Last Updated : 27 Sep, 2014 12:32 PM

 

Published : 27 Sep 2014 12:32 PM
Last Updated : 27 Sep 2014 12:32 PM

கரிசலாங்கண்ணிகள் பூத்திருந்த நிலம்

என் கணவருடன் 1983-ல் அலுவலக மாற்றலில் மதுரை வந்து சேர்ந்தேன். வருடங்கள் ஓடிவிட்டன. சென்னையிலேயே வளர்ந்து வேலை பார்த்துவந்த எனக்கு, மதுரை ரொம்பவும் பிடித்துப்போனது.

64 திருவிளையாடல்கள் நடந்த இடம், மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கி அருள் பாலிக்கும் சித்திரைத் திருவிழா எனப் பல பெருமைகளைக் கொண்ட மதுரை மாநகரில் வசிப்பது பெருமையாக இருந்தது. ஆனால் இந்தப் பெருமை மிகு நகரில் இடம் வாங்கி வீடு கட்டுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை.

மதுரையின் புறநகர்ப் பகுதியான தபால் தந்தி நகர்ப் பகுதியில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்து எங்கள் மதுரை வாசத்தைத் தொடங்கினோம். அந்த வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டு மாமி, “தைலம் காய்ச்ச கரிசலாங்கண்ணி இலை பறிக்கப் போறேன், கூட வாரயா?” எனக் கேட்டார்.

எனக்கு அதில் ஆர்வம் உண்டு என்பதால் நானும் கிளம்பிப் போனேன். இடம் ரொம்ப தூரமில்லை. பதினைந்து நிமிட நடைதான். கண்களுக்கு எட்டிய வரை வயல் வெளி. ஒரு பக்கம் நெற்பயிர்கள் முத்துமுத்தாகச் சிரித்துக்கொண்டிருந்தன. மற்றொரு பக்கம் காய்கறிகள், கீரைகள் என அந்தப் பகுதியே பச்சை பூத்துக் கிடந்தது.

வயல்வெளி மனைகள்

விளை நிலத்தைச் சுற்றிலும் முள்வேலியிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. அந்த மாமிக்குத் தெரிந்த நபர் அவர் என்பதால், “என்னம்மா தைலக் கீரை பறிக்க வந்தீங்களா?” என்றவாறு வேலிக் கதவைத் திறந்துவிட்டார்.

உள்ளே வெள்ளைப் பூக்களுடன் கரிசலாங்கண்ணிகள் பசுமையாக மண்டிக் கிடந்தன. எனக்கு ஒரே குஷி. நான் கொண்டு போயிருந்த பைகளில் அவற்றைக் கிள்ளி நிறைத்து வீடு வந்து சேர்ந்துவிட்டோம். பிறகு ஒரு வருடத்திற்கு இடையில் அந்த வயல் பகுதிக்குச் சென்றுவந்தோம். வீடு மாறியதும் அந்தப் பக்கமும் போவது நின்றுபோய்விட்டது.

இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து 1990-ல் ஒருநாள் கணவரின் நண்பர் ஒருவர், ஒரு வீட்டுமனை வாங்கியிருப்பதாகக் கூறினார். அவரது சகோதரிக்காக முன்பணம் கொடுத்த வீட்டு மனை ஒன்று இப்போது தன்னிடம் இருக்கிறது.

உங்களுக்கு விருப்பம் எனில் நீங்கள் அதை வாங்கிக் கொள்ளலாம் என்றார். ஒரு செண்ட் 6 ஆயிரம் என்றார். நாங்களும் ஆலோசித்து பிறகு ஒரு வழியாக வாங்கலாம் என முடிவுக்கு வந்தோம். நண்பர் அந்த இடத்தைக் காண்பிக்க அழைத்துச் சென்றார்.

என்ன ஆச்சரியம்! கரிசலாங்கண்ணிகள் பூத்துக் கிடந்த அதே இடம்! அந்த பச்சை பூமிதான் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டுக் கிடந்தது. வீதியான அந்தப் பகுதி முழுக்க கற்கள் ஊன்றப்பட்டு மனைகள் பிரிக்கப்பட்டிருந்தன. நண்பர் ஒரு குறிப்பிட்ட மனையைக் காட்டித் தந்தார்.

அப்போது மனைகளை அங்கீகாரம் இல்லாத காலம் என்பதால் பாதைக்கு உண்டான நிலத்தை நாம்தான் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை வேறு இருந்தது. ஆனாலும் எனக்கு அந்த இடத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ வந்துவிட்டது. வாங்கியும் விட்டோம்.

மீண்டும் வந்தது பிரச்சினை

இடத்தை வாங்கி பிளான் போட்டு பஞ்சாயத்தில் கட்டிட அனுமதியும் வாங்கினோம். சாலைக்காகவும் கொஞ்சம் நிலத்தைக் கொடுக்க வேண்டி வந்தது. வீட்டுக் கடன் வாங்கிக் கட்டிடப் பணிகளைத் தொடங்கினோம். அதிலும் சில சிக்கல்கள் வந்தன.

முதலில் கடன் கொடுத்த நிறுவனம் கட்டுமானத் திட்டம் சரியில்லை என மீதித் தவணைக் கடனை வழங்க மறுத்துவிட்டது. பிறகு நகைகளை வைத்துக் கடன் வாங்கிக் கட்டிடப் பணிகளைத் தொடர்ந்தோம்.

ஒரு வழியாக மதுரையில் இடம் வாங்கி, வீடு கட்டியதில் மகிழ்ச்சி. மீனாட்சியின் ஆட்சியில் நாமும் பிரஜை ஆகிவிட்ட சந்தோஷம். ஆனால் திடீரென என் மகிழ்ச்சிக்குத் தடை போடுவது போல ஒரு சம்பவம் நடந்தது. திடீரென ஒரு கும்பல் நாங்கள் வீடு கட்டியிருக்கும் பகுதிக்கு வந்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது.

விசாரித்ததில் நாங்கள் இருக்கும் நிலத்தின் உடைமையாளாரின் வாரிசுகள் அவர்கள் எனவும், அவர்களின் கையொப்பம் வாங்காமல் மனைகள் விற்கப்பட்டதாகவும், அதனால் அவை செல்லாது என்றும் தெரியவந்தது. ஆனால் அது ஒரு வதந்திதான். எங்கள் பகுதி குடியிருப்போம் நலச் சங்கம் சார்பாக முயன்று அந்தப் பிரச்சினையைத் தீர்த்தோம்.

பல ஆண்டுகளாகியும் என் நினைவில் பூத்துகிடக்கும் அந்தக் கரிசலாங்கண்ணிகளின் நினைவாக என் வீட்டு முற்றத்திலும் கரிசலாங்கண்ணிகளை வளர்த்துவருகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x