

வெ
யிலுக்கும் மழைக்கும் ஒடுங்கிக்கொள்ள ஒரு கூரை இருந்தால் போதும் என்பார்கள். இந்தக் கூரை அமைப்பதைப் பற்றிப் பார்ப்போம். கூரை என்றதும் பனங்கூரை, தென்னங்கூரை மட்டுமல்ல. இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் கான்கிரீட்டும் ஒரு கூரைதான். இது வீட்டுப் பணிகளில் முக்கியமானது கான்கிரீட் அமைக்கும் பணி. இந்தக் கான்கிரீட் பணியில் முக்கியமானது கான்கிரீட் கலவை தயாரிப்பது.
ஒரு கட்டிடத்தின் உறுதியை நிர்ணயிப்பதில் கான்கிரீட் கலவைக்குத்தான் முக்கிய இடம். கான்கிரீட் கலவை என்பது சிமெண்ட், ஜல்லி, மணல், தண்ணீர் ஆகியவற்றின் கலவை. தரமான சிமெண்ட், தரமான ஜல்லி என ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வாங்கிவிட்டோம். இந்தத் தரம்மிக்க கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கான்கிரீட் கலவையைத் தயாரித்துவிட்டால் கலவை தரமானதாக ஆகிவிடுமா? இல்லை.
இதில் முக்கியமானது கான்கிரீட் கலவையைச் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும் அது மிகவும் முக்கியமானது. கட்டிடத்துக்கான கான்கிரீட் தயாரிக்கும்போது சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றை 1:2:4 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதில் சிமெண்டின் பாதி அளவுக்குத் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் இந்தச் சேர்க்கை அதிகமானாலும் குறைந்தாலும் கலவையின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தண்ணீரின் அளவு அதிகமானால் கான்கிரீட் கலவையின் தரம் குறைந்துவிடும். சிமெண்டில் உள்ள நுண்ணிய துகள்கள் சுருங்கி அங்கு காற்று உட்புகுந்து கான்கிரீட்டின் தரம் பாதிக்கப்படும். தண்ணீரின் அளவு குறைந்தால் கலவை சரியான பிணைப்பில்லாமல் இருக்கும். இதனால் கலவையின் உறுதித் தன்மை பாதிக்கப்படும். கான்கிரீட் கலவையை உண்டாக்க உப்புத் தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இதனாலும் கான்கிரீட் கலவையின் தரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் விழிப்புணர்வு இல்லாமல் உப்புத் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். கான்கிரீட் கலவையின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் சில பொருள்களை அதனுடன் சேர்க்கலாம். எரிசாம்பல், எரி உலைக் கசடுகள் போன்றவற்றைக் கலக்கலாம் என அத்துறைசார் நிபுணர்கள் சொல்கிறார்கள். கான்கிரீட் பூச்சுக்குக் கலவை தயாரிக்கும்போது 1:4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஒரு மூட்டை சிமெண்டுக்கு 4 மூட்டை மணல் என்ற அளவில் கலவை இருக்க வேண்டும். இப்படிக் கலக்கும்போது அது மென்மையாக இருக்கும். இது மேல் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும். வெளிப்பூச்சுக்கு 1:5 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இது வெளிப்புறப் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும்.
அதுபோல கான்கிரீட் பணி முடிந்த பிறகு அதை நீரால் ஆற்றுவது அவசியமானது. எந்த அளவுக்கு நீராற்றுகிறீர்களோ அந்த அளவுக்கு கான்கிரீட் பலமாக இருக்கும். அதாவது கான்கிரீட் மேற்பரப்பில் நீரைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தேங்கி இருக்குமாறு செய்ய வேண்டும். நீராற்றும் வேலையைச் செய்ய பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. கான்கிரீட் தளத்தின் மேல் நீரைத் தேக்கப் பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.
நீர் வெளியேறிப் போகாமல் இருக்க பாத்தி கட்டுவது, ஈரக் கோணிகளைக் கொண்டு மூடி வைப்பது இப்படிப் பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. இதற்கு மாற்றாகப் பல வழிமுறைகளும் வந்திருக்கின்றன. உதாரணமாக அக்ரிலிக் எமல்ஷன் வகையிலான பூச்சுகளை கான்கிரீட் பரப்பின் பூசியும் நீராற்றலாம்.ஒரே ஒரு முறை செய்தால் போதும். பூசப்படும் பூச்சு கான்கிரீட் பரப்பின் மேல் சீரான படலமாகப் பரவும்.
இந்தப் படலம் கான்கிரீட்டிற்குள் இருக்கும் தண்ணீர் வீணாக ஆவியாகி வெளியேறிவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்யும். கான்கிரீட் வெகு விரைவில் உலர்ந்து போகாமல் காக்கும். இதனால் வெடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். எந்த முறையைப் பின்பற்றினாலும் சரி, கான்கிரீட்டுக்கு நீராற்றும் பணியைச் சரியாக செய்யாவிட்டால் கட்டிடத்தின் ஆயுள் குறைவுதான்.