Published : 10 Nov 2018 12:03 pm

Updated : : 10 Nov 2018 12:03 pm

 

கட்டிடங்களின் கதை 05: சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநகராட்சிக் கட்டிடம்

05

லண்டன் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது அரச குடும்பத்தினர் வசிக்கும் பக்கிங்காம் அரண்மனை, லண்டன் பாலம், ராட்சத ராட்டினமான லண்டன்-ஐ போன்றவைதாம். ஆனால், இந்த வரிசையில் தற்போது இடம்பிடித்துள்ளது தேம்ஸ் நதிக்கரை அருகே கட்டப்பட்டுள்ள சிட்டி ஹால் கட்டிடம். இந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தை வடிவமைத்தவர் உலகின் பிரத்திபெற்ற கட்டுமான வடிவமைப்பாளர் நார்மன் ஃபாஸ்டர்.

ஐஸ்கிரீம் விற்ற நார்மன்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நார்மன் ஃபாஸ்டர் நவீனக் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் ஏராளமான கட்டிடங்களை வடிவமைத்தவர். இங்கிலாந்து மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். தொழில் நகரமான மான்செஸ்டரில் 1935- ம் ஆண்டு பிறந்தவர் நார்மன் ஃபாஸ்டர். கடுமையான உழைப்பாளிகளான நார்மனின் பெற்றோர் அவர் சிறுவனாக இருந்தபோது, உழைப்பின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்துள்ளனர்.

தன்னுடைய பள்ளிக் காலத்தில் அவரால் மற்ற மாணவர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை. அதனால் அவர்களின் கேலிக்கு உள்ளான நார்மன் இடையிலேயே தன்னுடைய பள்ளிப் படிப்பைக் கைவிட நேர்ந்தது. அதன்பிறகு புத்தகங்களே நார்மனின் துணையாக மாறின.தன்னுடைய 16 வயதில் மான்செஸ்டர் நகரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த நார்மன் அதன்பிறகு ராயல் ஏர் ஃபோர்ஸில் இணைந்தார்.

பின்னர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கட்டிட வடிவமைப்பியல் படித்தார். தன்னுடைய படிப்புச் செலவுக்காகக் ஐஸ்கிரீம் விற்பனை, பார்களில் பவுன்சராகவேலை, இரவு நேரங்களில் அடுமனைகளில் வேலை போன்ற பல பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டார் நார்மன்.


தன்னுடைய நண்பர் ரிச்சர்டு ரோஜர்ஸீடன் சேர்த்து அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நார்மன். அதன்பிறகு இங்கிலாந்தில் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கட்டிட வடிவமைப்புப் பணியைத் தொடங்கினார். பிறகு வெண்டிசெஸ்மேன்யுடன் இணைந்து ஃபாஸ்டர் அண்டு பாட்னர்ஸ் என்ற நிறுவனத்தை 1967 - ம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

நார்மன் ஃபாஸ்டருக்குக் கட்டிடக் கலையின் நோபல் எனச் சொல்லப்படும் பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை விருது 1999-ம் ஆண்டு வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இவர் ஹாங்காங்கில் உள்ள எச்எஸ்பிசி-யின் தலைமைக் கட்டிடம், லண்டனின் வானுயரக் கட்டிடமான மேரி ஆக்ஸ், அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான ஆப்பிள் பார்க் உள்ளிட்ட முக்கியமான கட்டிடங்களை வடிவமைத்துள்ளார்.

குறைந்த கார்பன் டை ஆக்சைடு

இந்நிறுவனத்தின் சார்பில் கடந்த 1998- ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்டி ஹால் கட்டிடம், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 19,000 சதுர அடி பரப்பில் கட்டுப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 2,100 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ மெட்ரிகள் முறையில் சிட்டி ஹால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பகலில் பந்து போல் காட்சியளிக்கும் இந்தக் கட்டிடம் இரவில் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் தன்னுடைய பிரம்மாண்ட வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. பொதுவாக, வட்ட வடிவில் கட்டிடம் கட்டும்போது தேவைப்படும் பரப்பளவைவிட 25 சதவீதம் குறைவான பரப்பளவே இந்த ஜியோமெட்ரிக் கட்டிட முறைக் கட்டிடங்களுக்குத் தேவைப்படுகிறது. இதன் வெளிபுற கட்டுமானத்துக்கு மூன்றடுக்குக் கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்குக் 2002- ம் ஆண்டு திறக்கப்பட்டது. லண்டன் மேயர் அலுவலகம், லண்டன் சட்டமன்ற அரங்கு, லண்டன் பெருநகர அமைப்பு, பொதுமக்கள் பார்வையிட லண்டன் மாநகர் குறித்த கண்காட்சிஅரங்கு ஆகியவை இந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. லண்டன் நகரில் உள்ள மற்ற கட்டிடங்களுடன் ஒப்பிடும்போது சிட்டி ஹால் கட்டிடத்திலிருந்து வெளியேறும் கார்பன் டைஆக்சைடின் அளவு மிகவும் குறைவு.

இதற்கு முக்கியக் காரணம் சூரிய மின் தகடுகள் இந்தக் கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பதுதான். சூரிய வெளிச்சத்திலிருந்து பெறப்படும் மின்சாரம் சிட்டி ஹால் முழுவதும் உள்ள மின்சாரத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் மின்னழுத்தத் தேர்வுமுறை (voltage optimisation) என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் சிட்டி ஹாலில் குறைந்த அளவே மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 16 வாட்ஸ் கொண்ட எல்.ஈ.டி. விளக்குகளே கட்டிடத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

அதேபோல் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் மின்விளக்குள் தானே அணையும் தொழில்நுட்பம் இந்தக் கட்டிடத்தில் உள்ளது. அதேபோல் கட்டிடத்தின் வெப்ப அளவு அதிகமாவதைத் தடுக்கவும் புதிய தொழில்நுட்பம் கையாளப்படுகி்றது.

நிலத்தடி நீரில் ஏ.சி.

இதுபோன்ற கட்டிடங்கள் என்றாலே அதில் ஆளை உறையவைக்கும் ஏசிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்தக் கட்டிடத்தில் நிலத்தடி நீரையே காற்றுச் சீராக்கியாகப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் மின்சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டிடத்தில் குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி இரண்டுமே பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.

city-4jpg

நிலத்தடி நீர் ஆழ்துளைக் கிணற்று குழாயால் உறிஞ்சப்பட்டுக் கட்டிடத்தினுள் வைக்கப்பட்டுள்ள தூண்களின் வழியே அங்குள்ள அலுவலகங்களுக்கு குளிர் காற்றைத் தருகிறது. இந்தத் தண்ணீர் குளிர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் மறுசுழற்சி முறையில் கழிவறைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

கணினி, மின்விளக்குகளில் இருந்து வெளியேறும் வெப்பம் மீண்டும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதற்குப் பதில் காற்றோட்டமாக இருக்க திறந்த வெளி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்றைக்குப் பிரம்மாண்ட கட்டிடங்கள் பலவும் காடுகளை அழித்துச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்துக் கொண்டிருக்க சிட்டி ஹால் எதிர்காலத்துக்கு வழிகாட்டுகிறது.

கட்டிடங்களின் கதைகட்டிட வரலாறுமாநகராட்சி கட்டிடம்சுற்றுச்சூழல் கட்டிடம்பக்கிங்காம் அரண்மனைசிட்டி ஹால் கட்டிடம்London city hallNorman fosterFoster and Partners
Popular Articles

You May Like

More From This Category

More From this Author