

சிமெண்ட்டின் தேவை என்ன?
கட்டிடம் கட்டும்போது தேவையான வலிமையோடு பல்வேறு பொருட்களை இணைத்து ஒவ்வொரு பாகமும் வடிவமைக்கப்படுகிறது. உதாரணமாக, கட்டுவேலையில் (Brick Work) செங்கற்களைச் சேர்த்து வைக்கவும், காங்கிரீட்டில் மணல், ஜல்லி, கம்பி ஆகியவற்றைச் சேர்த்து ஒரு பொருளாக மாற்றவும் நமக்கு ஒரு பசை தேவைப்படுகிறது. அந்தப் பசைப்பொருள்தான் சிமெண்ட். சிமெண்ட்டின் வேலை அதனோடு கலக்கப்படும் பொருட்களை இணைத்துப் பிணைத்து வைத்திருப்பதுதான்.
சிமெண்ட்டின் வகைகள் என்ன?
ஓபிசி (OPC - ORDINARY PORTLAND CEMENT), பிபிசி (PPC-PORTLAND POZZOLANA CEMENT), பிஎஸ்சி (PSC -PORTLAND SLAG CEMENT) ஆகிய இந்த மூன்று வகை சிமெண்ட் இன்று பரவலாகக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிமெண்ட் வகை, ஓபிசி. இந்த வகையில் 33 கிரேடு, 43 கிரேடு மற்றும் 53 கிரேடு என்று மூன்று கிரேடு வகையில் உள்ளன.
33, 43 கிரேடு சிமெண்ட் வகை பொதுவாகக் கட்டுவேலை, பூச்சுவேலை, டைல்ஸ் பதித்தல் போன்ற வேலைகளுக்கும், 53 கிரேடு சிமெண்ட் கான்கிரீட் வேலைகளுக்குமாகப் பயன்படுத்தப்படுகிறது. பிபிசி, பிஎஸ்சி வகை சிமெண்ட்டில் இதைப் போன்று கிரேடு வகை கிடையாது.
சிமெண்ட் கிரேடு என்பது என்ன?:
சிமெண்ட்டும் மணலும் 1:3 என்ற விகிதத்தில் நன்கு கலக்கப்பட்டு 70.6 எம்.எம். X 70.6 எம்.எம். X 70.6 எம்.எம். அளவிலான கலவை க்யூப் (Cube) செய்யப்படுகிறது. இந்த க்யூப் (Cube) 28 நாட்கள் முறையாக க்யூரிங் (Curing) செய்யப்பட்டு அதனுடைய தாங்கும் திறன் பரிசோதிக்கப்பட்டு எந்த அழுத்தம் வரையில் அது உடையாமல் இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
33 M/Sq.mm. வரையில் அதனுடைய தாங்கும் திறன் இருந்தால் அந்த சிமெண்ட் 33 கிரேடு என்று அடையாளப்படுத்தப் படுகிறது. இதைப் போன்றே 43 கிரேடு மற்றும் 53 கிரேடு என சிமெண்ட் வகைப்படுத்தப்படுகின்றது.
பிபிசி சிமெண்ட் என்பது என்ன?
சிமெண்ட் தயாரிப்பில் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. அதைப் போன்றே சிமெண்ட்டின் பயன்பாடும் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்றைய சூழல் உள்ளது. சிமெண்ட்டின் அடிப்படைத் தன்மை மாறாமல் இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அறிவியல் பரிசோதனைகள் நடைபெற்றே வந்தன.
எரிசாம்பலைக் (Fly Ash) குறிப்பிட்ட அளவு கலக்கும்போதும் சிமெண்ட் அதற்குரிய தன்மையிலிருந்து மாறாதவரை அதை நாம் பயன்படுத்தலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, பல சோதனைகள் அடிப்படையில் எந்த அளவுவரை கலக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இன்றைய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அந்த அடிப்படை வரைமுறையின் அளவில் எரிசாம்பலைக் கலந்து சிமெண்ட் தயாரிக்கிறார்கள். அந்த சிமெண்ட் தான் பிபிசி என்றழைக்கப்படுகிறது. இந்த எரிசாம்பல் இயற்கையிலோ தொழிற்சாலைகளில் இறுதிப் பொருளாகவோ கிடைக்கிறது.
பிஎஸ்சி சிமெண்ட் என்பது என்ன?
இந்த எரிசாம்பலைக் கலப்பதைப் போலவே வேறு என்னென்ன மாற்றுப் பொருட்களைக் கலப்பதன் மூலம் சிமெண்ட்டின் தன்மை மாறாமல் நமக்கு கிடைக்கும் என்ற தொடர் சோதனை நடந்து வந்தது. இரும்பு ஆலைகளில் கம்பி, இதர பொருட்கள் தயாரிக்கும்போது இறுதியில் கிடைக்கக்கூடிய பெரிய அளவு பயன்பாடு இல்லாத இரும்புத் துகள்களை மேலும் அரைத்துப் பொடியாக்கி, எரிசாம்பலுக்குப் பதிலாக சிமெண்ட் உடன் கலப்பதன் மூலமும் சிமெண்ட் தயாரிக்கலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை சிமெண்ட் பிஎஸ்சி என்று அழைக்கப்படுகிறது.
எந்த சிமெண்ட் நல்லது?
இன்றைய சூழலில் நமக்கு பிபிசி பரவலாகக் கிடைக்கிறது. ஓபிசி சிமெண்ட்டை விட மற்ற இரண்டு சிமெண்ட் வகையும் விலை குறைவாகச் சந்தையில் கிடைக்கின்றன. முறையான தர வழிகாட்டுதலின்படி தொழிற்சாலைகளில் தயாராகிவரும் சிமெண்ட்டைப் பயன்படுத்தப்படுவதில் தொழில்நுட்பரீதியாக எந்தத் தடையும் இல்லை.
நாம் என்ன செய்ய வேண்டும்?
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு விதமான முயற்சிகள் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டே வருகின்றன. அதையொட்டி எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாமும் கரம் கோக்க வேண்டும். நம்முடைய வீடு கட்டப்படுவது தரமாக அமைவது என்பது எப்படிப்பட்ட தரமான பொருட்களை வாங்குகிறோம் என்பதைப் பொறுத்ததாக மட்டும் அமையாது. அவற்றை எப்படி முறையாகப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.
வேலை செய்யும் இடங்களில் ஒவ்வொரு வேலைக்கும் தகுந்தவாறு உள்ள விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சிமெண்ட் கலவையோ கான்கிரீட் கலவையோ அமைக்கப்படுவதை உறுதிப்படுவதன் மூலமாக மட்டும்தான் நாம் கட்டிடத்தின் தரத்தை உறுதிப்படுத்த இயலும். கவனத்துடன் செயல்படுவோம்.
கட்டுரையாளர், கட்டுநர்,
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com