

கனடாவில் உள்ள இஸ்மாயிலி மையம், வழிபாட்டுத் தலமாகவும், இஸ்லாம் மதத்தின் பண்பாடு, கல்வி ஆகியவற்றை அறிந்துகொள்ளும் அருங்காட்சியகமாகவும் உள்ளது. கனடாவில் உள்ள டொரண்டோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்மாயிலி மையம் உலகிலுள்ள இஸ்மாயிலி மையங்களில் ஆறாவதாகும். புகழ்பெற்ற ஆகா கான் அருங்காட்சியகத்தின் அருகில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன கட்டிடக் கலையைப் பயன்படுத்தி இஸ்லாம், கனடா நாட்டு வடிவமைப்பு முறைகளால் இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான சார்லஸ் கொரிய.
கனடா நாட்டில் வசிக்கும் இஸ்லாமியரின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று இஸ்மாயிலி மையம். இதற்கான பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூபாய் 30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இஸ்மாயிலி மையத்தில் இஸ்லாம் மதத்தின் பண்பாடு, கருத்தரங்குக் கூடம், நூலகம், வழிபாட்டு அரங்கு ஆகியவை உள்ளன.
இம்மையத்தின் பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு முடிக்கப்பட்டு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், அரசர் கரீம் ஆகா கானால் திறந்துவைக்கப்பட்டது. கனடா நாட்டிலுள்ள இஸ்லாம் மக்களின் வெளிப்பாடாக இஸ்மாயிலி மையம் உள்ளது.
கண்ணாடிக் கூரை
இக்கட்டிடத்தை வடிவமைத்த சார்லஸ் கொரிய இஸ்மாயிலி மையத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நவீனக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி இஸ்லாம் கலாச்சாரத்தைப் பறைச்சாற்றும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இஸ்மாயிலி மையத்தின் நுழைவாயிலில் அரபி மொழியில் அல்லாவின் வாசகம் இடம்பெற்றியிருப்பது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இக்கட்டிடத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது மையத்தில் உள்ள தொழுகை அறைதான். இந்த அறை முழுவதும் கண்ணாடி மேற்கூரைகயால் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாடத்தின் நடுவே பொருத்தப்பட்டுள்ள இரண்டு அடுக்குக் கண்ணாடிகளால் சூரிய வெப்பத்தைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தொழுகையில் ஈடுபடும் பக்தர்கள் பரந்து விரிந்த வானத்தைக் கண் கூசாமல் பார்த்து இயற்கையோடு இணைந்து தொழுகையில் ஈடுபட முடியும். இஸ்மாயிலி மையத்தைச் சுற்றியுள்ள பூங்காக்கள் வருடத்தின் நான்கு காலத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
நவீன இந்தியாவின் கட்டிடக் கலைஞர்
சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் கட்டிட வடிவமைப்பில் முக்கியமானவர் சார்லஸ் கொரிய. தன்னுடைய கல்லூரிப் படிப்பை மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் நிறைவு செய்த அவர், பின்னர் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்தார். உலக அளவில் சமகாலக் கட்டிடவியலாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் சார்லஸ் கொரிய, தன்னுடைய கட்டிட வடிவமைப்பியல் முறையால் உலகப் புகழ்பெற்றவர்.
இவரின் முதன்மையான படைப்பு சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகம்தான். அதேபோல் ஏழை, நடுத்தர மற்றும் பணக்கார மக்களுக்கு ஏற்றாற்போல் ‘நவி மும்பை’ என்றழைக்கப்படும் புதிய மும்பை மாநகரத்தின் குடியிருப்புகளை வடிவமைத்தவர் இவரே.
மத்தியப்பிரதேச சட்டமன்றம், புது டெல்லியில் உள்ள தேசிய கைவினை அருங்காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில், பாஸ்டனில் உள்ள எம்ஐடி, கொல்கத்தாவில் உள்ள சிட்டி சென்டர் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தேசிய நகரமயமாக்கல் ஆணைத்தின் தலைவராக சார்லஸ் கொரிய செயல்பட்டவர். தன்னுடைய கட்டிட வடிவமைப்பால் நாட்டின் பெருமையை உயர்த்திய சார்லஸ் கொரியவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளது.
அதேபோல் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் பிரிட்டிஷ் கட்டிடவியல் நிறுவனம் சார்பாக உயரிய விருதான ராயல் தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய கட்டிடக் கலைஞர் என்ற புகழுக்குச் சொந்தமான சார்லஸ் கொரிய 2015-ம் ஆண்டு தன்னுடைய 84-வது வயதில் மறைந்தார்.