

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீட்டைத் தங்களுடைய ரசனைக்கேற்றபடி வடிவமைப்பது எளிமையான விஷயமல்ல. வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வீட்டின் உரிமையாளர்கள் தங்களிடம் எப்படி வீட்டை ஒப்படைத்தார்களோ அப்படியே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிய வடிவமைப்பு மாற்றங்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால், வாடகை வீட்டில் வசிப்பவர்களாலும் வீட்டின் அடிப்படைத் தோற்றத்தை மாற்றாமல் சில உள் அலங்கார மாற்றங்களைச் செய்ய முடியும். அதற்கான சில ஆலோசனைகள்...
# வாடகை வீட்டில் வசிப்பவர்கள் முதலில் எதிர்கொள்ளும் பிரச்சினை இடப்பற்றாக்குறை. இதற்குத் தீர்வாக, அவர்கள் ஒரே அறையை இரண்டு விதமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி வடிவமைக்க முடியும். சமையலறைச் சற்றுப் பெரிதாக இருந்தால், சமையல் மேடைக்குப் பக்கத்தில் இரண்டு நாற்காலிகளைப் போட்டு அதைச் சாப்பாட்டு மேசையாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். வீட்டின் வரவேற்பறைச் சுவரில் புத்தக அலமாரியை அமைத்து, வரவேற்பறையின் ஒரு பகுதியை வாசிக்கும் அறையாகப் பயன்படுத்தலாம்.
# வீட்டின் உள்புற அலங்காரத்துக்கு மரம், வெல்வெட், துணி, பீங்கான் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இந்தப் பொருட்களால் வடிவமைக்கும்போது வீட்டுக்கு மென் அலங்காரத் தோற்றம் கிடைக்கும்.
# வாடகை வீட்டின் வண்ணத்தை நினைக்கும்போது மாற்ற முடியாது என்பது ஒரு பிரச்சினை. அதனால், வாடகை வீட்டுக்குக் குடிபோகும்போதே வெள்ளை வண்ணத்தைச் சுவருக்கு அடிக்கச் சொல்லிவிடுங்கள். வெள்ளை நிறம் வீட்டைப் பெரிதாகவும் பளிச்சென்றும் காட்டுவதற்கு உதவும்.
# வாடகை வீட்டில் செடிகள் வளர்க்க வசதியில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. வீட்டின் வரவேற்பறையில், ஜன்னல்கள் இருந்தால் ஒரு பெரிய செடியை வாங்கி வெளிச்சமிருக்கும் மூலையில் வைக்கலாம். இந்தப் பெரிய செடி வீட்டுக்கு உள்ளேயே ஒரு சின்ன தோட்டம் வைத்த மனத்திருப்தியைக் அளிக்கும். அத்துடன், வீட்டின் உட்புறக் காற்றையும் சுத்தப்படுத்த வழிவகுக்கும்.
# சுவருக்கு வண்ணமடிக்க முடியாத அறையின் தோற்றத்தை மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. அதனால், புதுமையான வடிவமைப்புகளில் கிடைக்கும் அறைப் பிரிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் அறையின் தோற்றத்தை மாற்றலாம். இந்தப் புதுமையான அறைப் பிரிப்பான்களால் குழந்தைகளுக்குத் தனியாக ஒரு விளையாட்டு அறையையும் உங்களுடைய அறையில் அலுவலக அறையையும் உருவாக்க முடியும்.
# அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட தரைவிரிப்புகளைப் பயன்படுத்துவதனால் அறைக்குப் பன்முகத் தோற்றத்தைக் கொடுக்க முடியும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் குஷனுடன் இருக்கும் தரைவிரிப்புகளை வாங்கிப் பயன்படுத்தலாம். இது குழந்தைகள் கீழே விழும்போது அடிபடுவதைத் தடுக்க உதவும்.
# வீட்டில் இருக்கும் பொருட்களை அலங்கரிப்பதால்கூட வீட்டின் தோற்றத்தை ஆடம்பரமாக மாற்றலாம். அதை ‘வஷி டேப்’ (Washi Tape) உதவியோடு எளிமையாகச் செய்யலாம். உதாரணத்துக்கு, உங்களது ‘ஃப்ரிட்ஜ்’ பொலிவிழந்து போயிருந்தால், ‘கோல்ட் டக்ட் டேப்’ (Gold Duct Tape) ஒட்டி அதற்குப் புதுத் தோற்றத்தைக் கொடுக்கலாம். இது சமையலறைக்குப் புதுப் பொலிவைக் கொடுக்கும். ‘வஷி டேப்’பைச் சுவர் அலங்காரத்துக்கும் பயன்படுத்தலாம்.