

அ
மெரிக்கா என்றாலே பிரம்மாண்ட கட்டிடங்களும் வானுயர்ந்த கோபுரங்களும்தாம் நம்முடைய நினைவுக்கு வரும். ஆனால், அந்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கிறது மிச்சிகன் மாநிலத்திலுள்ள ஆன் ஆர்பர் நகரம்.
இந்நகரில் உள்ள வணிகத் தலங்கள், பரிசுப் பொருள் அங்காடிகள், கலைக்கூடங்கள், கச்சேரி அரங்குகள் என எங்கே பார்த்தாலும் சிறிய வடிவில் தேவதைக் கதைகளில் வருவது போன்ற சின்னஞ்சிறிய கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறார் இலக்கிய எழுத்தாளரான ஜோனத்தன் பி. ரைட்தன் வீட்டில் உள்ள தரைத்தளத்தில்தான் இதுபோன்ற சிறிய கதவுகள் இருப்பதை 1993-ம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார். “இதுபோன்ற சிறிய கதவு என்னுடைய வீட்டில் 90-ம் ஆண்டில் இருந்தே உள்ளது.
ஆனால், நானும் என் மனைவியும் அதை முதன் முதலாக 1993-ம் ஆண்டுதான் தரைத்தளத்தில் பார்த்தோம். இந்தக் கதவுகள் தேவதைக் கதைகளில் வரும் சிறியரக கதவுகளை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டு இருக்கலாம்.
அதேபோல் இந்தச் சிறிய கதவுகளுக்குள் சென்றால் அங்கே வேறு ஒரு சிறிய கதவு இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஆனால், அந்த மற்றொரு கதவு எப்போதும் பூட்டியே இருக்கும்” என்கிறார் ஜோனத்தன்.
அதன் பிறகு இதுபோன்ற சிறிய கதவுகள் ஆன் ஆர்பர் நகரில் உள்ள பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சிறிய கதவும் பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாலையோரங்கள், பொது நூலகம், காபி, ஷாப் எனப் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இதுபோன்ற சிறிய கதவுகளைக் காணலாம்.