

பரப்பளவில் வரிசைப்படுத்தப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் 137-வது இடத்தில் உள்ளது தைவான். ஆனால் அந்நாட்டில் உள்ள ‘தைபே 101’ கட்டிடம் உலகின் உயரமான கட்டிடங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. ஆசிய அளவில் ஆறாம் இடம்பிடித்துள்ளது.
வரலாறு படைத்த கட்டிடம்
வருடத்தில் பலமுறை நிலநடுக்கம், சூறாவெளி என இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று தைவான். இதுபோன்ற நாட்டில் வானுயர்க் கட்டிடங்களை கட்டவே யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால் நவீன கட்டிடவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தைவான் அரசு முடிவுசெய்தது. இதைத் தொடர்ந்து அரசு - தனியார் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டதுதான் ‘தைபே 101’ கட்டிடம்.
508 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 101 தளங்கள் உள்ளது. இவற்றைத் தவிர்த்து ஐந்து தளங்கள் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30,277 சதுர பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்துக்கான பணிகள் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 2004-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதற்காக மொத்தம் 700 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் கட்டிட வரலாற்றிலேயே மிகப் பெரிய கட்டுமானக் கட்டிடமாக ‘தைபே 101’ விளங்குகிறது. அதேபோல் சர்வதேசப் பொருளாதார மையமாக தைபே 101 விளங்குகிறது. தைபே 101 கட்டிடம் தற்போது தைவானின் அடையாளமாக மாறிவிட்டது. இந்தக் கட்டிடம் அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட், பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரம் ஆகியவற்றைவிட உயரமானது.
சுற்றுலாத் தளம், ஷாப்பிங் மால், கூகுள் போன்ற சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்கள், உணவகம், விடுதி என ஏராளமான விஷயங்கள் தைபே 101-யில் உள்ளன. இந்த உலகப் புகழ்பெற்ற கட்டிடத்தை வடிவமைத்தவர் சீனப் பொறியாளரான சி.ஒய். லீ. சீனாவில் உள்ள செங்குங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கட்டிடவியல் படித்த லீ, பிரீன்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை கட்டிடவியல் முடித்தார். அதன்பிறகு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய லீ தன்னுடைய சி.ஒய்.லீ அண்டு பாட்னர்ஸ் நிறுவனத்தை 1978-ம் ஆண்டு தொடங்கினார்.
கின்னஸ் சாதனை
சீன கட்டிடவியலைப் பிரதிபலிக்கும் ‘தைபே 101’ கட்டிடத்தில் மொத்தம் எட்டு அடுக்குகள் உள்ளன. சீனர்களின் அதிர்ஷ்ட எண்ணாக எட்டு கருதப்படுவதால் இக்கட்டிடம் எட்டு தளங்களைக் கொண்டுள்ளது. மூங்கில் போல் இக்கட்டிடத்தின் ஒவ்வொரு தளமும் ஒன்றின்மேல் ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளது.
புயல்காற்று, நிலநடுக்கும் என இயற்கைப் பேரிடர் அடிக்கடி நடக்கும் என்பதால் ‘தைபே 101’ கட்டிடம் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் அனைத்துத் தளங்களுக்கும் கான்கீரிட் கட்டுமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மையப்பகுதியில் பதினாறு பிரம்மாண்ட இரும்பு தூண்களும், எட்டு துணைத் தூண்கள் சுற்றுப் பகுதியிலும் போடப்பட்டுள்ளது.
அதேபோல் கட்டிடத்தின் 87, 92 தளங்களுக்கு நடுவே பொருத்தப்பட்டுள்ள Tuned mass Damper மொத்த எடை மட்டும் 660 மெட்ரிக் டன். இந்த Damper கட்டிடத்தின் சிறு அதிர்வுகளைப் பதிவு செய்யும். இதனால் சிறு பாதிப்பைக்கூட ஆரம்பநிலையிலேயே தடுக்க உதவும்.
கட்டிடத்தில் உள்ள இரண்டு அடுக்குகளைக் கொண்ட மின் தூக்கி மணிக்கு ஆறுபது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. இக்கட்டிடத்தில் ஐந்தாவது தளத்திலிருந்து 89-தாவது தளத்துக்கு செல்ல வெறும் 37 விநாடிகளே ஆகும். இதுபோல் மொத்தம் 61 மின் தூக்கிகள் உள்ளன. உலகத்திலேயே அதிவேக மின் தூக்கி என்ற பொருமை கொண்டது. இக்கட்டிடத்தின் வெப்பதைத் தடுக்கும் யூவி கண்ணாடிகள் இக்கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
வானுயரம் கொண்ட ‘தைபே 101’ கட்டிடத்தின் 91 தளத்தில் இருந்து ஒட்டுமொத்த தைவான் நாட்டையும் பார்த்து ரசிக்க முடியும். பாதுகாப்புக் காரணங்களால் இக்கட்டிடத்தில் 101 தளத்திற்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ‘தைபே 101’ பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் இருபது சதவீதம் மறுசூழுற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு மின்சார சிக்கனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடம் என்ற (LEED) விருது இக்கட்டித்துக்கு வழங்கப்பட்டது. வாரத்தின் ஒவ்வொரு நாள் மாலையும் வானவில்லின் ஏழு நிறங்களை இக்கட்டிடம் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டும் ‘தைபே 101’ நிகழ்த்தப்படும் வானவேடிக்கைத் திருவிழாவை பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள்.