

செ
ன்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பார்க் டவுனையும் வண்ணாரப்பேட்டையையும் இணைக்கும் தங்கசாலை தெரு (மிண்ட் தெரு), சென்னையின் மிகப் பழமையான, நீண்ட தெருக்களில் ஒன்று. இன்றும் கடைகளும் மக்கள் கூட்டமும் நிரம்பி வழிவதால் சென்னையின் பரபரப்பான தெருக்களில் ஒன்றாகவும் இது உள்ளது.
17-ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய யூத வணிகர் ஜாக்வெஸ் டி பைவியா (Jacques de Paivia) என்பவர் இங்கு யூதர்களுக்கான இடுகாட்டை உருவாக்கினார். பிறகு, இந்த இடுகாடு லாயிட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது மிண்ட் தெருவாக இருக்கும் பகுதியைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முதல் வரலாற்றுப் பதிவு இதுதான்.
சென்னையின் வரலாற்றைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ள வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் இந்தத் தெருவைப் பற்றியும் எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டில், கிழக்கிந்திய கம்பெனியினர் தங்களது துணி வியாபாரத்தை வளர்க்கும் நோக்கில் சலவைத் தொழிலாளிகளை இங்கே குடியமர்த்தினர். இதற்கு வாஷர்ஸ் ஸ்ட்ரீட் (Washers street) என்றும் பெயரிட்டனர்.
1841-42- களில் கிழக்கிந்திய கம்பெனி, தன் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கு மாற்றியதிலிருந்து இந்தத் தெரு ‘மிண்ட் தெரு’ என்ற பெயரைப் பெற்றது என்கிறார் ஸ்ரீராம். எனவே, தமிழில் இந்தத் தெரு நாணயச் சாலை என்றும் தங்க சாலை என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். சில ஆண்டுகளில் துபாஷி என்று அழைக்கப்பட்ட இரண்டு மொழி பேசும் இடைத்தரகர்களும் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரிகளும் இங்கே குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து அடகு வியாபாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மார்வாரிகளும் இங்கே குடியேறினர். இதன் மூலம் தொடக்கம் முதலே இந்தத் தெரு பல மொழி பேசுபவர்கள் வசிக்கும் பகுதியாக இருந்துவருகிறது.
அச்சுத் தொழில் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் மிண்ட் தெருவில் பல அச்சகங்கள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் நாணயத் தொழிற்சாலை இருந்த கட்டிடம் பிறகு அரசின் அச்சகமாக மாற்றப்பட்டது. 1860-ல் ஆறுமுக நாவலர் இங்கு ஒரு அச்சகத்தைத் தொடங்கினார். இப்போது இந்த அச்சகம் இல்லை என்றாலும் அதே கட்டத்தில்தான் நாவலர் அறக்கட்டளைக்குச் சொந்தமான விற்பனைக் கிடங்கு இயங்கிவருகிறது. 1900-ம் ஆண்டு இந்தத் தெருவில் தொடங்கப்பட்ட ‘சஸ்த்ர சஞ்சீவினி அச்சகம்’ இந்தத் தெருவில் இன்றுவரை செயல்பட்டுவருகிறது. 1880-களில் அப்போது வாரம் மூன்றுமுறை வெளியாகிக்கொண்டிருந்த ‘தி இந்து’ ஆங்கில இதழும் இந்தத் தெருவில் இருந்த அச்சகத்திலிருந்துதான் வெளியானது. தமிழ் வார இதழ் ‘ஆனந்த விகடன்’ அதன் தொடக்க ஆண்டுகளில் இங்கிருந்துதான் வெளியாகிக்கொண்டிருந்தது.
அதேபோல் சினிமா என்ற ஊடகம் தமிழர்களிடையே பரவிய புதிதிலேயே இங்கு சில திரையரங்குகள் தொடங்கப்பட்டன. இங்கு இருந்த கிரவுன் மற்றும் முருகன் திரையரங்குகள் மிகப் பழமையானவை. முருகன் திரையரங்கில்தான் 1931-ல் வெளியான தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ வெளியிடப்பட்டது.
1880-களில் இங்கிருந்த தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளியில் மகா வைத்தியநாத சிவன் என்பவரால் நடத்தப்பட்ட கச்சேரிதான் சென்னையில் முதல் முறையாக டிக்கெட் விற்பனை செய்து நடத்தப்பட்ட கர்னாடக இசைக் கச்சேரி என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 1909-ல் இங்கு இயங்கிவந்த ‘இந்து இறையியல் பள்ளி’யில் சி.சரஸ்வதி பாய் என்பவர் தனது முதல் ஹரிகதை நிகழ்ச்சியை நடத்தினார். ஒரு பெண் ஹரிகதை நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. 1896-ல் இந்தப் பள்ளிக்கு மகாத்மா காந்தி வருகைபுரிந்தார்.
சென்னையில் கர்னாடக இசையின் பஜனை வடிவத்தை வளர்க்கும் நோக்கில் இந்தத் தெருவில் பல பஜனை மடங்கள் தொடங்கப்பட்டன. நுற்றாண்டைக் கடந்த இரண்டு மடங்கள் இப்போதும் இயங்கிவருகின்றன. தற்போது இந்தத் தெருவில் இருக்கும் சுமைதாங்கி ராமர் கோவில், முன்பு பஜனை மடமாக இருந்தது.
தொன்றுதொட்டு இங்கு குஜராத்தியர்களும் ராஜஸ்தான் மார்வாரிகளும் வசித்துவருவதால் சென்னையில் அசலான சுவையுடன் கூடிய சாட் உணவுகளுக்கான மையமாக இந்தத் தெரு விளங்குகிறது. மாலை நேரங்களில் சமோசா, கச்சோரி, கட்லெட், பானிபூரி, ஜிலேபி, வடா பாவ் உள்ளிட்ட நொறுவைகளைச் சுடச் சுட தயாரித்து விற்கும் பல கடைகள் இந்தத் தெருவில் இருக்கின்றன. பண்டிகைக் காலங்களில் வரிசையில் நின்று தின்பண்டங்களை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைப் பார்க்கலாம்.
மாலை நேரங்களில் சாட் உணவுகளுக்காகவும் ஷாப்பிங் செய்து பொழுதைக் கழிப்பதற்காகவும் இங்கு வரும் இளைஞர்களால் புதுமைக் களை அணிந்திருக்கும் இந்தத் தெருவின் தொன்மையை இங்குள்ள பஜனை மடங்களும் ராஜஸ்தான் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட வீடுகளும் நினைவுபடுத்துகின்றன.