

இங்கிலாந்தின் பனிபடர்ந்த மேகங்களைத் தன்னுடைய கூர்மையான கண்ணாடியால் உரசிப் பார்த்துக்கொண்டிருக்கிறது அந்நாட்டின் மிக உயரிய கட்டிடமான ‘ஷார்டு’. எண்ணூறு அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான கண்ணாடிகளால் போர்த்தப்பட்டுக் காட்சியளிக்கும் ஷார்டு, உலக அளவில் மிக உயரமான கட்டிடங்களின் வரிசையில் 96-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்தின் அடையாளமாகிப்போன இந்த ஷார்டு கட்டிடத்தை வடிவமைத்தவர் அதிநவீனக் கட்டிடக் கலைக்கு வித்திட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரென்சோ பியானோ.
ரென்சோ பியானோ குடும்பத்தில் அனைவருமே கட்டிடக்கலை பயின்றவர்கள். மிலன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் கட்டிடவியல் படித்த ரென்சோ, தொடக்கத்தில் எடைகுறைவான பொருட்களை வைத்து சிறு குடியிருப்புகளை வடிவமைக்கத் தொடங்கினார். பிறகு பிரபலக் கட்டிடக் கலைஞர்களான Louis kahn, Z S Makowski ஆகியோரிடம் தன்னுடைய கட்டிடக் கலைத் திறமையை மேம்படுத்திக்கொண்டார்.
அதன்பிறகு 1968-ம் ஆண்டு ஸ்டீல், ரீஇன்போர்ஸ்டு பாலியெஸ்டர் (Reinforced polyester) பொருட்களைப் பயன்படுத்தி இத்தாலியின் ஜெனோவாவில் ஐபிஈ (IBE) தொழிற்கூடத்தை வடிவமைத்தார். பின்னர் 1970-களில் பிரபல பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ரிச்சர்டு ரோஜருடன் இணைந்து பியானோ அண்டு ரோஜர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். அப்போது அவர்களுக்கு பாரிஸ் நகரில் அமைந்துள்ள Centre Pompidou கட்டிடத்தை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஐந்து ஏக்கர் பரப்பளவில் 15 ஆயிரம் டன் எஃகைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் 1974-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தேசிய நூலகம், நவீன ஓவிய அருங்காட்சியகம், இசை அரங்கு எனப் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய இந்தக் கட்டிடத்தை இதுவரை பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
அதேபோல் சர்வதேச அளவில் நடைபெற்ற கட்டிட வடிவைமைப்புப் போட்டியில் Centre Pompidou முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட 681 கட்டிடங்களின் விண்ணப்பங்களைத் தாண்டி உலக அளவில் புகழ்பெற்ற கட்டிடவியலாளர்களால் Centre Pompidou தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீளமான நுழைவாயில்
1980-ல் இருந்து தனியாகச் செயல்படத் தொடங்கிய ரென்சோ பியானோ மீனில் கலைக்கூடம், ஜெனோவாவின் பழைய துறைமுகத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்றியது எனத் தன்னுடைய கட்டிட வடிவமைப்புக் கலையை விஸ்தரிக்கத் தொடங்கினார். இவர் 1991-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கான்சாய் சர்வதேச விமான நிலையத்தை வடிவமைத்ததுக் கட்டிட வடிவமைப்பாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் மட்டும் 1.7 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. ஐப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த அதிநவீன விமான நிலையம் ஹைட்ராலிக் இணைப்பால் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் மொத்தம் 82 ஆயிரம் இரும்பு வளைவுகள் இந்த விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
இவரின் கட்டிட வடிவமைப்பியலைப் பாராட்டி கட்டிட வடிவமைப்பியல் துறையில் சிறந்து விளங்கு பவர்களுக்கு வழங்கப்படும் கட்டிடக்கலைக்கான அசோசியேஷன் ப்ரெமியம் இம்பீரியல் விருதை 1995-ம் ஆண்டு பெற்றார் ரென்சோ.
அறிவியல் கட்டிடம்
அதேபோல் நெதர்லாந்தில் இவர் 1997-ம் ஆண்டு வடிவமைத்த நீமோ அறிவியல் அருங்காட்சியகம் அறிவியல் துறையில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டிய இடமாகும். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்த அறிவியல் அருங்காட்சியகத்தை இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். நெதர்லாந்து நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள இந்த அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் டிஎன்ஏ-வின் சங்கிலித் தொடர் நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அறிவியல் பரிசோதனையில் பார்வையாளர்கள் ஈடுபடவும் இந்த அருங்காட்சியகம் ஊக்குவிக்கிறது. பிரான்ஸ் நாட்டிலுள்ள கனக் (kanak) பழங்குடிகளின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட Jean-Marie Tjibaou Cultural Centre ரென்சோ பியானோ பணியில் குறிப்பிடத்தக்க கட்டிட வடிவமைப்பாகும். மரத் துண்டுகள், இரும்பு ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
கனக் பழங்குடிகளில் குடியிருப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் இதழின் அலுவலகம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை வடிவமைத்துள்ளார் ரென்சோ. கட்டிட வடிவமைப்பியல் துறையில் அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்திய ரென்சோ பியானோ 1998-ம் ஆண்டில், புகழ்பெற்ற பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புக்கு: renugadevi.l@thehindutamil.co.in