

வீ
டு கட்டும்போதே சுவர்களை எழுப்பி அறைகளைப் பிரிக்கிறோம். ஆனால், கட்டிய பிறகும் சிலவேளைகளில் நம்முடைய பயன்பாட்டுக்குத் தகுந்தாற்போல் அறைகளைப் பிரிப்பதற்கான தேவை ஏற்படும். அப்படியான நேரத்தில் அறைகளைப் பிரிப்பதற்குப் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அறைபிரிப்பான்களில் தற்காலிக அறைபிரிப்பான், நிரந்தர அறைபிரிப்பான் ஆகியவை உள்ளன.
தற்காலிக அறைபிரிப்பானைத் தேவைப்பட்டால் எளிதில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். வீட்டில் ஒரு விழா நடத்துகிறோம். அதிகமான இடம் தேவைப்படுகிறது என்றால், அந்த நேரத்தில் தற்காலிக அறைபிரிப்பானை நீக்கிவிடலாம். இம்மாதிரியான தற்காலிக அறைபிரிப்பான்களில் பல வகை இருக்கின்றன.
மூங்கில் இன்றைக்கு வீட்டு அலங்காரத்தில் புதிய இடம் வகித்துவருகிறது. மூங்கில் அறைக்கலன்களும் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல மூங்கில் தூண்களைப் பிரிக்க வேண்டிய இடத்தில் செங்குத்தாக அடுக்கலாம். தூண்கள் நடும் இடத்தில் கூழாங்கற்களை இட்டு நிரப்பலாம். இது அறையைப் பிரிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கும் அழகு சேர்க்கும்.
ஒரு சதுர அடி அளவுக்கு வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டைகளைப் பின்னி திரைபோல் தொங்கச் செய்வதன் மூலம் அறைகளைப் பிரிக்கலாம். இது அறைபிரிப்பானாக மட்டுமல்லாமல் வீட்டுக்கு அழகான தோற்றத்தையும் தரும். இது இணையதளங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
பளபளக்கும் பிளாஸ்டிக் பாசி மணிகளைக் கோத்து நெருக்கமாகத் திரைபோல் வடிவமைத்து அறைபிரிப்பானாகப் பயன்படுத்தலாம். இது வீட்டுக்கு அழகைத் தரும். பயனும் அளிக்கும். சீனாவில் உருவாக்கப்பட்ட நவீன அறைபிரிப்பான் வடிவம் சீனப் பந்து வடிவத்தை ஒத்தது. இதுவும் வீட்டுக்கு அழகான தோற்றத்தைத் தரும். ஆனால், எளிதில் கிழிபடக்கூடியதாக இருக்கும்.
மரச் சட்டகங்களைப் புத்தகங்களைப் போல மடித்து விரித்து அறைகளைப் பிரிக்கலாம். அறையைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பழமையான முறை இது. இதிலே இப்போது மரத்துக்குப் பதிலாக வைபரும் பயன்படுத்தப்படுகிறது.
செடி, கொடிகளையும் அறை பிரிப்பான்களாகப் பயன்படுத்தலாம். வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய செடிகளை, கொடிகளை வைத்து அறையைப் பிரிக்கலாம். பிளாஸ்டிக் செடிகளிலும் அறையைப் பிரிக்கலாம்.