

பிளாஸ்டிக் தடை, அதிக ஒலியுள்ள தீபாவளிப் பட்டாசுகளுக்குத் தடை, மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூடல் என்று சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்ச்சி ஒருபுறம் அதிகமாகிறது. ஆனால் பெரிய அடுக்ககங்களில் வசிப்பவர்களும் பிரம்மாண்ட ‘மால்’களை உருவாக்குபவர்களும் தங்களுக்குக் ‘கீழே’ உள்ள நச்சுகள் குறித்துப் போதிய அளவு யோசிக்கிறார்களா என்பது கேள்விக்குறி.
‘பேஸ்மெண்டில்’ வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை அமைக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு இடப்பிரச்சினை குறைகிறது. கட்டிடத்தைச் சுற்றி ஏராளமான காலி இடம் விடத் தேவையில்லாமல் கார் நிறுத்த இடங்களைக் கட்டிடத்தின் அடிமட்டத்திலேயே இடம் உருவாக்குவது அவர்களுக்கு வசதிதான். ஆனால் அது எந்த அளவுக்குப் பாதுகாப்பு என்பதுதான் கேள்விக்குறி.
கார்களைத் தாறுமாறாக நிறுத்திவிவிட்டால் பிற கார்களை நிறுத்துவதோ வெளியே எடுப்பதோ பிரச்சினை ஆகலாம். ஆனால் இதைத் தாண்டியும் சில விபரீதங்கள் இதில் நேரலாம்.
போதிய விளக்குகளை இந்தப் பகுதிகளில் பலரும் நிறுவுவதில்லை. ‘கார்களை நிறுத்துவதற்குக் குறைவான ஒளி போதாதா? அங்கே என்ன படிக்கப் போகிறார்களா? எழுதப் போகிறார்களா?’ என்று கேட்கக் கூடாது. இது வேறு கோணத்திலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
குற்றங்கள் நிகழ்வதற்குத் தோதான இடம் அது. தனியாக வண்டிகளில் வருபவர்களிடம் வழிப்பறி செய்வதற்கு இது கொஞ்சம் வசதியான பகுதி.
பதற்றத்தோடு வெளிச்சமும் குறைவானதாக இருந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது சிக்கலாகிவிடும். தவிர குற்றவாளியின் முகத்தையும் குறைவான ஒளியில் சரியாக மனதில் பதிந்து வைத்துக் கொள்ள முடியாது. (குறைவான ஒளியில் சிசிடிவி கேமராக்களுக்கும் இதே சிக்கல்தான்).
காற்றோட்டம் குறைவான பகுதியாக இது இருக்கும். காரோடு ஓட்டுநரும் அங்கே நீண்ட நேரம் தங்கினால் அவரது சுவாச மண்டலம் நாளடைவில் பாதிக்கப்படலாம்.
வெள்ளம் மட்டுமல்ல, பெருமழை பெய்தால்கூட இந்த பேஸ்மெண்ட் கார் நிறுத்தங்களில் தண்ணீர் ஓரளவாவது தங்கிவிட வாய்ப்பு உண்டு. மழை வடிந்த பிறகும் பேஸ்மெண்டில் தண்ணீர் நிற்கலாம்.
தண்ணீர் சரியாக வடியவில்லை என்றால் தரை ஈரமாக இருந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
வேகக் கட்டுப்பாடு நிச்சயம் இருக்க வேண்டும். அதிகபட்ச வேகம் இவ்வளவு என்பதை அறிவிப்புப் பலகையில் எழுதி வைத்துவிட வேண்டும். அளவுக்கு அதிகமான வண்டிகள் நிறுத்தப்படக் கூடாது.
கார்களிலிருந்து நச்சுப்புகை ஓரளவாவது வெளியேற வாய்ப்பு உண்டு. அந்தப் புகை பேஸ்மெண்டில் சுழன்று கொண்டிருக்கக் கூடும். இது உடலுக்கு மிகவும் கெடுதல். பெரும் உடல் பாதிப்புகளில்கூட கொண்டு விடலாம்.
இந்தப் புகையின் முக்கிய வாயுவான கார்பன் மோனாக்ஸைடு பலவிதங்களில் மோசமானது. அதற்கு வாசம் கிடையாது. குறிப்பிட்ட எந்த வண்ணமும் கிடையாது. இதை சுவாசிப்பதன் அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்துவோம். தலை வலி, வயிற்றுவலி என்று இது சிறிய பாதிப்புகளில் தொடங்கக் கூடும்.
ஆக கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெளியேற்றாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே போதிய காற்று வெளியேற்றும் மின்விசிறிகள் (Exhaust Fans) பொருத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமல்ல இந்த கார்பன் மோனாக்ஸைடு மேற்புறமாகச் சென்று மேல் தளத்தை அடையக்கூட வாய்ப்பு உண்டு. சுவர்களின் வழியாகவும் புகுந்து செல்லக் கூடியது இந்த வாயு. எனவே இதன் அளவை அறிவிக்கும் ‘சென்சார்களையும்’ பேஸ்மெண்டில் பொருத்த வேண்டும்.
பேஸ்பெமண்டின் வெப்பம் சரியான அளவில் இருப்பது மட்டுமே போதாது. அங்குள்ள கார்களின் உள் சுத்தமும் கவனிக்கப்பட வேண்டும். இதில் கோட்டை விட்டால் பலவித பிரச்னைகள் வந்து சேரும்.
இப்போதெல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எப்படிக் கம்பி இல்லாமலேயே தொலைபேசி வந்து விட்டதோ (Cellphone) அதேபோல குழாய்கள் இல்லாமலேயே நச்சுக் காற்றை வெளியேற்றும் வழிமுறையும் (Ductless Ventilation) அறிமுகமாகிவிட்டது. பொருத்தப்படும் ஜெட் விசிறிகள் நச்சுக்காற்றை வெளியேற்றுகின்றன. தேவைப்படும்போது இவற்றைப் பயன்படுத்தினால் கூடப் போதும்.