

தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாடுபவர்கள் மேலும் மேலும் ‘ஸ்மார்ட்’ ஆகி வருகிறார்கள். எனவே, வீட்டு உபயோகப் பொருட்களும் மிகவும் ஸ்மார்ட் ஆகி வருகின்றன.
செல்போனில் மட்டுமல்ல, நினைத்துப் பார்த்திராத விஷயங்களில் எலலாம் ஸ்மார்ட் அறிமுகமாகிவிட்டது. அழைப்பு மணியும் அவற்றுள் ஒன்று.
அழைப்பு மணி என்றால் என்ன? கதவுக்கு வெளியே ஒரு சுவிட்ச் இருக்கும். அதை அழுத்தினால் உள்ளே ஒலி கேட்கும். அதைக் கேட்டதும் உள்ளிருப்பவர் வந்து கதவைத் திறப்பார். இதுதான் நெடுங்காலமாக நாம் அறிந்து வைத்திருக்கும் அழைப்பு மணி. இதில் எந்தவகை ஒலி தேவை, அது எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் ஆகியவற்றைத் தீர்மானித்து அதற்கேற்ற அழைப்பு மணியைத் தேர்ந்தெடுப்போம்.
ஆனால், சமீபகாலமாக ஸ்மார்ட் அழைப்பு மணிகள் அறிமுகமாகிவிட்டன. வெளியில் இருப்பவர் அழைப்பு மணிக்கான சுவிட்சை அழுத்தியதும் வீட்டுக்குள் ஒலி கேட்பதோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு திரையில் வெளியில் இருப்பவரின் உருவமும் தெரியும். அவரோடு நீங்கள் உங்கள் வீட்டுக்குள்ளே இருந்தபடியே உரையாடவும் முடியும்.
நீங்கள் கதவைத் திறக்கவே தேவை யில்லாதபோது திறக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் ஒருபடி அதிகம் சென்று அழைப்பு மணி இணைப்பு உங்கள் செல்போனுக்கே கொடுக்கப்படவும் வாய்ப்பு உண்டு. அப்போது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வந்திருப்பது யார் என்பதை அறிந்து கொண்டு முடிவெடுக்கலாம். பெரிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு இது ஒரு வரம். மாடி வீடுகளில் வசிப் பவர்களுக்கு இது பெரிய வரம். மூட்டு வலி போன்றவற்றால் சிரமப்படு பவர்களுக்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் மிகவும் கைகொடுக்கும்.
கதவுக்கு வெளியே நிற்பவர்களை மேல்தளத்தின் உட்புறம் இருந்தபடியே கவனித்து அவர்களை உள்ளே வரவிடத் தீர்மானித்த பிறகு மேலிருந்து ஒரு பொத்தானை அழுத்தினால் வெளிக் கதவு திறக்கும். உள்ளே நுழைந்ததும் அவர்கள் கதவைத் தாழிட வேண்டும். பின் அவர்கள் மேலே வரலாம்.
ஸ்மார்ட் அழைப்பு மணிகளைப் பொருத்த அப்படியொன்றும் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை (பணத்தைச் சொல்லவில்லை, நேரத்தைச் சொல்கிறோம்). எனினும் கேமரா, ஸ்பீக்கர், மைக்ராஸ்கோப் ஆகியவற்றையும் சேர்த்து நிறுவ வேண்டியிருக்கும்.
இவ்வளவு சிக்கலான தொழில்நுட்பமெல்லாம் வீட்டுக்கு வருபவர்களுக்கு எப்படித் தெரியும் என்று யோசிக்க வேண்டியதில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அழைப்பு மணி சுவிட்சை அடிக்க வேண்டும், அவ்வளவே. கதவுக்கு வெளியே நிற்பவர் குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் கதவைத் திறக்க வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல, வெளியில் நிற்பவரை வீட்டுக்குள் இருந்தபடியே ஒளிப்படப் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.
மேலும் ஒருபடி முன்னேறிய அழைப்பு மணிகளும் உள்ளன. இதன் மூலம் நீங்கள் வீட்டில் இல்லாதபோதும் விருந்தினர் வந்து அழைப்பு மணியை அடித்தால் வெளியிடங்களில் உங்கள் செல்போனைப் பார்த்து உறுதி செய்து கொண்டு அங்கிருந்தபடியே உங்கள் வீட்டுக் கதவைத் திறந்து விடலாம். பாதுகாப்புக் குறைவோ என்று சந்தேகப்படுபவர்களிடம் ‘ஸ்மார்ட் அழைப்பு மணிதான்’ பாதுகாப்பில் சிறந்தவை என்று கூறுகின்றன அந்நிறுவனங்கள்.