Last Updated : 02 Mar, 2019 11:09 AM

 

Published : 02 Mar 2019 11:09 AM
Last Updated : 02 Mar 2019 11:09 AM

மாறும் வீட்டுக் கடன் வட்டி விகிதம்

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பதை இதுவரை அந்தந்த வங்கிகள் தீர்மானித்து வந்தன. ஆனால், வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து இதில் மாற்றம் ஏற்படப் போகிறது.

வங்கிகள் தங்களிடமிருக்கும் டெபாசிட்டை எந்த அளவுக்கு லாபகரமான விதத்தில் கடனாக அளிக்க முடிகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு தாங்கள் அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைத் தீர்மானித்து வந்தன. இதை MCLR என்பார்கள். அதாவது Marginal Cost of Funds Based Lending Rates. இதைக்கொண்டு அவ்வப்போது தாங்கள் அளித்த-அளிக்கும் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றுவார்கள். பெரும்பாலும் ஆண்டுக்கு ஒரு முறை அந்த வட்டி விகிதம் மாறும்.

ஆனால், ரிசர்வ் வங்கி வேறொரு முறையை ஏப்ரல் 1-லிருந்து வங்கிகளுக்கிடையே அறிமுகப்படுத்த இருக்கிறது. இனி வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதைத் தீர்மானிக்க சில குறிப்பிட்ட விஷயங்களைத்தான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

ரெபோ ரேட் வட்டி விகிதம்

ஒன்று ‘ரெபோ விகிதம்’ - அதாவது ‘ரெபோ ரேட்’. ஒரு நாட்டின் மத்திய வங்கி அந்த நாட்டின் பிற வங்கிகளுக்குக்கான நிதி தேவைப்படும்போது எத்தனை வட்டிக்குக் கடனை அளிக்கிறது என்பதுதான் இது. நம் நாட்டின் மத்திய வங்கி என்பது ரிசர்வ் வங்கியாகும். பணப் பற்றாக்குறை என்று பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியை நாடும்போது அது நிதியளிக்கும்.

அதற்கு வட்டியும் பெற்றுக் கொள்ளும். ரெபோ ரேட் எனப்படும் இந்த வட்டி விகிதத்தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கவும் ரிசர்வ் வங்கி முயலும். இந்த ரெபோ (வட்டி) விகிதம் என்பதை அடிப்படையாகக்கொண்டு வீட்டுக் கடனுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கலாம்.

இரண்டாவது கருவூல ரசீது (Treasury Bill) விகிதம். இந்த Treasury Bill 91 நாட்களுக்கானது அல்லது 182 நாட்களுக்கானது. இதில் எவ்வளவு சதவீத வட்டியை அரசு அளிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அந்த அளவை அடிப்படையாகக்கொண்டு வீட்டுக் கடனுக்கான வட்டியை அரசு அளிக்கலாம். இது இரண்டாவது வழிமுறை.

இந்திய நிதித்திறன் மதிப்பீட்டு நிறுவனம் (Financial Benchmark India Private Limited) என்ற ஒரு நிறுவனம் உண்டு. அது வேறு சில அமைப்புகளால் இயக்கப்படுகிறது. இந்திய அந்நியச் செலாவணி வர்த்தக கூட்டமைப்பு (FEDAI) மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (IBI) போன்ற சில அமைப்புகள்தாம் மேற்படி நிறுவனத்தை இயக்குகின்றன. இந்த அமைப்பு ரிசர்வ் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதுவும் வங்கிக் கடனுக்காக அளிக்க வேண்டிய வட்டி விகிதத்தைப் பரிந்துரைக்கும்.

இவற்றில் ஒன்றை அடிப்படையாகக்கொண்டு வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை இனித் தீர்மானிக்க வேண்டும். இதில் இன்னொரு மாறுதலும் இருக்கிறது. இப்போதைய மாறுபடும் வட்டி விகிதம் (Floating rate of interest) ஒவ்வொரு வருடமும் மாறக் கூடியது. (ஒப்பந்தப்படி இந்தக் காலகட்டம் மாறுபடலாம்).

மேலே குறிப்பிட்ட அடிப்படைகளில் ஒன்றை ஏற்றுக்கொண்டு அதைவிடச் சற்று அதிக வட்டி விகிதத்தைத் தாங்கள் அளிக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கும். ஆனால், இந்த அதிகப்படி விகிதம் என்பது கடன் முடியும்வரை ஒரே அளவு கொண்டதாகத்தான் இருக்க வேண்டும்.

அதாவது FBIL அமைப்பு பரிந்துரைக்கும் வட்டி விகிதம் பத்து சதவீதம் என்றால் மேலும் ஒரு சதவீதம் சேர்த்து வங்கி பதினோரு சதவீதத்தை வீட்டுக் கடனுக்கான வட்டியாக வசூலிக்கலாம். ஆனால், FBIL பரிந்துரை அடுத்த வருடம் 11 சதவீதம் என்று மாறினால் வங்கிகள் 12 சதவீதம் என்று மட்டுமே (அதாவது ஒரு சதவீதம் அதிகம்) என்கிற அளவில்தான் வட்டியை மாற்றலாம்.

இதன் காரணமாகப் பொது மக்கள் பயனடைவார்கள் என்கிறது ரிசர்வ் வங்கி. வங்கிகள் தங்கள் இஷ்டப்படி வீட்டுக்கடனுக்கான வட்டி விதத்தை மாற்றியமைக்க முடியாது.

இந்தப் புதிய நடைமுறையால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து விடுமா என்று கேட்டால் அப்படியொன்றும் நிச்சயமில்லை என்பதுதான் பதில். எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி ரெபோ ரேட்டை அடிப்படையாகக் கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதைவிட 2.5 சதவீதம் அதிகமாக வைத்து வீட்டுக் கடனுக்கான வட்டியை அந்த வங்கி தீர்மானிக்கலாம்.

அதாவது இப்போது  ரெபோ விகிதம் 6.5 சதவீதம் என்றால் 9 சதவீதம் வட்டியை வங்கி வசூலிக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இந்த வட்டியை எந்தவிதத்திலும் வங்கியால் தீர்மானிக்க முடியாது. சந்தை நிலவரத்தைக் கொண்டு மாறும் ‘ரெபோ விகிதத்தைக்’ கொண்டுதான் அதன் ஏற்ற, இறக்கம் இருக்கும்.

கருவூல ரசீது (Treasury Bill) என்றால் என்ன?

அரசுக்கு நிதி தேவைப்படும்போது ‘அரசுப் பத்திரங்களை’ (Government Bonds) வெளியிடும். மக்கள் அதை வாங்கிக்கொண்டு அந்தப் பத்திரங்களுக்குரிய பணத்தை அரசுக்கு அளிப்பார்கள். உரிய காலத்தின் முடிவில் பத்திரங்களைப் பெற்று கொண்டு மக்களுக்கு அந்தப் பணத்தை அரசு திருப்பியளிக்கும். இந்தப் பத்திரங்கள் கொஞ்சம் நீண்டகாலத்துக்கானவை. அதாவது சுமார் மூன்று வருடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், குறுகிய காலக் கடனையும் அரசு பெறும். இதை Treasury Bill என்பார்கள். இது 91 நாட்களுக்கு அல்லது 182 நாட்களுக்கு அல்லது 364 நாட்களுக்கு என்று பெறப்படும். இதற்கான வட்டி வழக்கமான விதத்தில் வழங்கப்படாது. அதாவது நூறு ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ள Treasury Bill-ஐ உங்களுக்கு அரசு 90 ரூபாய்க்கு இப்போது கொடுக்கக் கூடும்.

நீங்கள் 90 ரூபாயை இப்போது அரசுக்குச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு (91, 182 அல்லது 364 நாட்களுக்குப் பிறகு) அரசிடமிருந்து நூறு ரூபாய் பெறுவீர்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் இனி இதுவும் கணக்கில் கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x