

ப
ள்ளிக் குழந்தைகளுக்குத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் அவர்களை வீடுகளுக்குள் அடைத்துவைப்பது என்பது முடியாத காரியம். பெற்றோர் பெரும்பாலானோருக்கு வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளுடன் விடுமுறை நாட்களைச் சேர்ந்து கொண்டாட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் வீட்டில் அடைத்துவைக்கப்படும் குழந்தைகளுக்கு ஆறுதலாக இருப்பது அருகில் இருக்கும் சிறு பூங்காக்கள்தாம்.
ஆனால் நம்மூர் பூங்காக்களில் உள்ள சறுக்குமரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் பெரும்பாலும் இரும்பு உலோகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலங்களில் இரும்பு துருப்பிடித்து ஆங்காங்கே ஓட்டைகள் விழுந்து குழந்தைகள் விளையாட முடியாத சூழ்நிலையை உருவாக்குவதுடன் பெரும் ஆபத்தாகவும் உள்ளது.
ஆனால் ஜப்பானில் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் இரும்பு உலோகத்துக்கு மாற்றாக செங்கல், சிமெண்ட் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை உருவாக்காத வகையில் விளையாட்டு உபகரணங்களை உருவாக்கியுள்ளார் ஜப்பான் நாட்டின் பிரபல கட்டிட வடிவமைப்பாளரான இசாமு நொகோச்சி (Isamu Noguchi).
இசாமு நொகோச்சி ஜப்பான் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பூங்காக்களில் வடிவமைத்துள்ள கடல்வாழ் உயிரினங்கள், பனிக்கரடி, போன்ற சிமெண்ட் கலவையால் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமல்லாமல் பல வருடங்களுக்கு பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. இந்த வித்தியாசமான விளையாட்டு உபகரணங்களைப் படம்பிடித்துள்ளார் புகைப்படக் கலைஞரான கித்தோ ஃபுஜியோ (Kito Fujio). சாதாரணமாக காட்சியளிக்கும் இந்த விளையாட்டு உபகரணங்களில் மின்விளக்குகள் பொருத்தி கித்தோ ஃபுஜியோ எடுத்துள்ள புகைப்படங்கள் விளையாட்டு திடலின் தோற்றத்தை வித்தியாசமாக காட்டுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில இங்கே.