

கலைத்துறைச் சேர்ந்த கலைஞர்களுக்கு எல்லாம் பூமியில் உள்ள சொர்க்கமாக உள்ளது காஃப்மன் கலாச்சார மையம். உலகின் முக்கியமான கலாச்சார மையமாக உள்ள இதை வடிவமைத்தவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மோஷி ஷிப்தி (Moshe safdi).
இதுபோல் ஒரு கட்டிடம் வடிவமைக்க வேண்டும் என ஜூலியா காஃப்மன் பேசிக்கொண்டிருந்த போதே தன் அருகில் இருந்த மேஜை விரிப்புத் துணியில் காஃப்மன் கலாச்சார மையத்துக்கான ஓவியத்தை வரைந்தார் மோஷி. நிகழ்காலத்தில் அவருடைய கால்கள் தரையில் இருந்தாலும் அவரின் சிந்தனைகளில் எப்போதும் புதுப் புதுக் கட்டிடங்கள் உருப்பொறுகின்றன.
முதல் கண்காட்சி முதல் பரிசு
தற்போது எண்பது வயதாகும் மோஷி சிரியா யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 1961-ம் ஆண்டு மேக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill university) கட்டிடவியலில் பட்டம் பெற்றார். பிரபல கட்டிடயவியலாளரான லூயிஸ் கானிடம் பயிற்றுனராகச் சிறிதுகாலம் பணியாற்றினார். பிறகு கனடாவில் நடைபெற்ற ‘எக்ஸ்போ 67’ மாநாட்டில் கலந்துகொண்டு தன்னுடைய கட்டிட வடிவமைப்பியல் மாதிரிகளைக் காட்சிப்படுத்தினார்.
இந்தக் கண்காட்சியில் அனைவரும் வியக்கும் வகையில் முப்பரிமாண வடிவில் ‘ஹேபிட்டட் 67’ கட்டிடத்தின் மாதிரியைக் காட்சிப்படுத்தியிருந்தார் மோஷி. இந்த வித்தியாசமான கட்டிடம் கட்டிடவியல் வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து அவருக்கும் கண்காட்சியின் சிறந்த கட்டிடவியலாளருக்கான விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு 1964-ம் ஆண்டு கண்காட்சியில் மாதிரியாக வைத்திருந்த ‘ஹேபிட்டட் 67’ வை நிஜ உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இந்தக் கட்டிடம் கனடா நாட்டிலுள்ள மாண்டரீல் மாநகராட்சியில் தற்போதும் உள்ளது.
சீக்கியப் பண்பாட்டைப் படித்தவர்
ஜெருசுல நகரின் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றிய மோஷி 1978-ம் ஆண்டு ஹாவர்டு பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற வடிவமைப்பியல் பள்ளியின் இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990-ம் ஆண்டுவரை ஆசிரியர் பணியில் இருந்தார் மோஷி. பிறகு தன்னுடைய கட்டிடவியல் துறையில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
கனடா தேசிய அருங்காட்சியகம் உட்பட கனடா நாட்டில் ஆறு அரசு நிறுவனங்கள் வடிவமைத்துள்ளார் அவர். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ‘சால்ட் லேக் நகர பொது நூலகம்’, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துள்ள கால்ஸ் ஹிரிட்டேஜ் சென்டரை வடிவமைத்துள்ளார்.
இந்தக் கட்டிடம் வடிவமைப்பதற்கு முன்பு மோஷ் சீக்கிய வரலாற்று நூல்களை இரண்டு வருடங்கள் தொடர்ந்து படித்தார். பிறகு கால்ஸ் ஹிரிட்டேஜ் சென்டர் பார்ப்பதற்கு 300 ஆண்டுகள் பழமையான கட்டிடமாக இருப்பது போல் வடிவமைத்துள்ளார். மோஷியின் இந்த ஈடுபாடு இன்றைய தலைமுறை கட்டிடவியலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
அதேபோல் சிங்கப்பூரில் உள்ள ‘மெரேன் பே சான்டு’ ஆகிய கட்டிடங்கள் இவரின் கட்டிடக்கலையின் சிறப்பை உணர்த்துபவையாக உள்ளன. நவீனக் கட்டிடவியலுக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான வளைவுகள், ஜாமென்ட்ரிக் வடிவங்கள் ஆகியவற்றின் தாக்கத்தை இவரின் கட்டிடங்களில் காணலம்.
நகரைப் பிரதிபலிக்கும் கண்ணாடி
இதனையெடுத்து முரீல் காஃபமன் நினைவாக அவரின் மகள் ஜூலியா ஐரின் காஃபமன் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கலாச்சார மையத்தை நிறுவ ஆசைப்பட்டார். இதற்காக அவர் மோஷி ஷப்தியை அணுகினார். 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள காஃபமன் கட்டிடத்திற்கான பணிகள் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக அளவில் மிகவும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்டது காஃபமன் கலாச்சார மையம்.
இந்தக் கலாச்சார மையத்தின் முக்கியமான பிராண்டுமியர் ஹால் சீலிங் கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது. அதேபோல் ஹாலில் சாய்வாகப் பொருத்தப்பட்ட கண்ணாடியால் கான்ஸ் நகரின் பிரதிபலிப்பை முழுமையாகப் பார்க்க முடியும். மொத்தம் 413 மில்லயன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள காஃபமன் கலாச்சார மையம் 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தக் கலாச்சார மையத்தில் இரண்டு பெரிய கான்சர்ட் ஹால்கள் உள்ளது.
இங்கே தங்களுடைய நடிப்பு, பாடல், ஆடல் மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தவரும் கலைஞர்களுக்காக 250 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்ச்சியை ஒத்திகை பார்க்க 11 அறைகள் உள்ளது. காஃபமன் கலாச்சார மையத்தின் முக்கிய அரங்கமான முரில் காஃபமன் அரங்கில் மட்டும் 1,800 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.
இந்த அரங்கத்தில் உள்ள ஓப்ரா ஹவுஸ் ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் அந்த அரங்கத்தில் பல பால்கனிகளும் உள்ளன. மற்றொரு அரங்கமான ஹெல்ஸ்பெர்க் ஹாலில் 1,600 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.
மேடையில் இருந்து நூறு மீட்டர் அகலத்தில் பார்வையாளர்கள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுவாகப் பாணியில் அல்லாமல் நீள்வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அரங்கம். இந்த அரங்கத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் கான்ஸ் நகரின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் தொடங்கும்.