வீழ்ச்சியடையும் வீட்டு விலை

வீழ்ச்சியடையும் வீட்டு விலை
Updated on
2 min read

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் மென்பொருள், மற்ற தொழில் துறைகளில் ஏற்பட்ட அபரிதமான வளர்ச்சி இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அதை ஒட்டிப் பெருநகரங்களில் நில விற்பனையும் அதிகரித்தது.

இந்த மென்பொருள் துறையில் கிடைத்த மிக அதிக வருமானத்தால் அத்துறையில் பணியாற்றுபவர்கள் பொருளுக்கான விலையை அதிகமாகக் கொடுக்கத் தயாராக இருந்தனர்.

அதாவது 2500 ரூபாய்க்கு ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீடு 2003 ஆண்டுவாக்கில் கோடம்பாக்கம் போன்ற சென்னையின் நகர்ப் பகுதியில் எளிதாக வாடகைக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது.

ஆனால் இந்த மென்பொருள் துறை வளர்ச்சிக்குப் பிறகு அது இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது. இதே நிலை நில, வீடு விற்பனையிலும் எதிரொலித்தது.

இந்த விலை உயர்வால் சாதாரண எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தச் சந்தைகளுடன் போட்டி போட முடியாமல் திணறினர்.

ஏனெனில் ஒருசாரரரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு விலை பரவலாக உயர்ந்தது. ஆனால் வருமானம் பொதுவாக உயரவில்லை. சென்னை நகரின் எளிய மக்கள் இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் இப்போது இந்த நிலையின் பெரிய மாற்றமாகக் கடந்த சில மாதங்களாக ரியல் எஸ்டேட் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. உச்சத்திற்குச் சென்ற வீட்டு விலை இப்போது சற்றே குறையத் தொடங்கியுள்ளது.

இப்போது வெளிவந்திருக்கும் இண்டர்னேஷணல் மாணிட்டரி ஃபண்டின் (IMF) அறிக்கை இதற்குச் சான்றாக உள்ளது. உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 52 சந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வீட்டு விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய வீட்டு விலை 9.1 சதவிகிதம் குறைந்துள்ளது. இது உலக அளவில் மிக மோசமான பின்னடைவு என அந்த அறிக்கை கூறுகிறது.

அதே சமயம் பொருளாதார நெருக்கடி உள்ள ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த சரிவு மிக மோசமானதாக உள்ளதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. கிரேக்கம், இத்தாலி, சைப்ரஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் வீடு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால் மிகக் குறைந்த சதவிகிதத்திலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. இன்னொரு வகையில் அயர்லாந்தில் வீடு விலை 4.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கிரேக்கத்தில் 7 சதவீதமும், இத்தாலியில் 6.5 சதவீதமும், ஸ்பெயினில் 4.9 சதவீதமும், போர்ச்சுகலில் 3.3 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அறிக்கையின்படி உலக அளவிலான மொத்த சதவீதக் கணக்கின்படி உலக ரியல் எஸ்டேட் சந்தை வளர்ச்சியடைந்துள்ளது.

52 நாடுகளின் புள்ளி விவரங்கள் இந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன. 33 நாடுகளில் வீட்டு விலை உயர்ந்துள்ளது. 19 நாடுகளில் மிகக் குறைந்துள்ளது.

சிறப்பான பொருளாதாரச் சூழல் உள்ள அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீடு விலை உயர்ந்துள்ளது. மாறாக பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியுள்ள சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விலை உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவிலும், ரஷ்யாவிலும் ரியல் எஸ்டேட் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவின் தேசிய வீட்டுவசதி வங்கி 26 இந்திய நகரங்களின் வீட்டு விலை நிலவரம் குறித்துப் புள்ளி விவரங்களைக் கொடுத்துள்ளது.

அதன்படி 26 நகரங்களில் 13 நகரங்களில் வீட்டு விலை அதிகரித்துள்ளது. மீதி 13 நகரங்களில் வீட்டு விலை குறைந்துள்ளது. ஆனால் உண்மையில் 21 நகரங்களில் வீட்டு விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.

மொத்தத்தில் தொடர்ந்து வெளியாகும் அறிக்கைகளின் வழியாக வீட்டு விலை குறையும் வாய்ப்பையே கூறுகின்றன. இது ஒருவகையில் எளிய மக்களுக்கு ஆறுதலான செய்திதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in