

சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ‘எதற்காக ஃப்ளாட்டை வாங்குகிறீர்கள்? உங்களுக்கென்றே ஒரு வில்லாவை வாங்குங்கள்’ என்பதுபோல் விளம்பரம் செய்கிறார்கள்.
வில்லா என்பது என்ன? சில வெளிநாடுகளில் வில்லா என்பது வீட்டைவிடப் பெரியதாகவும், தனித்தோட்டம் அமைந்ததாகவும் இருப்பதைத்தான் ‘வில்லா’ என்கின்றனர். ஆனால், நமது நாடடில் வில்லா என்பது தனி வீடாகவும் இருக்கலாம். பொதுவான பிரிக்கும் சுவர் கொண்ட இரு வில்லாக்களாகவும் இருக்கலாம்.
வில்லா வாங்கலாமா, ஃப்ளாட் வாங்கலாமா? என்ற குழப்பம் சிலருக்கு உண்டாவதுண்டு. அவர்களுக்காக இந்தக் கட்டுரை.
ஒரே பரப்பளவு கொண்ட ஃப்ளாட்டைவிட வில்லாவின் விலை அதிகமாகத்தான் இருக்கும்.
ஃப்ளாட்டுக்கான பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும். ஏனென்றால், பொதுப் பகுதிகளுக்கான மின் கட்டணம், வாட்ச்மேனுக்கான ஊதியம், பொதுப் பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்பவர்களுக்கான ஊதியம், ஜிம் போன்றவற்றுக்கான செலவுகளை அனைத்து ஃப்ளாட்காரர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே, மாதப் பராமரிப்புத் தொகை (ஒப்பு நோக்குகையில்) குறைவாக இருக்கும். ஆனால், வில்லாவில் இவற்றுக்கான முழுச் செலவையும் நீங்கள்தான் ஏற்க வேண்டியிருக்கும்.
பெரும்பாலும் வில்லாக்கள் நகரிலிருந்து கொஞ்சமாவது தள்ளி இருக்கும் இடங்களில்தான் கிடைக்கும். ஃப்ளாட்கள் நகருக்குள்ளோ, நகரின் அருகிலோ கிடைக்கக் கூடும். நகருக்குள் இருப்பது உங்களுக்கு அவசியமா, தள்ளி இருப்பது பரவாயில்லையா, என்று யோசியுங்கள்.
வருங்காலத்தில் எதை விற்பது எளிது என்பதையும் நீங்கள் யோசிக்கலாம். கூட்டுக் குடும்பம் என்றால் வில்லாக்களை வாங்கக் கூடும். இருவர் அல்லது மூவருக்கான குடும்பம் என்றால் ஃப்ளாட்டே போதுமானது என்ற முடிவுக்கு வரலாம். எனவே, வருங்காலப் போக்கு எப்படி என்பதை நீங்கள் யோசிக்கலாம்.
வில்லாவைப் பொறுத்தவரை உங்கள் வீட்டில் நீங்கள் நினைக்கும் மாறுதல்களை உடனடியாகச் செய்து கொள்ள முடியும். ஃப்ளாட்களில் இதற்கான சுதந்திரம் குறைவு. முக்கியமாக வீட்டின் வெளிப்புறத்தில் நீங்களாகவே முடிவெடுத்து மாறுதல்களைச் செய்ய முடியாது.
எனவே, உங்களுக்கான சுதந்திரமான போக்கும் இதில் அவசியமாகிறது.
ஃப்ளாட் என்றால் ஜிம், நீச்சல் குளம் போன்ற பல பொது வசதிகள் இருக்கக் கூடும். வில்லாவில் இவை இருக்காது. தவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் அடுக்கங்களில் சிறப்பானதாக இருக்க வாய்ப்பு உண்டு.
ஃப்ளாட்களில் தங்கும்போது பிறருடன் கூடிப் பழகும் வாய்ப்பு அதிகம். இத்தனையும் படித்துவிட்டு உங்கள் மனம் அலைபாய்கிறதா, இரண்டின் சாதகமான அம்சங்களையும் பெற வேண்டுமானால் நீங்கள் ஒன்றைச் செய்யலாம். அடுக்கங்களைப் பொறுத்தவரை Gated Residential Complex என்று இருக்கும். அதே வளாகத்துக்குள் உங்களுக்கு வில்லா ஒன்று கிடைத்தால் வில்லா, அபார்ட்மெண்ட் ஆகிய இரண்டின் நன்மைகளையும் ஒரு சேரப் பெறலாம்.