பரப்பில் குறைந்த வீடுகள்

பரப்பில் குறைந்த வீடுகள்
Updated on
1 min read

இந்தியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் பரப்பளவு கடந்த சில ஆண்டுகளில் கணிசமான அளவு குறைந்திருக்கிறது. பெருநகரங்களில் பட்ஜெட் குடியிருப்பு வீடுகளின் சராசரிப் பரப்பளவு கடந்த ஐந்து ஆண்டுகளில், 17 சதவீதம் குறைந்திருப்பதாகச் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்த விலை நிர்ணயிப்பதற்காகக் குடியிருப்புகளின் சராசரி அளவு குறைக்கப்பட்டிருப்பதாக இந்த ஆய்வுசொல்கிறது.

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் குறைந்த விலை குடியிருப்புகளின் சராசரிப் பரப்பளவு, 2014 முதல் 2018 வரை 17 சதவீதம் குறைந்திருக்கிறது. மும்பையின் பெருநகரப் பகுதியில் (MMR), குடியிருப்புகளின் சராசரி அளவு 27 சதவீதம் குறைந்திருக்கிறது. மும்பைக்கு அடுத்த இடத்தில், கொல்கத்தா 23 சதவீதச் சரிவைச் சந்தித்திருக்கிறது.

புனேவின் குடியிருப்புகள் 22 சதவீத அளவு சரிவையும் டெல்லி தேசியத் தலைநகர்ப் பகுதி (என்சிஆர்) 16 சதவீதச் சரிவையும் சென்னை 15 சதவீதச் சரிவையும் ஹைதராபாத் 15 சதவீதச் சரிவையும் பெங்களூரூ 12 சதவீதச் சரிவையும் சந்தித்திருக்கின்றன. ‘அனராக் பிராப்பர்ட்டி கன்சல்டன்ட்ஸ்’ வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை வீடுகளின் தேவை பெருநகரங்களில் அதிகரித்திருப்பதுதான் குடியிருப்புகளின் அளவு குறைவதற்குக் காரணம் என்று சொல்கின்றனர் ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள். பெருநகரங்களில் சொத்துகளின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்துவருவதால், கட்டுநர்கள் குடியிருப்பு வீடுகளின் பரப்பளவைக் குறைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

வீடு வாங்குபவர்களின் தேவையைப் பொறுத்தும் குடியிருப்புகளின் அளவைக் கட்டுநர்கள் குறைக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்று தெரிவிக்கின்றனர் துறை நிபுணர்கள்.

மறுவிற்பனைச் சந்தையிலும் சிறிய வீடுகள் விரைவில் விற்பனையாகிவிடுகின்றன. இந்தக் குறைந்த விலை சிறிய வீடுகள் இளைய தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருக்கின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பது, குறைந்த விலை போன்ற அம்சங்கள் இதற்கான காரணங்களாக அமைந்திருக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஆரோக்கியமற்ற வேலைவாய்ப்புச் சந்தை, நிரந்தரமில்லா வருவாய்ச் சூழல் உருவாகியிருக்கிறது. அதுவும் சிறிய வீடுகளுக்கான தேவை அதிகரிக்கக் காரணம். அத்துடன், பெரிய வீடுகளின் அதிகமான பராமரிப்புச் செலவுகளால், வாடிக்கையாளர்கள் தற்போது சிறிய வீடுகளைத் தேர்வுசெய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in