

கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை, தமிழகத்தின் வேறு எந்த நகரத்தையும்விட சென்னையில்தான் அதிக வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
சென்னையின் வளர்ச்சிக்கான காரணங்கள் தமிழ்நாட்டின் தலைநகராக மட்டுமல்லாது, அது தென்னிந்தியாவின் மிகப் பெரிய வியாபார மையமாக இருப்பதுவே. சென்னையின் இந்த வளர்ச்சி சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், படப்பை, செங்குன்றம், பூந்தமல்லி, பொழிச்சலூர், மாங்காடு ஆகிய பகுதிகள் வரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
இதனால் இந்தப் பகுதிகளில், நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. ஆக தற்போது பொத்தேரி, மறைமலை நகர் போன்ற பகுதிகளைத் தாண்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளைத்தான் சிறிய முதலீட்டாளர்கள் நாட வேண்டியிருக்கிறது. இது சரியானா தீர்வாக இருக்குமா என்பதைப் பார்ப்போம்.
எங்கு வாங்கலாம்?
இதுபோன்ற சூழலில் 2-ம் தர நகரங்கள் எனக் கருதப்படும் கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களைச் சிறிய முதலீட்டாளர்கள் நாடலாம் என்கின்றனர் ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள். தேசிய
அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அடுத்த சில ஆண்டுகளில், ரியல் எஸ்டேட் துறையில் சிறப்பான வளர்ச்சியை எட்டும் நகரங்கள் குறித்த தேடலில், அகமதாபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், கொச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில், மேற்குறிப்பிட்ட நகரங்களில் ஐ.டி. தொடர்பான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்பப்படுவதால், ரியல் எஸ்டேட் துறையும் இங்கு சிறப்பான வளர்ச்சியை எட்டும் என நம்பப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவை, கொச்சி போன்ற 2-ம் தர (Tier 2) நகரங்களுக்கு அதிக அளவில் பணியாளர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கான குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது, ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சியடையும் என்பதே முதலீட்டு ஆலோசகர்களின் யோசனையாக முன்வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை மாநகரம் ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்பதில் இருவேறு கருத்து இல்லை.
கோவையில் ஏற்கனவே இருக்கும் நூற்பாலைகளும் இயந்திரவியல் தொழிற்சாலைகளும் இதன் முக்கியக் காரணங்கள் எனலாம். மேலும் கோவையில் நிலவும் மிதமான காலநிலையும் கோவை ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கான மற்றொரு காரணமாகும்.
வரவிருக்கும் திட்டங்கள்
தற்போது கோவையில் 2 ஐ.டி. பூங்காக்கள் செயல்பாட்டில் இருந்தாலும், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மேலும் 5 ஐ.டி. பூங்காக்கள் விரைவில் தொடங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்குச் சாதகமான அம்சமாக இருக்கும்.
கோவை மாநகரம் எதிர்காலத்தில், முதலீட்டுக்கு ஏற்ற தமிழக நகரங்களில் ஒன்றாக மாற்றமடையும் என்பதிலும் சந்தேகமில்லை. இதுதவிர திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய இடங்களுக்குக் கோவையிலிருந்து ஒரு சில மணி நேரத்தில் சென்று வரலாம் என்பதும், இந்த நகரங்களில் தொழில் வாய்ப்புகள் அடுத்த சில ஆண்டுகளில் பெருகும் என்பதும், கோவையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
இதுதவிர, கோவை வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பும் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
எனவே, கோவை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில், வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இடங்களில் முதலீடு செய்வது, அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் பொன் முட்டையிடும் வாத்துக்களாக மாறும் என ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.