

அ
ழுக்கு படியக் கூடாது என்பதற்காகச் சுத்தப்படுத்துவது இயல்பான விஷயம்தான். ஆனால், எல்லாவித அழுக்குகளையும் தண்ணீரால் மட்டுமே நீக்கிவிட முடியாது. தவிர பல்வேறு தளங்களுக்குத் தகுந்தாற்போல் சுத்தப்படுத்த பலவிதமான முறைகளைக் கையாள வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். அப்போதுதான் தரைப்பகுதி சேதமடையாது.
கான்கிரீட் தரை என்றால் சோப்பு பயன்படுத்தக் கூடாது. நீர்த்த ஆக்ஸாலிக் அமிலம் பயன்படுத்தலாம். எங்காவது பாசி படிந்திருந்தால் அதை நீக்க பொட்டாசியம் பர்மாங்கனேட் பயன்படும். ஆனால், இது போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்திய பிறகு நிறைய தண்ணீர் ஊற்றி அந்த இடத்தைக் கழுவிவிட வேண்டும்.
மொசைக் தளத்தைச் சுத்தப்படுத்த கரடுமுரடான பிரஷ்ஷைப் பயன்படுத்த வேண்டாம். மொசைக்கின் தோற்றம் கெட்டுவிடும். பிளீச்சிங் பவுடரையும் பயன்படுத்த வேண்டாம். மொசைக் தரைகளைப் பாத்திரம் கழுவும் திரவம் கொண்டு வாரத்துக்கு இருமுறை கழுவிவிடலாம்.
சலவைக்கல் தரை என்றால் பெருக்குதலும், ஈரமான ‘மாப்’பினால் துடைத்தலுமே போதுமானது. காலப்போக்கில் சலவைக் கற்கள் பொலிவிழந்து போனால் அவற்றை பாலிஷ் செய்ய வேண்டும். மார்பிள் தரையை அழுக்கு நீரால் ஒருபோதும் சுத்தம் செய்யக் கூடாது.
கண்ணாடித் தளம் என்றால் ஈரப்பதம் அதற்குள் இறங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், மொசைக் போன்றவை கொஞ்சமாவது ஈரத்தை உள்ளிழுத்துக்கொள்ளும். எனவே, உணவுப் பொருட்களோ திரவமோ தரையில் கொட்டிவிட்டால் உடனே அதைச் சுத்தப்படுத்துவதுதான் நல்லது.
மொசைக் கற்களைப் பதித்த பிறகு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அழுக்கு போன்றவை நீக்கப்படும். அடைப்பு சாந்து என்பது ஒரு தலைவலிதான். நீக்க கடினமானதுதான். கவனமாகச் செய்ய வேண்டும். அமிலங்களால் சுத்தப்படுத்த வேண்டாம். வண்ணம் பொலிவிழக்கக்கூடும். மொசைக் தளங்களைத் தண்ணீரால் கழுவி மிருதுவான டிடர்ஜெண்ட் மூலம் ஸ்க்ரப் செய்யலாம். மிருதுவான ஸ்பான்ஞ் அல்லது துணியைப் பயன்படுத்தலாம். துடைப்பம்கூட மிருதுவான குச்சிகளால் ஆனதாக இருக்கட்டும். பெருக்கிய பிறகு வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்துவதில் தவறில்லை.
அறைக்கலன்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றும்போது கவனம் தேவை. தரையில் இழுத்தால் மொசைக் தளத்தில் கீறல்கள் உண்டாகும்.
சமையல் அறையிலுள்ள ஸ்லாப்கள் பெரும்பாலும் கடப்பா கல்லால் ஆனவையாகவே உள்ளன. தேவைக்கேற்ப வாஷிங் சோடா, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்
டைல்ஸ் ஒட்டப்பட்ட பிறகு ஆங்காங்கே சிமெண்ட் துறுத்திக்கொண்டிருக்கலாம். அவற்றை நீக்க வெள்ளை வினிகரை ஸ்பாஞ்சில் தொட்டுத் துடைக்கலாம். சுமார் இரண்டு மணி நேரத்தில் அந்த சிமெண்ட் தளர்வாகிவிடும். அப்போது அதை நீக்கிவிட முடியும்.
அமிலங்கள் மற்றும் பிற ரசாயனப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. முதலில் அந்தப் பகுதியிலுள்ள ‘அதிகப்படியாகச் சேர்ந்த பொருட்களை ‘ (அது தூசாக இருக்கலாம் அல்லது வேற ஏதாவது கறையாக இருக்கலாம்) நன்கு துடைத்து நீக்கிய பிறகே அதற்கான ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவற்றிற்கிடையே வேதியல் செயல்பாடு நடந்து நச்சுப்புகை வெளியாகலாம்.
ஸ்ட்ராங்கான ரசாயனங்கள்தாம் பலன்தரும் என்று தோன்றினால் கையுறைகளை மாட்டிக்கொண்டு அவற்றைப் பயன்படுத்துங்கள். மூக்குப் பகுதியை மெல்லிய முகமூடியால் மூடிக்கொண்டு இந்த வேலைகளைச் செய்வதும் நல்லது. கண்களின் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுதான்.