செய்யும். வேறு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றும்போது செயல்பாட்டுக் கட்டணம், நாம் மாற விரும்பும் வங்கியிலிருந்து பிரதிநிதிகள் வந்து வீட்டை மதிப்பீடு செய்வதற்கான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் எனச் சில செலவுகள் இருக்கும். இந்தச் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
நாம் புதிய வங்கிக்கு மாறுவதற்கான காரணம் வட்டிக் குறைவு என்றால், அதற்கான செலவு களையும் கணக்கிட்டு கொள்ள வேண்டும். இப்போது புதிய வங்கி வட்டிவிகிதக் குறைவால் ஏற்படும் லாபத்தை, புதிய வங்கிக்கான கடன் கட்டணத் தொகையும் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும். இவற்றுடன் பழைய வங்கியின் வட்டி விகிதத்தையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதில் எது லாபம் என்பதை ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
- முகேஷ்