

பை
சா நகரின் சாய்ந்த கோபுரம் பற்றிய ஒரு தகவலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏதோ உலகின் அதிசயமாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ இத்தாலி நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவோ கட்டப்பட்டது அல்ல இது. இது ஒரு மணி கோபுரம். 55 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற கட்டிடங்களைப் போல் இதுவும் நிமிர்ந்து நிற்கும் வகையில்தான் கட்டப்பட்டது. ஆனால், தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்ந்து கொண்டிருக்கிறது.
பைசா கோபுரம் குறித்த தகவல் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால், நம் சேமிப்புகளையெல்லாம் முதலீடாக்கி எழுப்பப்படும் நம் வீடு இப்படிச் சாய்ந்து கொண்டிருந்தால் எப்படியிருக்கும்?
பைசா கோபுரமளவுக்கு இல்லை என்றாலும் கணிசமான வீடுகள் துல்லியமாக நேராக இருப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள். காரணங்களைப் பற்றிய தெளிவு ஏற்பட்டால்தான் தவறுகள் உண்டாகாமல் எச்சரிக்கையாகச் செயல்படலாம்.
மண்வாகு ஒரு முக்கியக் காரணம். கட்டிடத்தின் கீழே உள்ள மண் மிகவும் மிருதுவாகவும் சீராக இல்லாமலும் இருந்தால் எங்கெல்லாம் மண் மிக மிருதுவாக உள்ளதோ அங்கெல்லாம் கட்டிடம் கொஞ்சம் அழுத்தமாக உட்காரும். இதுபோன்ற பகுதிகளில் சிறப்பான அடித்தளமாக (Special footings) இட வேண்டியிருக்கும்.
அடுத்து மண்ணிலுள்ள ஈரப்பதமும் இதற்குக் காரணமாக அமையலாம். கழிவுநீர் வெளியேற்றம், தண்ணீர் குழாய்களிலுள்ள கசிவுகள் போன்றவற்றின் காரணமாக அஸ்திவாரத்தின் ஈரப்பதம் அதிகமாகலாம். எங்கே ஈரப்பதம் அதிகமாகத் தொடர்ந்து இருக்கிறதோ அந்தப் பகுதியில் கட்டிடம் கொஞ்சம் அதிகம் அழுந்த வாய்ப்பு உண்டு.
மண்ணில் களிமண்ணின் அளவு அதிகமாக இருந்தால் கோடைக் காலத்தில் அதிலுள்ள ஈரப்பதம் குறையும்போது மண்ணின் அளவு குறைகிறது. இதனால்தான் உலர்ந்த மண் பகுதியில் எழுப்பப்படும் கட்டிடங்கள் கொஞ்சம் ‘சுருங்குகின்றன’.
கட்டித்துக்கு மிக அருகே பெரும் மரங்கள் இருக்கும்போது அவற்றின் வேர்கள் பரவுவதன் காரணமாகவும் வீட்டின் சமத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படலாம். மண்ணிலுள்ள நீரையெல்லாம் உறிஞ்சிக்கொள்வதன் மூலம் வீட்டின் ஒரு பகுதியிலுள்ள மண்ணை உயர்வானதாக ஆக்குவதால் பிரச்சினை தோன்றலாம்.
மர வேலைப்பாடுகளை முக்கியமாகக் கொண்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டால் ஈரப்பதத்துக்குத் தகுந்தாற்போல் அந்த மரப் பகுதிகள் தங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்போது இந்த ஏற்றத்தாழ்வு உண்டாகலாம்.
சிவ பார்வதி திருமணத்தைக் காண எல்லோருமே கயிலாயப் பகுதிக்குச் சென்று விட்டதால் தெற்குப் பகுதி உயர்ந்துவிட்டதாம். அதைச் சரி செய்வதற்காக அகத்திய முனிவர் அனுப்பப்பட்டாராம். நமது வீடுகளில் சமநிலை நிலவ வேண்டுமானால் அகத்தியர்போல நாமும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதுதான். பருமனாக உள்ளவர்கள் எல்லாம் வீட்டின் மேடான பகுதியில் தொடர்ந்து தங்குவதால் பலன் கிடைத்து விடாது!
அஸ்திவாரங்களில் ஆழமும் அகலமும் சரியாக வடிவமைக்கப்பட வேண்டும். அஸ்திவாரப் பரப்பில் நீர் ஊற்றப்பட்டு சிறிது நேரம் அப்படியே திறந்து வைக்கப்பட வேண்டும். கரையான்களுக்கு எதிரான மருந்துகள் சரியான விதத்தில் உட்செலுத்தப்பட வேண்டும். அஸ்திவாரங்கள் துல்லியமான நேர்கோட்டில் அமைந்ததாக இருக்க வேண்டும். கான்கிரீட் கலவைக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. அஸ்திவார வேலை தொடங்குவதற்கு முன்பாகக் கீழே பரப்பப்படும் கான்கிரீட் நன்கு பதப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு சீனியர் பொறியியல் நிபுணரின் ஆலோசனைப்படி அஸ்திவாரங்கள் எழுப்பப்பட வேண்டும்.
முதலில் அந்த மண் தொடர்பான அறிக்கையை (Soil Test Report) பெற்றால் கட்டிடக் கலைஞருக்கு அஸ்திவாரம் போடும்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன என்பது தெளிவாகத் தெரியும். அதிர்வுகள் பாதிக்காதபடி அஸ்திவாரம் இருக்க வேண்டும். கடற்கரைப் பகுதி என்றால் அதிகக் கவனம் தேவை.