

ப
ண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் அமலான பிறகு இந்திய ரியல் எஸ்டேட் துறை தள்ளாடி வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய ரியல் எஸ்டேட் துறையின் சந்தை மதிப்பு 2020-ம் ஆண்டுக்குள் 18 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, 11,700 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கட்டுமான அமைப்புகளில் ஒன்றான ‘கிரெடாய்’ மற்றும் ஜே.எல்.எல். நிறுவனமும் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவைக் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘இந்திய ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் துணை புரிகின்றன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம், ஜி.எஸ்.டி., அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்வு போன்ற நடவடிக்கைகள் இந்திய ரியல் எஸ்டேட்டுக்கு உதவிவருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாகவே குறைந்த விலையிலான வீடுகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடியிருக்கிறது. இந்த அம்சமும் ஆய்வறிக்கையில் எதிரொலித்துள்ளது. அதுவும் நாளுக்குநாள் நகரமயமாதல் அதிகரித்துவருவதால் அதற்கான தேவையும் அதிகரித்திருப்பதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ‘நாட்டின் வளர்ச்சி காரணமாக, நகரமயமாதலும் வேகமாக அதிகரித்து வருகிறது. குடும்பங்களின் வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், குறைந்த விலை வீடுகளுக்கான தேவையும் இந்தியாவில் பெருகியுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் அமலுக்கு வந்துள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், இந்திய ரியல் எஸ்டேட் துறையை ஒருங்கிணைக்க உதவும்; நேர்மை இல்லாத கட்டுமான நிறுவனங்களைக் களையெடுக்க உதவும் என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளை இந்த ஆய்வறிக்கை பிரதிபலித்திருக்கிறது. அதாவது, ‘இந்த ஆணையத்தில் கட்டுமான நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதால், அந்தக் கட்டுமான நிறுவனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ஜி.எஸ்.டி. காரணமாக ரியல் எஸ்டேட் துறையில் 3 முதல் 4 சதவீதம்வரை செலவு குறைந்திருக்கிறது.
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதும் துணைபுரிந்துவருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடுகளும் கணிசமாக அதிகரித்துவருகின்றன. 2017-ம் ஆண்டில் தனியார் பங்கு மற்றும் கடன் பத்திர முதலீடு, 12 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. குறைந்த விலை வீடுகளுக்கான முதலீடுகளும் அதிகரித்திருக்கின்றன. குறைந்த விலை வீடுகள் கட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டிருப்பது கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
மேலும் பல தகவல்கள் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ‘கடந்த 2014-ம் ஆண்டு இந்திய வீட்டுவசதித் துறையில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குவிந்தது. இதில், ரியல் எஸ்டேட் துறையின் பங்கு மட்டும் 47 சதவீதம். 2015-ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் மதிப்பு 12,600 கோடி டாலராக இருந்தது. இந்த மதிப்புதான் அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2020-ல், 18 ஆயிரம் கோடி டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல; இதே காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வீட்டு வசதித் துறையின் பங்கு இரு மடங்கு அதிகரிக்கும். சுமார் 11 சதவீதம்வரை இந்த வீட்டு வசதித் துறையின் பங்கு அதிகரிக்கலாம்’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்கள் தவிர்த்து நாக்பூர், கொச்சி, சண்டிகர், பாட்னா ஆகிய நகரங்களும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மையங்களாக உருவெடுக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.