Published : 03 Mar 2018 12:53 PM
Last Updated : 03 Mar 2018 12:53 PM

பின்வாசல் முற்றமாகும் பால்கனிகள்

னி வீடு, காற்று வாங்கப் பின்வாசல் முற்றம் என்பதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. சென்னை மாதிரியான நகரங்களில் நெருக்கடியால் அடுக்குமாடி வீட்டுக் கலாச்சாரம் பிரபலமடைந்துவிட்டது. இம்மாதிரி அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் பின்வாசல் முற்றம்போல் ஆசுவாசத்தைத் தருபவை, பால்கனிகள்தாம். இந்தப் பால்கனிகள் வீட்டுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரக் கூடியவை.

ஓரளவு இட வசதியைக் கொண்ட பால்கனியில் இனிய மாலையையும் காலையையும் சுகமாய்க் கழிக்கலாம். பாரம்பரியமான பால்கனிகளின் காலம் முடிந்துவிட்டது. இப்போது புதுவகையான பால்கனிகளை உருவாக்கும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

பால்கனி என இடம் ஒதுக்கிவிட்டு அதை முற்றிலும் சுவர் மூலம் மூடுவதைச் சட்டம்கூட அங்கீகரிப்பதில்லை. ஏனெனில், பால்கனி என்பது முழுமையாக மூடப்படாத அமைப்பு என்றே சட்டம் தெரிவிக்கிறது. ஏதேனும் ஒரு பகுதியை மூடியபடி பால்கனியை அமைக்கலாம். இப்படி அமைக்கும் முன்னர் அது கட்டிடத்தின் பாதுகாப்புக்கு உகந்ததா என்பதை நிபுணர்களுடன் ஆலோசித்துக்கொள்வது அவசியம்.

பால்கனியை எங்கு அமைக்கப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதை எப்படி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இயலும். வீட்டின் வரவேற்பறையை ஒட்டியோ உணவருந்தும் அறையை ஒட்டியோ பால்கனியை அமைத்தீர்கள் எனில் அதில் நாற்காலிகள் போடுமளவுக்கு இடம்விட வேண்டும். நண்பர்களுடன் அமர்ந்து உரையாடும் இடமாக அதை உபயோகிக்கலாம்.

படுக்கையறையை ஒட்டிய பால்கனி என்றால் அது தனிப்பட்ட இடமாக நீங்கள் மட்டுமே புழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும். பால்கனியில் வளர்க்கும் செடி வகைகளை வளர்த்து அதை அழகுபடுத்தலாம், அத்துடன் அது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.

பெரிய அளவிலான பால்கனி வீட்டில் அமைந்திருந்தால் சிறிய அளவிலான பார்ட்டிகளைக்கூட அதில் நடத்தலாம். நான்கைந்து நாற்காலிகள், மேசையைப் போட்டு அந்த இடத்தையே ஒரு திறந்தவெளி உணவகம் போல் பயன்படுத்தலாம். கேளிக்கைகளுக்கான இடமாக பால்கனி மாறும். இப்படி அமைக்கும்போது அந்த பால்கனியை விதவிதமான செடி கொடிகளால் அலங்கரிக்க வேண்டும். கண்ணுக்குக் குளிர்ச்சியான பால்கனிகள் மனதுக்கும் இதமானதாக இருக்கும்.

தினந்தோறும் உடற்பயிற்சிக்கு உதவும் வகையிலும் பால்கனியை உருவாக்கலாம். உடற்பயிற்சிக் கருவிகள் மூலம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளிலும் யோகா போன்ற ஆரோக்கியச் செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். இதற்கு பால்கனி மிகவும் உகந்த இடமாகவும் அமையும். கையாள எளிதான கருவிகளையும் யோகா மேட்களையும் வைக்க உதவும் சிறிய அலமாரிகளை பால்கனியில் அமைக்க வேண்டும். தண்ணீர் பாட்டில்கள், முகம் துடைக்க உதவும் துண்டுகள் போன்றவற்றை வைக்கவும் அலமாரிகள் பயன்படும்.

குளிக்கும் சிறிய தொட்டிகளைக்கூட பால்கனியில் வைத்துப் பராமரிக்க இப்போது வாய்ப்புகள் உள்ளன. மறைப்புடன் கூடிய பால்கனி எனில் அங்கே நீங்கள் சுடுநீர் டப்புகளைப் பயன்படுத்த முடியும். 10 அடி நீளம் கொண்ட சிறிய நீச்சல்குளம் போன்ற அமைப்பையே பால்கனியில் உருவாக்கிக்கொள்ள முடியும். என்ன ஒன்று இதை எல்லாம் தாங்கிக்கொள்ள ஏதுவாகக் கட்டிடம் இருக்கிறதா என்பதை அவதானித்துக்கொள்வது அவசியம்.

மேலும் நீச்சல் குளத்து நீர் கசிந்து தரைக்கோ சுவருக்கோ வராமல் பராமரிக்க வேண்டும். குளியல் போன்ற காரியங்களுக்கு பால்கனியைப் பயன்படுத்தும்போது போதிய மறைப்பு இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சூரிய மின்சக்தி உருவாக்கவல்ல தகடுகளை பால்கனிகளில் பொருத்தலாம். இதன் மூலம் வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து பசுமை வீடாக வீட்டை மாற்ற முடியும். பால்கனியை மூங்கில் போன்ற இயற்கைப் பொருள்கள் கொண்டு அலங்கரித்துப் பயன்படுத்தலாம்.

பால்கனிகள் தேவையற்ற இடம் என்னும் பழமைவாதம் இப்போது எடுபடுவதில்லை. இந்த யுகத்தில் இருக்கும் இடத்தை எப்படி நமக்கு ஏற்றபடி பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x