

சென்னையில் ஐஸ் ஹவுஸ் என்று ஓர் இடமுண்டு. பனிக்கட்டிகளை வைக்க அது ஒரு சேமிப்புக் கிடங்காகப் பயன்பட்டதால் அந்தப் பெயர். இப்போது அந்த இடத்தில் விவேகானந்தர் இல்லம் செயல்படுகிறது.
ஆனால் பனிக்கட்டியால் உருவாக்கப்பட்ட ஒரு வீடு என்றால் எப்படியிருக்கும்?
‘எஸ்கிமோக்கள் வசிக்கும் இக்ளூதானே?’ என்று கேட்கிறீர்களா? மிகச் சரி. ஆர்க்டிக் பகுதிகளில் அவர்கள் இப்படித் தங்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது?
பார்ப்பதற்கு இது அரைக்கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளிக்கிறது. என்றாலும் உண்மையில் இது பரவளையவுரு (paraboloid) வடிவம் கொண்டது. இந்த வடிவம் மிக அழுத்தத்தில் அந்த ஐஸ்கட்டிகள் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதற்கு உதவுகிறது.
கனடாவின் வட எல்லையில் வாழும் பழங்குடியினர் இனோயிட் என்பவர்கள். மழைக் காலத்தில் வேட்டையாடுபவர்களால் இந்தப் பனிக்கட்டி வீடுகள் தற்காலிக வாழும் இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
எந்த வகைப் பனிக்கட்டியை வேண்டுமானாலும் இந்த வீடுகளைக் கட்டப் பயன்படுத்திவிட முடியாது. அவை சரியான வகையில் வெட்டுவதற்கு உகந்ததாக இருக்க வேண்டும். அவை அடுக்குவதற்கு இடம் தரும் வகையிலும் இருக்க வேண்டும். உறுதியானவையாகவும் இருக்க வேண்டும். இத்தனை தகுதிகளும் கொண்டதாகக் காற்றால் அடித்து வரப்பட்ட பனிக்கட்டிகள்தாம் கருதப்படுகின்றன. இந்த வகைப் பனிக்கட்டிகள் ஒன்றோடொன்று பிணைந்து இறுக்கமாக உள்ளன.
வாசல் கதவைத் திறக்கும்போது குளிர்க்காற்று வேகமாக உள்ளே செல்லக் கூடாது. வெப்ப இழப்பும் இருந்துவிடக் கூடாது. இதற்காக இக்ளூ வீடுகளின் வாசல் பகுதியில் குறுகலான ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இந்த வகை வீடுகளின் உட்புறத்தைத் தோலால் மூடுவதும் உண்டு. இதன் காரணமாக உள்ளே இருக்கும் வெப்பநிலை இரண்டு டிகிரியிலிருந்து 15 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.
பொதுவாக மூன்று வகை இக்ளூக்கள் உண்டு. அவற்றின் பரப்பளவும், நோக்கமும் வெவ்வேறானவை. மிகச் சிறிய பனிக்கட்டி வீடுகள் தற்காலிகத் தங்குதலுக்குப் பயன்படுகின்றன. அதாவது ஓரிரு இரவுகள் மட்டும் தங்க இவை உதவுகின்றன. நடுத்தர அளவு இக்ளூக்கள் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்றவை. ஒரே ஒரு அறை கொண்டவை. இதில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் தங்க முடியும். அடுத்தடுத்து பல வீடுகள் இப்படிக் கட்டப்படும். காலனி அல்லது கிராமமாக இவை விளங்கும்.
மிகப் பெரிய இக்ளூக்கள் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். ஒன்று தற்காலிகமாகத் தங்குவதற்கும். மற்றொன்று நிரந்தரமாகத் தங்குவதற்கும். இவற்றில் ஐந்து அறைகள்கூட இருக்கும். அதிகபட்சம் இருபதுபேர்கூடத் தங்கலாம். சிலசமயம் சின்னச் சின்ன இக்ளூக்களைச் சுரங்கப்பாதைகளின் மூலம் இணைத்துப் பல குடும்பங்கள் அங்கே தங்குவதும் உண்டு.