

மணிலாவின் மக்கள் தொகை 1.2 கோடி. இவர்களில் 40 லட்சம் பேர் மேம்படுத்தப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர். அடுத்த மூன்றாண்டுகளில் இந்த நகருக்குச் சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்குக் குடியிருப்புகள் வழங்குவது வளர்ந்துவரும் இந்த நகருக்கு ஒரு சவாலாக இருக்கும்.
அந்தச் சவாலைச் சமாளிக்கும் வகையில், குறைந்த செலவில் வீடு ஒன்றை ஏர்ல் பேட்ரிக் ஃபார்லேல்ஸ் என்பவர் உருவாக்கியுள்ளார். முற்றிலும் மூங்கிலைக்கொண்டு கட்டப்பட்ட அந்த வீட்டைக் கட்டுவதற்கு 1 சதுர அடிக்குச் சுமார் 350 ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. வழக்கமான வீட்டை விடவும் கூடுதல் வசதிகொண்ட இந்த மூங்கில் வீட்டை 4 மணி நேரத்துக்குள் கட்டிவிட முடியும். தாம் உருவாக்கிய வீடு நடைமுறைக்கு உகந்த வீடு என்கிறார் பேட்ரிக்.
இந்த மூங்கில் வீட்டுக்கு ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் சர்வேயர்ஸ்' அமைப்பு ரூ.46 லட்சம் மதிப்புள்ள பரிசை அளித்துள்ளது. இந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ‘கியூபோ' சமுதாய வீடு கட்டும் திட்டத்துக்கான மாதிரியை உருவாக்கப் பாடுபடப் போகிறாராம் அவர்.
உலகின் முதல் கடல் விடுதி
மாலத் தீவில் உலகின் முதல் கடல் விடுதி திறக்கப்பட்டுள்ளது. முரகா எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த தங்கும் விடுதி 16 அடி ஆழத்தில் கடலுக்குள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த விடுதி உலகின் அதிசய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் விரைவில் இடம் பிடிக்கப் போகிறது. இந்த விடுதி தொடக்க நிலைக் கட்டுமானங்கள் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டன.
பிறகு அது மாலத் தீவுக்குக் கொண்டுவரப்பட்டு நிர்மானிக்கப்பட்டது. இந்த விடுதியை வடிவமைத்த மாலத் தீவின் பிரபல விடுதி வடிவமைப்பாளரான அகமத் சலீம், “தானும் தன் சகாக்களும் செய்தது உண்மையில் ஒரு வரலாற்றுச் சாதனைதான்” என வியந்துள்ளார்.