

நகரமயமாதலின் விளைவாக நகரங்களையொட்டிய கிராமங்கள்கூட வேகமாக வளர்ந்துவருகின்றன. குடியிருப்புகள் பெருகுகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால், மரங்களை அழித்த புண்ணியத்தால், மழை பொய்த்து வறட்சியும் புவி வெப்பமடைதல் பிரச்சினையும் உலகை ஆட்டிப்படைத்துவருகின்றன. இப்போதுதான் மரங்களின் மகத்துவத்தை மனிதன் உணர ஆரம்பித்திருக்கிறான். அதற்காக அழிக்கப்பட்ட மரங்களை உடனே கொண்டு வர முடியுமா என்ன?
இதற்கு என்ன தான் தீர்வு என்று இத்தாலியில் மிலன் நகரில் உள்ள ஸ்டெபனோ போரி என்ற கட்டிடக் கலைஞர் யோசித்ததன் விளைவுதான், அபார்ட்மென்ட் காடு! ஏராளமான மரம், செடிகளுடன் கூடிய பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை அவர் உருவாக்கி காட்டியிருக்கிறார். 2009-ம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஐந்து ஆண்டுகள் நடந்த இதன் கட்டுமான பணிகள் 2014-ம் ஆண்டில் முடிந்தது. சுற்றுச்சூழலை ஆராதிக்கும் இந்த அடுக்குமாடி காடு குடியிருப்பு ஏராளமான சர்வதேச விருதுகளையும் வாங்கி குவித்தது.
இந்தக் குடியிருப்பு எப்படி சாத்தியம்? 27 மாடிகளுடன் கூடிய அபார்ட்மென்ட் இது. இங்கு அனைத்து தளங்களிலும் மரம், செடி, கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 730 மரங்கள், 11 ஆயிரம் செடிகள், 5 ஆயிரம் புதர் மற்றும் குரோட்டன்ஸ் வகைகளை இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துள்ளார்கள்.
ஏறக்குறைய இரண்டரை ஏக்கர் பரப்பில் வளரும் அளவுக்கான தாவரங்கள் இந்த அடுக்குமாடியில் வளர்ந்துள்ளன. ‘வானுயர அமைக்கப்படும் காடு’ என்று பொருள்படும் வகையில் ‘பாஸ்கோ வெர்ட்டிகல்’ என்று இதற்கு பெயர் சூட்டினார்கள்.
மரம், செடிகள் நடுவதற்காக கட்டிடம் உருவாக்கக் கூடாதா என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் ‘பாஸ்கோ வெர்ட்டிகல்’ அடுக்குமாடி. வெப்பம், மாசு பாதிப்பு ஆகியவற்றில் இருந்து மனிதர்களைக் காப்பவை தாவரங்களே. இந்தச் சுகம் தரையில் வீடு அமைப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அடுக்குமாடிவாசிகளுக்கும் இது வாய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தக் குடியிருப்பை உருவாக்கியதாகக் கூறுகிறார் ஸ்டெபோனோ போரி. அபார்ட்மென்ட் விலை ரூ.4.35 கோடி முதல் 13.25 கோடி வரை. இங்கு குடியிருக்க வருபவர்களுக்கு வீடுகள் மட்டுமே சொத்து. எல்லா தாவரங்களும் பொதுச் சொத்து என்ற நிபந்தனைகளைப் போட்டு வீடுகளை விற்றிருக்கிறார்கள்.
புயல் மழைக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் மரங்கள் செழிப்பதற்கேற்ப தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நாமும் முயற்சிக்கலாம்தானே?