வெறும் சுவர் அல்ல 04: கட்டுமானம் என்னும் அறிவியல்

வெறும் சுவர் அல்ல 04: கட்டுமானம் என்னும் அறிவியல்
Updated on
1 min read

இன்றைய சூழலில் கட்டுமானப் பணியில் வடிவமைப்பாளர், பொறியாளர், மேஸ்திரி ஆகிய மூவர் முக்கியமானவர்கள். இவர்களில் வடிவமைப்பாளர்களும் பொறியாளர்களும் தொழில் சார்ந்த படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேலையைச் செய்கிறார்கள். கட்டிட மேஸ்திரிகள் தங்கள் தொழில் அனுபவத்தின் அடிப்படையில் வீடு கட்டுகிறார்கள்.

வீடு கட்டுவது என்பது ஓர் அறிவியல் சார்ந்த கலைநுணுக்கமான வேலை. வீடு கட்டும் ஒவ்வொரு படிநிலையிலும் அதற்கான அறிவியல் காரணங்கள் உள்ளன. உதாரணமாக ஜன்னலின் கீழ் மட்டத்தில் 3 அங்குல கனத்துக்கு கான்கிரீட் இடப்பட வேண்டும். இது ‘SILL SLAB’ என்று அழைக்கப்படுகிறது.

நாளடைவில் ஜன்னலின் கீழ்புறத்தில் 45 டிகிரி கோணத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது. ஜன்னலுக்காக விடப்பட்ட இடைவெளியின் ஓரத்தில் செங்கல் கட்டுவேலையின் ஒட்டுமொத்த எடை நேரடியாக இறங்குவதால் ஏற்படக்கூடிய அழுத்தம் தாங்காமல் இந்த விரிசல் ஏற்படுகிறது. அந்த அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் SILL SLAB அமைக்கப்படுகிறது.

இதைப் போன்று அடிப்படை அறிவியல் காரணத்தோடு கூடிய பல வித பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் உள்ளன. இவற்றை முழுமையாக அறிந்த ஒருவரால் மட்டுமே முழுமையான ஒரு கட்டுமானத்தைத் திறம்படத் தர இயலும்.

நாலாம் நபர்

வீடு கட்டக்கூடிய மூவரைப் பற்றிப் பேசினோம். அந்த நாலாமவர் யார் என்ற கேள்வி உங்களுக்கு இந்நேரம் வந்திருக்கும். இந்த மூன்று பொறுப்புகளையும் ஒருவரே ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்தான் அந்த நான்காவது நபர். இது சவாலான பணி.

ஒரு மனிதன் தன் வாழ்வில் ஒரு வீடு கட்டுவதே இன்றைய சூழலில் மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது. அப்படிக் கட்டப்படும் வீடு குறைந்தபட்சம் இரண்டு, மூன்று தலைமுறைகள் காணக்கூடிய வகையில் தரமானதாக இருக்க வேண்டும். மிகுந்த பொருட்செலவைக் கோரும் இந்தக் கட்டுமான வேலையை மிகக் கவனமுடன் அணுகுவது அவசியம்.

வீடு கட்டக்கூடிய இந்த வேலையை அந்தத் தொழில் செய்யக்கூடிய முறையான நபர்கள் திறம்படச் செய்வார்கள் என்பதும் உண்மை. நம்முடைய நேரத்தை நம் தொழிலில்/வேலையில் செலவிடலாம்.

- கட்டுரையாளர், கட்டுமானப் பொறியாளர்
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in