

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களின் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இந்தக் காட்சியில் கற்றாழை நாரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட அழகுப் பதுமைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது திருநெல்வேலி மாவட்ட சுய உதவிக் குழுவினரின் படைப்பு.
சிவகங்கை மாவட்ட சுய உதவிக் குழுவினர் நாட்டர் ஓவியங்கள் வரைந்துவைத்திருக்கிறார்கள். அதுபோல விழுப்புரம் மாவட்ட மாவட்ட சுய உதவிக் குழுவினர் கோரைப் புற்களின் கடிதத் திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். இதுபோன்று கண்ணைக் கவர்ந்த பயனுள்ள பொருட்களின் தொகுப்பு இது:
அழகான குப்பைத் தொட்டி
இன்று பிளாஸ்டிக் பொருளான குப்பைத் தொட்டிகள் அதிகமாகச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதற்கு மாற்றாகக் காகிதம், அட்டை ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குப்பைத் தொட்டியை திருவள்ளூர் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இது லெதராய்டு என்னும் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பல வண்ணங்களில் கிடைக்கும் இந்தக் குப்பைத் தொட்டிக் கண்ணைக் கவர்வதாக இருக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.200. தொடர்புக்கு: 8754812060
நாட்டார் தெய்வ ஓவியங்கள்
சிவகாசி காலண்டர் மூலம் சரஸ்வதி, லஷ்மி, பிள்ளையார் போன்ற பெருந்தெய்வங்கள் நம் வீட்டை அலங்கரிக்கின்றன. பிறகு தனிப் படங்களாகவும் இவற்றை வாங்கி வீட்டில் மாட்டும் பழக்கமும் இருக்கிறது. இதற்கு மாற்றாக சிவகங்கை மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் நாட்டார் தெய்வங்களின் ஓவியங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதன் தொடக்க விலை ரூ.60.
தொடர்புக்கு: 8489205455
கோரைப் புல் திரை
விழுப்புரம் மாவட்ட சுய உதவிக் குழுவினர் கோரைப் புல்லைப் பயன்படுத்தித் தயாரித்த ஜன்னல், நிலைத் திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். இதுமட்டுமல்லாமல் கோரைப் புல்லைப் பயன்படுத்தி பைகள், கடிதப் பைகள் உள்ளிட்ட பல பொருள்களை இவர்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். கோரைப் புல் திரை ரூ.200-லிருந்து ரூ.1000 வரை பல அளவுகளில் கிடைக்கிறது. இந்தத் திரை வீட்டுக்கு ஆரோக்கியமானது. கடிதங்களை வைப்பதற்கான பை, சாவித் தூக்கியுடன் சேர்த்து விலை ரூ.150-லிருந்து கிடைக்கிறது.
தொடர்புக்கு: 8056541495
கற்றாழை மேஜை விரிப்பு
திருநெல்வேலி மாவட்ட சுய உதவிக் குழுவினர் கற்றாழை நாரில் பலவிதமான அழகு சாதனப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். மேஜை விரிப்பு அவற்றுள் சிறப்பானது. இதன் தொடக்க விலை ரூ.150. தொடர்புக்கு: 8778972129