

அறிவியலின் வளர்ச்சி, கட்டிடக் கலையில் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளது. இதைச் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பார்க்க முடிகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் கட்டப்பட்ட ஷூ வீடு இதற்கு ஒரு சான்று.
ஷூவை வீட்டுக்குள்ளேயே கொண்டுசெல்ல மாட்டோம். ஆனால் அந்த ஷூ போலவே ஒருவர் வீடு கட்டியுள்ளார். கார்னல் மாலோன் என். ஹைனெஸ் என்பவர்தான் இந்தக் கட்டிடத்திற்குச் சொந்தக்காரர். சரி ஏன் ஷூ போல ஒரு வீடு கட்ட வேண்டும் என்கிறீர்களா?
இந்த ஹைனெஸ் ஒரு ஷூ வியாபாரி. அவருக்கு 40க்கும் மேற்பட்ட ஷூ கடைகள். ஷூதான் அவரது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம். அதனால் ஷூவுக்கு மரியாதை செய்ய நினைத்தார். ஒரு நாள் கட்டிடப் பொறியாளார் ஒருவரைச் சந்தித்து வீடு கட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளார். அவரும் பலவிதமான மாடல்களை இவருக்குக் காண்பித்துள்ளார்.
ஆனால் திருப்தியாகவில்லை. தன் ஷூவைக் கழற்றிக் காட்டி, “இதுபோல ஒரு வீடு வேண்டும்” என்றுள்ளார். சற்றே அதிர்ச்சி அடைந்தாலும் அந்தப் பொறியாளர் ஹைனெஸின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டார். அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் உள்ள இந்தக் கட்டிடம் 1948-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இது 48 அடி நீளமும் 25 அடி உயரமும் கொண்டது. சுற்றிலும் மரச்சட்டகத்தாலும் சிமெண்ட் மேல் பூச்சாலும் சூழப்பட்டுள்ளது. உள் அலங்காரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விருந்தினர் இல்லமான இது மூன்று படுக்கைகளும் இரு குளியலறைகளும் சமையலறையும் வரவேற்பறையும் கொண்டது.