

அருங்காட்சியகம் கலாச்சாரத்தின் களஞ்சியம். ஓவியம், சிற்பம் போன்ற பல்வேறு கலாச்சார அடையாளங்களைச் சேகரிப்பது அதன் முக்கியத்துவமான பணி. அறிவியல் நவீன காலத்தைச் சேர்ந்தது. இந்த இரண்டுக்குமான கலை அறிவியல் அருங்காட்சியகம் ஒன்று சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களை வரவேற்கும் கட்டிடம்
இந்த அருங்காட்சியகத்தில் கலை, அறிவியல், கலாச்சாரம், தொழில்நுட்பம், ஊடகம், புகழ்பெற்ற ஓவியங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மெரினா பே சாண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ளது இந்த ஆர்ட்சைன்ஸ் அருங்காட்சியகம். இதை வடிவமைத்தவர் இஸ்ரேலைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் மோஷி ஷப்தி.
இவர் மெக்கில் பல்கலைக்கழகத்தில் கட்டிடவியல் துறையில் பட்டம் பெற்றவர். பிரபல கட்டிடவியலாளரான லூயிஸ் கானிடம் சிறிதுகாலம் பணியாற்றினார். இவர் அமெரிக்க நாட்டின் கட்டிடக்கலைக்கான ராயல் தங்கப் பதக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த யோங்யாம் (Yongnam) நிறுவனத்தினர் அருங்காட்சியகத்திற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். முப்பரிமாண முறையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ள ஆர்ட்சைன்ஸ் அருங்காட்சியத்தை வரைய ‘டெக்லா பீம்’ (Tekla BIM) என்ற தொழில்நுட்பம் பயண்படுத்தப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கான வரைபடப் பணிகளை முடிக்க மட்டும் இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது.
அருங்காட்சியகம் கட்ட மொத்தம் ஐந்தாயிரம் இரும்பு பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் கடந்த 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இக்கட்டிடம் தாமரைபோல் காட்சியளித்தாலும் உண்மையில் அயல்நாட்டினரை வரவேற்கும் விதம் விரிந்த கையை பிரதிபலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் கட்டிடத்தினுள் நுழையும் வகையில் விரல்கள் போல் உள்ள தூண்களின் மேற்பகுதியில் கண்ணாடிக் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தின் நுழைவாயில் அருகே செயற்கை அல்லிக் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்துக்கான நீர், கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி வழி செலுத்தப்படுகிறது. அதேபோல் அருங்காட்சியகத்தின் கழிவறைகளுக்கும் இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.
50,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட அருங்காட்சியகத்தில் மொத்தம் 21 காட்சிக் கூடங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான லியோனார்டோ டா வின்சி, சால்வேட்டர் டால், ஆண்டி வார்ஹோல், வின்சென்ட் வான் கோக் ஆகியோரின் புகழ்பெற்ற ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் அறிவியலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இயற்பியல் செயல்விளக்கக் கூடம், புதைபடிவவியல் கூடம், கடல் உயிரினங்களுக்கான கூடம், அண்டம், விண்வெளி ஆய்வு ஆகியவை பற்றி அறிந்துகொள்வதற்கான கூடங்களும் உள்ளன.
முக்கியச் சுற்றுலாத்தளம்
சிங்கப்பூரின் முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்கும் இந்த ஆர்ட்சைன்ஸ் அருங்காட்சியகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். சிங்கப்பூரின் முக்கியச் சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இந்த அருங்காட்சியகம் ஐந்துக்கு 4.7 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. ஆர்ட்சைன்ஸ் அருங்காட்சியத்தில் க்யூரியாசிட்டி,இன்ஸ்பிரேஷன், எக்ஸ்பிரஷன் ஆகிய பெயர்களில் நிரந்தரக் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ‘த டீப்’ (The Deep) என்ற தலைப்பின் கீழ் உள்ள கூடத்தில் தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக ஆழ்கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாம் இதுவரை காணாத ஆழ்கடல் உயிரினங்கள் இங்குக் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ‘நோபல் பரிசு: உலகை மாற்றிய சிந்தனைகள்’ என்ற தலைப்பில் உள்ள கூடத்தில் நோபல் பரிசுப் பெற்றவர்கள் குறித்தும் அவர்களுடைய கண்டுபிடிப்புகள் உலகில் என்னமாதிரியான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்பதை விளக்குகிறது. ‘கலையும் அறிவியலும் சந்திக்கும் போது’ (Where Art meet Science) என்ற கூடத்தில் பிரபஞ்சத்தின் மாதிரியை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர். இந்தப் பிரத்யேகக் கூடத்தைப் பார்க்கவே ஏராளமான பார்வையாளர்கள் வருகிறார்கள்.
ஆர்ட்சைன்ஸ் அருங்காட்சியகத்தில் உலகின் முன்னனி அருங்காட்சியகங்களான பிரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன் அறிவியல் அருங்காட்சியகம், அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றின் சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இங்குவரும் பார்வையாளர்கள் சலிப்பு அடையாத வகையில் ஒவ்வொரு துறையினைச் சேர்ந்த வல்லூநர்கள் விளக்குகிறார்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், படவிளக்கம் ஆகியவை இங்கு நடத்தப்படுகிறது.