Last Updated : 17 Mar, 2018 09:17 AM

Published : 17 Mar 2018 09:17 AM
Last Updated : 17 Mar 2018 09:17 AM

கட்டிடக் கலையின் நோபல் பெற்ற முதல் இந்தியர்

கட்டிடவியலின் நோபல் பரிசு என அழைக்கப்படும் பிரிட்ஸர் பரிசு இந்த முறை இந்தியர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது. அவர் நவீன இந்தியக் கட்டிடவியல் அறிஞர்களுள் ஒருவரான பால்கிருஷ்ணா தோஷி. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர்தான். 1927-ம் ஆண்டு புனேயில் பிறந்தவர்.

பம்பாயில் பொறியியல் துறையில் பட்டம் பெற்று, பிரான்ஸ் நாட்டில் உலகப் புகழ்பெற்ற கட்டிடவியல் அறிஞர் லா கபூஸரின் கீழ் பணியாற்றினார். லா கபூஸர்தான் சண்டிகர் நகரை வடிவமைத்தவர். “இந்த விருதுக்காக நான் என் குருவுக்குக் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தனது குறிப்பில் கூறியுள்ளார். தோஷியின் குடும்பத்தினர், அறைக்கலன்கள் தயாரிப்பில் காலங்காலமாக ஈடுபட்டுவருகிறது.

அவர் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்துள்ளார். “எனக்கு வசிப்பிடத்தின் முக்கியத்துவம் தெரியும்” என நேர்காணலில் சொல்லியுள்ளார். இதன் அடிப்படையில் தனது கட்டுமானங்களை உருவாக்கினார்.

தோஷி இந்தியக் கட்டிடத் துறைக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குறைந்த வருமானத்தினருக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். ஆரண்யா ஹவுஸ்சிங் என அழைக்கப்படும் இந்த வீட்டுக் குடியிருப்புத் திட்டம் குறைந்த வருமானத்தினருக்கான ஒரு முன்மாதிரித் திட்டமாகத் திகழ்கிறது.

நேஷனல் இன்ஸ்டியூடட் ஆஃப் ஃபேஷன், டெல்லி கட்டிடம், நேஷனல் இன்ஸ்டியூடட் ஆஃப் மேனேஜ்மெண்ட், பெங்களூரூ கட்டிடம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனக் கட்டிடங்களையும் கட்டியுள்ளார். சுற்றுச்சூழலுக்கேற்ற கட்டிடக் கலைக்காக வாஸ்து சில்பா என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளார். ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் என்னும் கட்டிடக் கலைக்கான கல்லூரியை அகமதாபாத்தில் தொடங்கி நடத்திவருகிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் கட்டிடவியல் அறிஞராக நடித்துள்ளார்.

மதுரையில் கட்டிடக் கலை பயின்றேன்

முதலில் மலிவான செங்கல் மற்றும் கான்கிரீட் கட்டிடங்களை உருவாக்கினோம். பின்னர் பதேபூர் சிக்ரி, மதுரை, ஸ்ரீரங்கம் மற்றும் ஜெய்பூர் போன்ற நகரங்களின் பாரம்பரியக் கட்டிடக் கலையைப் பயின்றேன். 22 முதல் 88 வயதுவரையுள்ள கட்டிட வல்லுநர்களைச் சேர்த்து சுற்றுச்சூழலுக்கேற்ற கட்டிடக் கலை நடைமுறையான வாஸ்து - சில்பா-வை உருவாக்கினேன்.

எரிபொருள் ஆற்றலைச் செலவழிக்காத தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய வெளிப்பாடுகளுடன் கூடிய வெளிகளை உருவாக்கினோம். பழமையான கட்டிடவியல் நுணுக்கங்களையும் அதில் சேர்த்துக்கொண்டோம்.

நான் எனது வீட்டின் தோட்டத்தையும் வீட்டின் நீட்சியாக உருவாக்கினேன். இலகுவான இடங்களை எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்றுகூடுதல், சம்பிரதாயமற்ற தன்மை, பகிர்வு இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஒரு வீட்டை வடிவமைக்க வேண்டும். எனது டிசைன் ஸ்டுடியோவான சங்கத், ஒரு கிராமத்தைப் போல மரங்கள், படிக்கட்டுகள், வளைவுக்கூரைகள் மற்றும் நீர்ப்பகுதிகளைக் கொண்டது. அது சம்பிரதாயமான அலுவலகக் கட்டிடமாக வடிவமைக்கப்படவில்லை.

dhoshi பி.வி.தோஷி right

நான் அகமாதாபாத்துக்கு வாழவந்தபோது, கூட்டுறவுக் கழக வீட்டை வாடகைக்கு எடுத்தேன். அவை அடுக்குமாடிக் குடியிருப்புகள் அல்ல. ஒரு வராந்தா, ஒரு அறை, சமையலறை, முற்றம் மற்றும் வெளியே படிகளைக் கொண்டது. அந்த வீட்டை அதன் உரிமையாளர்கள் நீட்டிக் கட்டிக்கொள்ளலாம்

இப்படித்தான் வீடுகளை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தேன். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகரிக்கும்போதோ குறையும்போதோ அதற்கேற்ப வீடு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். எனது ஆரம்ப காலத்திய வீட்டுத் திட்டங்களிலிருந்தே என்னுடைய பிரதான நோக்கம் அதுவாகவே இருந்தது. வாழ்பவர்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாக வீடுகள் இருக்க வேண்டும்.

பி.வி.தோஷி | தமிழல்: சங்கர்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x