

சுவர்கள் எழுப்பாமல் வீட்டின் அறைகளைப் பிரிப்பது இப்போது பிரபலமான உள் அலங்கார போக்காக மாறிவருகிறது. இப்படிச் சுவர்கள் இல்லாமல் வீட்டின் இடங்களைப் பிரிப்பது உள் அலங்கார வடிவமைப்பில் புதுமையான வழிகளைப் பயன்படுத்த உதவுகிறது.
வீட்டின் திறந்தவெளிப் பகுதியை அப்படியே பயன்படுத்துவது வீட்டின் தோற்றத்தைப் பெரிதாக் காட்ட உதவும். ஆனால், இந்தத் திறந்தவெளித் தள வடிவமைப்பில் தனிமை கிடைக்காது. அதனால், திறந்தவெளித் தளத்தில் அறைப் பிரிப்பான்களைப் பயன்படுத்துவது சிறப்பான தேர்வாக இருக்கும். இப்போது பல புதுமையான வழிகளில் அறைப் பிரிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறைப் பிரிப்பான்களில் சில தேர்வுகள்…
மரத் திரைச்சீலைகள்
மர வேலைப்பாடுகள் நிறைந்த திரைச்சீலைகள், அழகும் நேர்த்தியும் கலந்த சிறந்த அறைப்பிரிப்பானாகச் செயல்படும். வெளிச்சத்தை விரும்புவர்கள், வேலைப்பாடுகள் நிறைந்த மரத் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். வரவேற் பறை, சாப்பாட்டு அறை இரண்டையும் பிரிப்பதற்கு இந்த மரத் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
மரத்துக்குப் பதிலாக, உலோகம், ஃபைபர் கண்ணாடிப் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இயற்கையுடன் இருப்பதை விரும்புவர் என்றால், மூங்கில்களை அறைப்பிரிப்பான்களாகப் பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.
எளிமையான திரைச்சீலைகள்
எளிமையான வடிமைப்பை விரும்புபவர்கள் சாதாரணத் திரைச்சீலைகளையே அறைப்பிரிப்பான்களாகப் பயன்படுத்தலாம். வடிவமைப்பில் வித்தியாசம் வேண்டும் என்று நினைப்பவர்கள் துணித் திரைச்சீலைகளுக்குப் பதிலாக மணிகளாலான திரைச்சீலைகளை அறைப்பிரிப்பான்களாகப் பயன்படுத்தலாம்.
கண்ணாடி, பிளாஸ்டிக், மூங்கில், அக்ரிலிக் போன்றவை திரைச்சீலைகளில் மணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. உங்களின் வீட்டின் உள் அலங்காரத்துக்கு ஏற்ற மணித் திரைச்சீலையை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
திறந்த அலமாரிகள்
திறந்த அலமாரிகளை அறைப்பிரிப்பானாகத் தேர்ந்தெடுப்பது அறையின் அழகை மெருகேற்ற உதவும். அறையில் வெளிச்சத்தைக் கொண்டுவருவதற்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த அலமாரிகளில் எல்லா அடுக்குகளிலும் பொருட்களை அடுக்காமல் சில அடுக்குகளில் மட்டும் புத்தகங்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை அடுக்கலாம். இப்படிச் செய்வது அறைகளுக்கு இடையில் வெளிச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இடத்தையும் பெரிதாக்கிக்காட்டும்.
சறுக்கும் கதவுகள்
சாதாரணக் கண்ணாடியிலான கதவை ஜன்னல் சட்டகத்தின் வடிவமைப்பில் அறைப்பிரிப்பானாகப் பயன்படுத்தலாம். இந்தக் கண்ணாடி அறைப்பிரிப்பானைச் சமையலறைக்கும் சாப்பாட்டு அறைக்கும் இடையில் பொருத்துவது ஏற்றதாக இருக்கும். அப்படியில்லாவிட்டால் சறுக்கும் கதவுகளையும் (Sliding doors) அறைப்பிரிப்பான்களாகப் பயன்படுத்தலாம்.
சோஃபாக்கள்
அறைப்பிரிப்பான்களாக பிரிவுகள் நிறைந்த சோஃபாக்களையும் (Sectional Sofas) பயன்படுத்தலாம். ‘எல்’ வடிவமைப்பிலான சோஃபாக்கள் அறைப்பிரிப்பான்களாகப் பயன்படுத்துவதற்குச் சிறந்த தேர்வாக இருக்கும்.