

உலகில் நான்காவது மிக நீளமான பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கபட இருக்கிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் கட்டிடக் கலை பொறுத்ததே. குவைத் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் ஒன்று. இந்த நிலையில் குவைத்தின் கட்டுமானத் துறை ‘ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சாபஹ்’ கடல் பாலம் மூலம் அடுத்தக் கட்டத்துக்கு அடி எடுத்து வைத்துள்ளது. இந்தப் பாலத்தை ஹூண்டாய் என்ஜினீயரிங் கம்பெனி 300 கோடி டாலர் மதிப்பில் கட்டி முடித்துள்ளது.
பட்டு நகரம் என்று அழைக்கப்படும் சுபையா நகரத்தில் முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. குவைத் நகரையும் சுப்பையா நகரையும் இணைக்கும் விதமாக ஏற்கெனவே தரைப் பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலம் வழியாகக் குவைத்தில் இருந்து சுப்பையா நகரத்துக்குச் சென்று அடைய 70 நிமிடங்கள் ஆகும். ஆனால் கடல் பாலத்தின் வழியாக 20 நிமிடத்தில் சென்று விடலாம். இந்தப் பாலம் 36 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கட்டப்பட்டுள்ளது. இதில் 27 கிலோமீட்டர் வரை கடலில் கட்டப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு இந்தப் பாலத்தின் பணிகள் தொடங்கின.
அத்துடன் பயன்பாட்டுக்கு வரும் நேரத்தில் 100 கோடி டாலர் அளவிற்கு முதலீடுகள் வரும் என்று குவைத் அரசு எதிர்பார்க்கிறது. 2006-ம் ஆண்டு உயிர் இழந்த மன்னர் ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சாபஹ் பெயர் இந்தப் பாலத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது.