Last Updated : 31 Mar, 2018 10:57 AM

 

Published : 31 Mar 2018 10:57 AM
Last Updated : 31 Mar 2018 10:57 AM

சிக்கனமாக ஒரு வீடு!

கோவை வடவள்ளியில் குறைந்த செலவில் ‘தெர்மோகிரீட் பேனல்’ முறையில் வீடு கட்டப்பட்ட செய்தி சமூக ஊடங்களில் உலா வந்தது. அதென்ன ‘தெர்மோகிரீட் பேனல்’ முறை எனக் கட்டுமானத் துறையினரிடம் விசாரித்தபோது பல தகவல்களைச் சொன்னார்கள். இந்த வீட்டைச் செங்கல் இல்லாமல், குறைவான விலையில் எழுப்பிவிடலாம் என்று அவர்கள் சொன்னதுதான் இதன் சிறப்பு.

தெர்மோகிரீட் பேனல் வீடு என்பது வலுவூட்டிய கான்கிரீட், கம்பி வலை ஆகியவற்றுடன் ‘எக்ஸ்பேண்டட் பாலிஸ்டிரின்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படுகிறது. இந்தக் கலவையான முறையில் உருவாக்கப்படும் கட்டிடங்களுக்குத்தான் ‘தெர்மோகிரீட் பேனல்’ வீடுகள் என்று பெயர். இந்தப் பாணி வீடுகளுக்குச் செங்கற்களே தேவையில்லை. கம்பியில் கான்கிரீட்டைக் கொட்டி எக்ஸ்பேண்டட் பாலிஸ்டிரின் தொழில்நுட்பத்தில் சுவரைச் சுலபமாக எழுப்பிவிடுகிறார்கள். இந்த முறையில் வீடு கட்டினால், செலவு கணிசமாகக் குறையவும் செய்கிறது.

அதாவது, கட்டுமானச் செலவில் 10 சதவீதம் வரை குறைக்கலாம். அத்துடன் கட்டுமானப் பணிகளுக்கான காலமும் குறைவதால், அதன் மூலம் ஆகும் செலவினமும் குறையும். உதாரணமாக 900 சதுர அடி கொண்ட ஒரு வீட்டை உருவாக்க சுமார் 55 நாட்கள் மட்டுமே போதும். இதுவே வழக்கமான பாணியில் கட்டப்படும் வீடுகளுக்குக் குறைந்தபட்சம் 4 மாதங்கள்வரை ஆகிவிடும்.

தற்போது நடைமுறையில் உள்ள கட்டுமானத்தைவிட இது சற்று வலுவானது. அதாவது செங்கல் சுவர்களைவிடவும் இந்த வீடுகள் இன்னும் வலுவாக இருக்கும் என்கிறார்கள் இந்தப் பாணியில் வீடு கட்டுவோர். செங்கல் சுவரின் தாங்குதிறனைவிட 30 சதவீதம் கூடுதல் தாங்குதிறனைக் கொண்டது ‘தெர்மோகிரீட் பேனல்’ வீடு. இந்தப் பாணியில் கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 40 ஆண்டுகள்வரை எந்தப் பாதிப்பும் இல்லாமல் உழைப்பதாக வெளி நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இதேபோல கோடை, பனி, மழை போன்ற காலங்களில் இந்த வீடுகளில் ஒரே மாதிரியான தட்பவெப்பம் சீராக நிலவும் என்பது ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது.

இந்த முறையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம், பில்லர்கள் இல்லாமலேயே சிங்கிள் பேனல்களைக் கொண்டு இரண்டு மாடிகள்வரை கட்டிவிட முடியும். ஒரு வேளை டபுள் பேனல்கள் என்றால் 12 மாடி வரையிலும் கட்ட முடியும். நிலநடுக்கம் ஏற்பட்டால் என்னாகுமோ என்ற அச்சமும் தேவையில்லை. அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு இந்த வீடுகள் வலுவானவையாகவே இருக்கும் என்பதால், நிலநடுக்கப் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு ஏற்ற தொழில்நுட்பமாகவும் இது இருக்கிறது. இதன் காரணமாகவே இயற்கைச் சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த தெர்மோகிரீட் பேனல் வீடுகள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன.

இந்தியாவின் பல நகரங்களில் இந்தப் புதுமையான பாணியில் வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழகத்திலும்கூட இந்தத் தொழில்நுட்பம் அறிமுகமாகி வருகிறது. ஓட்டு வீடு, கூரை வீடுகளாக இருக்கும் வீடுகளை ‘தெர்மோகிரீட் எளிமையாக இந்தப் பாணியில் மாற்றிவிட முடியும். எனவே, கிராமப் புறங்களில் இந்த வீடு கட்டும் போக்கு இனிவரும் காலத்தில் அதிகரிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x